4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை தெறிக்கவிட்ட ஷஹீன் ஷா அப்ரிடி

2326
Shaheen Shah Afridi

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் விட்டாலிட்டி பிளாஸ்ட் T20 கிரிக்கெட் தொடரின் நேற்று (20) நடைபெற்ற போட்டியில் ஹாம்ப்ஷெயர் அணிக்காக விளையாடிவரும் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

>> இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராகும் ரங்கன ஹேரத்

இங்கிலாந்தின் 18 கழகங்கள் பங்கேற்கும் விட்டாலிட்டி பிளாஸ்ட் T20 தொடரானது கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி முதல் இரசிகர்கள் இன்றிய மூடிய அரங்கில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள குறித்த தொடரில் சவுதம்டணில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் தெற்கு குழுவின் புள்ளிப் பட்டியலில் இறுதி இடத்தில் (ஆறாவது) காணப்படும் ஜேம்ஸ் வின்ஸ் தலைமையிலான ஹாம்ப்ஷெயர் அணியும், நான்காமிடத்தில் காணப்படும் ஸ்டீவன் பின் தலைமையிலான மிடில்ஸெக்ஸ் அணியும் மோதின. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹாம்ப்ஷெயர் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் சாம் நோர்த்ஈஸ்ட் 31 ஓட்டங்களையும், இயன் ஹோல்லன்ட் மற்றும் டொம் அல்சொப் ஆகியோர் தலா 25 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றனர்.  

மிடில்ஸெக்ஸ் அணியின் பந்துவீச்சில் கன்னி T20 போட்டியில் விளையாடிய இலங்கையை பிறப்பிடமாக கொண்ட திலான் நிபுன வலல்லவிட்ட 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், நதன் சௌடர் 3 விக்கெட்டுகளையும் அதிகபட்ச விக்கெட்டுகளாக வீழ்த்தினர். 

பின்னர், 142 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மிடில்ஸெக்ஸ் அணி, வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18 ஓவர்கள் நிறைவில் 121 ஓட்டங்களுக்கு சுருண்டு போனது. 

>> “மாலிங்கவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது“ – ரோஹித் சர்மா

இதன் மூலம் ஹாம்ப்ஷெயர் அணி 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. துடுப்பாட்டத்தில் ஜோன் சிம்ப்சன் 48 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றுக்கொண்டார். ஹாம்ப்ஷெயர் அணியின் பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்ரிடி 18ஆவது ஓவரில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தியது மாத்திரமல்லாமல் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் போட்டியில் மொத்தமாக 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஷஹீன் ஷா அப்ரிடி 18ஆவது ஓவரின் மூன்றாவது பந்துவீச்சில் ஜோன் சிம்ப்சன், நான்காவது பந்துவீச்சில் அணித்தலைவர் ஸ்டீவன் பின், ஐந்தாவது பந்துவீச்சில் திலான் நிபுன வலல்லவிட்ட மற்றும் ஆறாவது பந்துவீச்சில் டிம் முர்தக் ஆகியோரை ஆட்டமிழக்க செய்து இவ்வாறு 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  

போட்டியில் ஷஹீன் ஷா அப்ரிடி வீழ்த்திய மொத்த 6 விக்கெட்டுகளும் போல்ட் முறையில் வீழ்த்தப்பட்டமை விசேட அம்சமாகும். இதன் மூலம் போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் ஷஹீன் ஷா அப்ரிடி வென்றார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<