ஒலிம்பிக் சம்பியன் யொஹான் பிளேக்குக்கு சவால் விடுத்த யுபுன்

198

உலக மெய்வல்லுனர் கண்டங்களுக்கிடையிலான சுற்றுத் தொடரின் தங்கப் பிரிவின் கீழ் செக் குடியரசில் நடைபெற்ற ‘ஒஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் 2022 (Ostrava Golden Spike 2022) மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் பங்குகொண்ட இலங்கை வீரர் யுபுன் அபேகோன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

ஜமைக்காவின் யொஹான் பிளேக், தென்னாபிரிக்காவின் அகானி சிம்பைன் உள்ளிட்ட உலகின் பலம் வாய்ந்த முன்னணி வீரர்கள் பங்குகொண்ட இப்போட்டியை யுபுன் அபேகோன் 10.08 செக்கன்களில் நிறைவு செய்தார். அத்துடன் காற்றின் வேகம் -1.2 எதிர்த்திசையில் இருந்ததால் அவரது இந்த நேரப் பெறுமதி பெரும் பாராட்டைப் பெற்றது.

குறித்த போட்டியில் இங்கிலாந்தின் ரீஸ் ப்ரெஸ்கோட் 9.93 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து முதலிடத்தைப் பிடிக்க, ஜமைக்காவின் நட்சத்திர வீரரும், உலகின் 2ஆவது அதிவேக வீரருமான யொஹான் பிளேக் (10.05 செக்.) இரண்டாவது இடத்தையும், இங்கிலாந்தின் சார்னல் ஹியூஸ் (10.05 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் தொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற யுபுன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் நடைபெற்ற ஆன்ஹோல்ட் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை 10.06 செக்கன்களில் கடந்து தனது சொந்த இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்தார்.

அதற்கு முன் கடந்த 18ஆம் திகதி இத்தாலியில் நடைபெற்ற Savona International 2022 போட்டித் தொடரில் பங்குகொண்ட யுபுன், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியை 10.04 செக்கன்களில் நிறைவு செய்தார்.

எனினும், காற்றின் வேகத்திசைகாட்டியின் வாசிப்பு அனுமதிக்கப்பட்ட அளவினை விட +2.4 அதிகமாக இருந்த காரணத்தினால் யுபுன் அபேகோனின் நேரப் பெறுமதி சாதனையாக கருதப்பட்டிருக்கவில்லை.

மாறாக, குறித்த நேரப் பெறுமதியானது இலங்கை வீரர் ஒருவரினால் எந்தவொரு காலநிலையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிசிறந்த நேரப் பெறுமதியாக இடம்பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனவே, மெய்வல்லுனர் அரங்கில் சிறந்த நேரப் பெறுமதியுடன் அடுத்தடுத்து சாதனைகளை படைத்து வருகின்ற யுபுன், உலக மெய்வல்லுனர் தரவரிசையில் முன்னேற்றம் பெற்றால் எதிர்வரும் ஜுலை மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

இதேவேளை, யுபுன் அபேகோன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 100 மீட்டர் போட்டிக்கு மேலதிகமாக 150 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளிலும் பங்குகொண்டு சாதனைகளை முறியடித்திருந்தார்.

இதில் 150 மீட்டர் போட்டியை 15.16 செக்கன்களில் நிறைவு செய்து ஆசிய சாதனையை முறியடித்த அவர், இத்தாலியில் கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற 12ஆவது கெஸ்டிக்லியோன் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்டு 200 மீட்டர் ஓட்டப் போட்டியை 20.37 செக்கன்களில் கடந்து இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்தார்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<