பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு 2 வெள்ளிப் பதக்கங்கள்  

240
Commonwealth youth games

பஹாமாஸ், நசௌவ்வில் நிறைவுக்கு வந்த 6ஆவது பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் இலங்கை நீச்சல் வீரர் கைல் அபேசிங்க, 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றெடுத்தார். இதன்மூலம் இம்முறை போட்டித் தொடரில் பங்கேற்ற 28 இலங்கை வீரர்கள் சார்பாகவும் தொடர்ச்சியாக 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமையைப் பெற்றுக்கொடுத்த ஒரேயொரு வீரராகவும் கைல் வரலாற்றில் இடம்பிடித்தார்.

எனவே, 14 முதல் 18 வயதுக்குட்பட்ட வீர வீராங்கனைகளுக்காக 5 நாட்களாக நடைபெற்ற பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் பங்கேற்ற 64 நாடுகளில், இரண்டு வெள்ளிப் பதக்கங்களுடன் இலங்கை 23ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

ஆண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சல் (ப்றீ ஸ்டைல்) போட்டியில் பங்கேற்ற கைல் அபேசிங்க, அப் போட்டியை 23.38 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அப் போட்டியில் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் மெக்லே (23.10 செக்.) தங்கப் பதக்கத்தை வென்றார். எனினும், கைல் அபேசிங்கவுடன் இப்போட்டியின் முதல் சுற்றில் கலந்துகொண்ட மற்றுமொரு இலங்கை வீரரான அகலங்க பீரிஸ், போட்டியை 24.28 செக்கன்களில் நிறைவுசெய்து 14ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் 28 இலங்கை வீரர்கள் பங்கேற்பு

எதிர்வரும் 23ஆம் திகதி வரை மேற்கிந்திய தீவுகளின் பஹாமாஸ் தீவுகளில் நடைபெறவுள்ள 6ஆவது பொதுநலவாய நாடுகளின் இளையோர் விளையாட்டு…

இந்நிலையில், முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியிலும் கைல் அபேசிங்க (50.93 செக்.) வெள்ளிப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைக்காலமாக நீச்சல் அரங்கில் சர்வதேச அளவில் இலங்கைக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்து வருகின்ற அபேசிங்க குடும்பத்தின் உறுப்பினரான கைல் அபேசிங்கவின் மூத்த சகோதரரான மெத்யூ அபேசிங்க, கடந்த வருடம் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்காக 7 தங்கப் பதக்கங்களை வென்று புதிய சாதனையும் படைத்திருந்தார்.

ஷெஹானுக்கு 4ஆவது இடம்

ஆண்களுக்கான 110 மீற்றர் தடைதாண்டல் போட்டியில் கலந்துகொண்ட மருதானை புனித ஜோசப் கல்லூரியின் ஷெஹான் திலூஷ காரியவசம் போட்டியை 13.93 செக்கன்களில் நிறைவுசெய்து தனது தனிப்பட்ட சிறந்த காலப்பதிவை மேற்கொண்டதுடன், 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். எனினும், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட தகுதிகாண் போட்டிகளில் 14.06 செக்கன்களில் குறித்த போட்டியை நிறைவுசெய்து புதிய தேசிய சாதனை நிலைநாட்டிய அவர், மீண்டும் அதே போட்டியில் சிறந்த காலத்தைப் பதிவுசெய்தார்.

இதேவேளை, ஆண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டலில் பங்கேற்ற நவோத்ய சங்கல்ப (காலி மஹிந்த கல்லூரி) 54.18 செக்கன்களில் போட்டித்தூரத்தை நிறைவுசெய்து 5ஆவது இடத்தையும், பெண்களுக்கான 400 மீற்றர் தடைதாண்டல் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட காவிந்தியா தத்சரணி போட்டியை ஒரு நிமிடமும் 02.77 செக்கன்களில் நிறைவுசெய்து 5ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

20 வயதுக்கு உட்பட்ட ஆசிய எழுவர் ரக்பி தொடருக்கான இலங்கை குழாம் இதுதான்

இலங்கை ரக்பி அணியின் தேர்வாளர்கள், அடுத்த மாதம் ஹொங்கொங்கில் நடைபெறவுள்ள 20 வயதுக்கு உட்பட்ட ஆசிய எழுவர் (Sevens) ரக்பி தொடரில்…

இந்நிலையில் பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதியில் கலந்துகொண்ட சச்சினி தாரகா திவ்யாங்ஞலி (வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை) 26.60 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 5ஆவது இடத்தையும், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கலந்துகொண்ட பிரமோத் மதுபாஷ பெரேரா (நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரி), 6 மீற்றர் தூரம் பாய்ந்து 9ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

ஜுடோவில் இலங்கை வீரர்கள் ஏமாற்றம்

பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழா வரலாற்றில் முதற்தடவையாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள ஜுடோ போட்டிகளின் முதல் சுற்றுப் போட்டிகள் 18ஆம் திகதி நடைபெற்றன.

இதில் இலங்கை சார்பாக இருவர் பங்கேற்றிருந்தனர். 60 கிலோ கிராம் எடைப்பிரிவிற்காக ஆண்கள் பிரிவில் சூரிய துஷார கஸ்தூரிஆரச்சியும் (நாவலப்பிட்டடிய அநுருத்த குமார தேசிய பாடசாலை), 57 கிலோ கிராம் எடைப்பிரிவிற்காக பெண்கள் பிரிவில் ஹப்சா யாமினாவும்(கம்பளை ஜோசப் மகளிர் கல்லூரி) போட்டியின்றி முதல் சுற்றில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.

எனினும், காலிறுதிப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் கலந்துகொண்ட சூரிய துஷார கஸ்தூரிஆரச்சி, வேல்ஸ் வீரர் பெனட் கொல்லமிடம் 10-0 எனவும், இங்கிலாந்து வீரர் செய்ன் ஹெரியிடம் 12-0 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் தோல்வியைத் தழுவி அரையிறுதி வாய்ப்பை இழந்தார்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரட்ன

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஹஷான் திலகரட்ன, இந்தியாவுடன் இடம்பெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட்…

அத்துடன் பெண்கள் பிரிவில் கலந்துகொண்ட ஹப்சா யாமினா, இந்திய வீராங்கனை ரெபினா தேவியிடம் 11-1 எனவும், அதன்பின் பஹாமாஸ் வீராங்கனை பெனிபை மையாவிடம் 10-0 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் தோல்வியைத் தழுவி அரையிறுதி வாய்ப்பை நழுவவிட்டார்.

இந்நிலையில், எழுவர் றக்பியில் பஹாமாஸ் அணியை வீழ்த்தி 5ஆவது இடத்தை இலங்கை றக்பி அணி பெற்றுக்கொள்ள, குத்துச்சண்டை, டென்னிஸ், ஆகியவற்றின் காலிறுதிப் போட்டிகள் வரை இலங்கை வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் போட்டிகளின் நிறைவில், 23 தங்கப் பதக்கங்களுடன் இங்கிலாந்து முதலிடத்தையும், 14 தங்கங்களை வென்ற அவுஸ்திரேலியா 2ஆவது இடத்தையும், 8 தங்கப் பதக்கங்களை வென்ற நியூசிலாந்து 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டதுடன், பிரபல இந்திய அணி 4 தங்கங்களுடன் 7ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.