இலங்கையில் அறிமுகமாகும் Lanka T10 லீக் தொடர்

348

T10 குளோபல் ஸ்போர்ட்ஸ் (T-Ten Global Sports) நிறுவனத்துடன் இணைந்து இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்துள்ள அங்குரார்ப்பண T10 கிரிக்கெட் (Lanka T10) தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இலங்கையில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

சினமன் லேக்சைட் ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இதுதொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆறு ஆண்கள் அணிகள் மற்றும் நான்கு பெண்கள் அணிகள் பங்குபற்றவுள்ள இந்தப் போட்டித் தொடரானது 12 நாட்கள் நடைபெறவுள்ளது. அத்துடன், ஒவ்வொரு அணியிலும் 10 உள்நாட்டு வீரர்களும், 6 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெறவுள்ளனர்.

உலகம் முழுவதும் நடைபெற்றுவரும் பல்வேறு லீக் கிரிக்கெட் போட்டிகளைப் போன்று Lanka T10 கிரிக்கெட் போட்டியிலும் சர்வதேச தரம்வாய்ந்த, புகழ்பெற்ற வெளிநாட்டு வீரர்கள் பங்குபற்றவுள்ளனர். அதேபோல, Lanka T10 கிரிக்கெட் தொடர் இலங்கையில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதற்கான சிறந்த களமாக இருக்கும் என இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா நம்பிக்கை வெளியிட்டார்.

Lanka T10 கிரிக்கெட்டை இலங்கையில் அறிமுகப்படுத்துவது குறித்து கருத்து வெளியிட்ட T-Ten Global Sports நிறுவன அதிபர் ஷாஜி உல் மலிக், ”உலகில் மிகவும் வேகமான கிரிக்கெட் வடிவமான Lanka T10 லீக் கிரிக்கெட் தொடரை இலங்கையில் அறிமுகப்படுத்துவதையிட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த வடிவிலான கிரிக்கெட் போட்டியை ஐசிசியில் முழுமையான அந்தஸ்துடைய கிரிக்கெட் சபை ஒன்று முதன்முதலாக நடத்தவிருப்பது விசேட அம்சமாகும். இந்தப் போட்டித் தொடரை ஆரம்பிக்கும் போது நாங்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய சவால் சர்வதேச அளவில் இது அங்கீகரிக்கப்பட்டவில்லை. ஐசிசி இன் பூரண அங்கத்துவத்தைக் கொண்ட 3 நாடுகள் இந்தப் போட்டித் தொடரை அனுமதிக்க வேண்டும். அதேபோல, தமது வீரர்களை அனுமதிக்க வேண்டும்.

உண்மையில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு நாங்கள் எப்போதும் கடன் பட்டுள்ளோம். ஏனென்றால் அவர்கள்தான் எங்களுக்கு அனுமதி அளித்த ஐசிசி இன் முதல் அங்கத்துவ நாடு. எனவே, இலங்கை கிரிக்கெட் சபைக்கு நன்றி, கிரிக்கெட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு வடிவமாக நாங்கள் சீராக முன்னேறி வருகிறோம். குறிப்பாக, கடந்த ஆண்டு அபுதாபி T10 லீக் தொடரின் மூலம் 500 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுடன் 400 சதவீத வளர்ச்சியைப் பெற்றோம்” என தெரிவித்தார்.

T-Ten Global Sports நிறுவனமானது கடந்த 6 ஆண்டுகளாக அபுதாபி T10 லீக் தொடரை வெற்றிகரமாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அடுத்த ஆண்டு ஜுன் மாதம் Lanka T10 தொடர் கண்டி அல்லது ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து லங்கா பிரீமியர் லீக் T20 (LPL) தொடர் டிசம்பரில் நடைபெறும்.

Photos – Media Brief Lanka T10

எவ்வாறாயினும், 2024 முதல் லங்கா பிரீமியர் லீக்கை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஆகஸ்ட் மாதம் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை எதிர்பார்துள்ளது. அதேபோல, அபுதாபி T10 இல் பங்கேற்கும் அதே வீரர்களை ஈர்க்கும் நோக்கில் லங்கா T10 தொடரை நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் ஆரம்பத்தில் நடத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை, Lanka T10 கிரிக்கெட் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், இலங்கை ஒருநாள் மற்றும் T20i அணிகளின் தலைவர் தசுன் ஷானக ஆகியோரும் கலந்து கொண்டனர்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<