மே.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி

Sri Lanka Emerging Team tour of West Indies 2025

68

இலங்கையின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 

அதன்படி, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இரண்டு உத்தியோகபூர்வமற்ற நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளும், மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெறவுள்ளது. 

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி ஜூன் 7 ஆம் திகதியும், இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி ஜூன் 14 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. இந்த 2 போட்டிகளும் கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் ஜூன் 21 ஆம் திகதி சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் முறையே ஜூன் 24 மற்றும் 26 ஆகிய திகதிகளில் அதே மைதானத்தில் நடைபெறும் 

இதேவேளை, இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கெட் அணி ஜூன் 2 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளை நோக்கி புறப்பட்டுச் செல்லவுள்ளதுடன், ஜூன் 27 ஆம் திகதி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது 

இது இவ்வாறிருக்க, மேற்கிந்திய தீவுகள் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இலங்கையைச் சேர்ந்த ரமேஷ் சுபசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும் 

போட்டி அட்டவணை 

  • ஜூன் 7 – 10: முதல் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட்; போட்டி (கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானம்) 
  • ஜூன் 14 – 17: இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட்; போட்டி (கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானம்) 
  • ஜூன் 21: முதல் ஒருநாள் போட்டி (சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம்) 
  • ஜூன் 24: இரண்டாவது ஒருநாள் போட்டி (சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம்) 
  • ஜூன் 26: மூன்றாவது ஒருநாள் போட்டி (சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானம்) 

    >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<