சீரற்ற காலநிலையால் நான்கு நாள் போட்டி சமநிலையில் முடிவு

Sri Lanka Emerging Team Tour of England 2022

59
Sri Lanka Emerging Team Tour of England 2022

சுற்றுலா இலங்கை வளர்ந்துவரும் பதினொருவர் அணிக்கும், ஹெம்ஷையர் கிரிக்கெட் கழகத்துக்கும் இடையில் நடைபெற்ற நான்கு நாட்கள் கொண்ட போட்டி சமநிலையில் முடிந்தது.

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்துவரும் அணி, நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் சந்தூஷ் குணதிலக்க ஆகிய இருவரினதும் அரைச்சதங்களின் உதவியுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஹெம்ஷையர் அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 252 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இந்த நிலையில், தொடர்ச்சியான மழை காரணமாக மூன்றாவது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. எனவே, 5 விக்கெட் இழப்புக்கு 252 ஓட்டங்களை எடுத்திருந்த ஹெம்ஷையர் அணி, போட்டியின் கடைசி நாளான நேற்று தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்தி, இலங்கை வளர்ந்துவரும் பதினொருவர் அணியை இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட அழைத்தது.

இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸை பொறுத்தவரை மொத்த ஓட்ட எண்ணிக்கை 6 ஆக இருக்கும்போது ஹெரி பீட்டர்ஸின் பந்துவீச்சில் அணித்தலைவர் நிபுன் தனன்ஞய 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எனினும், நிஷான் மதுஷ்க மற்றும் லசித் க்ருஸ்புள்ளே ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு 63 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தனர். இதில் க்ரூஸ்புள்ளே அரைச்சதத்தை நெருங்கிய போது டொமினிக் கெல்லியின் பந்துவீச்சில் 43 ஓட்டங்களை எடுத்து துரதிஷ்டவசமாக ஆட்டமிழக்க, நிஷான் மதுஷ்க 29 ஓட்டங்களுடன் பெவிலியின் திரும்பினார்.

இதனிடையே, தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக மதிய உணவுக்குப் பிறகு ஆட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க முடியவில்லை. இதன்படி, நேற்றைய (16) கடைசி நாள் ஆட்ட நேர முடிவில் தமது இரண்டாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 3 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்களை எடுத்திருந்தது.

அத்துடன். இலங்கை வளர்ந்துவரும் பதினொருவர் அணி ஹெம்ஷையரை விட 136 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

நுவனிந்து பெர்னாண்டோ 2 பௌண்டரிகளுடன் 14 ஓட்டங்களையும், தனன்ஞய லக்ஷான் 10 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது எடுத்திருந்தனர்.

இதேவேளை இலங்கை வளர்ந்துவரும் பதினொருவர் அணிக்கும், சர்ரே கழகத்துக்கும் இடையிலான நான்கு நாள் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) ஆரம்பமாகவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<