போலந்து மெய்வல்லுனர் போட்டியில் சாரங்கிக்கு ஆறாமிடம்

120

உலக மெய்வல்லுனர் கண்டங்களுக்கிடையிலான சுற்றுத் தொடரின் தங்கப் பிரிவின் கீழ் போலந்தில் நேற்று (05)  நடைபெற்ற 68th ORLEN Janusz Kusociński Memorial Meet 2022 மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான நீளம் பாய்தலில பங்குகொண்ட இலங்கையின் சாரங்கி சில்வா ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

குறித்த போட்டியில் அவர் 6.35 மீட்டர் தூரம் பாய்ந்து திறமையை வெளிப்படுத்தி, உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கான புள்ளிகளைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், செர்பியாவின் மிலிகா கர்தசெவி 6.81 மீட்டர் தூரம் பாய்ந்து முதலிடத்தைப் பிடித்தார்.

பெண்களுக்கான நீளம் பாய்தலில் தேசிய சம்பியனான சாரங்கி சில்வா, அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வந்தார். ஆனால், கடைசியாக சில போட்டிகளுடன் ஒப்பிடும்போது இந்தப் போட்டியில் சாரங்கி சில்வாவின் திறமை வெளிப்பாடு சற்று குறைவாகவே காணப்பட்டது.

எவ்வாறாயினும், இந்தப் போட்டித் தொடரானது உலக மெய்வல்லுனர் கண்டங்களுக்கிடையிலான சுற்றுத் தொடரின் தங்கப் பிரிவில் இடம்பிடித்திருப்பதால் அதில் அவர் ஆறாவது இடத்தைப் பெற்றுக்கொண்டதன் மூலம் கிடைத்த போனஸ் புள்ளிகள் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறுவதற்கு மேலும் வலுச்சேர்க்கவுள்ளது.

எனவே, இந்த போட்டியில் கிடைத்த 80 போனஸ் புள்ளிகளுடன், தற்போதைய உலக தரவரிசையில் முதல் 40 இடங்களுக்குள் அவர் இடம்பிடித்துள்ளார். ஆனால், உலக தரவரிசையில் முதல் 32 இடங்களுக்குள் இடம்பிடித்த வீராங்கனைகளுக்கு மாத்திரம் தான் உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு நேரடியாக தகுதி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

இதனிடையே, சாரங்கி சில்வாவின் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் மேலும் இரண்டு போட்டிகள் சுவிட்சர்லாந்தில் நடைபெற உள்ளது. எனவே, அந்தப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில், அவருக்கு உலக சம்பியன்ஷிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொள்ள முடியும்.

பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் தெற்காசிய சம்பியனான சாரங்கி, இந்த ஆண்டு இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<