சர்வதேச மெய்வல்லுனர் தொடர்களில் இலங்கை வீரர்கள்

148

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு இலங்கையின் முன்னணி மெய்வல்லுனர் வீரர்களை சர்வதேச மெய்வல்லுனர் தொடர்களில் பங்குபற்றச் செய்ய இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை அமெரிக்காவின் ஒரிகனில் நடைபெறவுள்ளதுடன், குறித்த தொடரிற்கு தகுதி பெறுவதற்கான கடைசி திகதி ஜுன் 26ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த தொடரிற்கு தகுதி பெறும் நோக்கில் உலகில் உள்ள அனைத்து மெய்வல்லுனர் வீரர்களும் மும்முரமாக தயாராகி வருகின்ற அதேவேளை, அதனை முன்னிட்டு உலகின் பல்வேறு பாகங்களிலும் மெய்வல்லுனர் போட்டித் தொடர்களும் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு சர்வதேச மெய்வல்லுனர் சங்கத்தின் ஏற்பாட்டில் கண்டங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் தொடர் என்ற பெயரில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டித் தொடர்களும், டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடரும் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், இலங்கை மெய்வல்லுனர் சங்கமும் இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு அதற்கான அடைவு மட்டத்தினை நெருங்கியுள்ள ஒருசில வீரர்களை தற்போது நடைபெற்று வருகின்ற முன்னணி சர்வதேச மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் பங்குபெறச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, பெண்களுக்கான நீளம் பாய்தலில் தெற்காசிய சம்பியனும், நடப்பு தேசிய சம்பியனுமான சாரங்கி டி சில்வா நேற்று (02) ஆஸ்திரியாவில் நடைபெற்ற ஆஸ்திரியா பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். எனினும், நேற்று இரவு நடைபெற்ற பெண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட அவர் முதல் மூன்று முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவி முதல் சுற்றுடன் வெளியேறினார்.

எவ்வாறாயினும், உலக மெய்வல்லுனர் கண்டங்களுக்கிடையிலான சுற்றுத் தொடரில் தங்கப் பிரிவின் ஓர் அங்கமாக எதிர்வரும் 5ஆம் திகதி போலந்தில் நடைபெறவுள்ள 68th Orlen Janusz Kusocinski Memorial meet  மெய்வல்லுனர் தொடரில் சாரங்கி டி சில்வா பங்கேற்கவுள்ளார்.

எதிர்வரும் ஜுலை மாத இறுதியில் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவிற்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ள சாரங்கிக்கு இந்த ஆண்டு உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற, உலக தரவரிசையில் முதல் 40 இடங்களுக்குள் இடம்பிடிக்க வேண்டும்.

இதனையடுத்து அவர் எதிர்வரும் ஜுன் மாதம் 11ஆம் திகதி சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள 34th International Athletic Meet போட்டித் தொடரில் பங்குபற்றவுள்ளார். அத்துடன், குறித்த போட்டித் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈட்டி எறிதல் வீரர் சுமேத ரணசிங்க, 400 மீட்டர் தேசிய சம்பியன் காலிங்க குமாரகே மற்றும் மத்திய தூர ஓட்ட வீராங்கனை கயன்திகா அபேரட்ன ஆகிய மூவரும் பங்குபற்றவுள்ளனர்.

அதன் பிறகு சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் நடைபெறவுள்ள சிட்ரஸ் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியிலும் குறித்த நான்கு வீரர்களும் பங்குபற்றவுள்ளனர். எனவே சுவிட்சர்லாந்தில் நடைபெறுகின்ற குறித்த 2 மெய்வல்லுனர் போட்டிகளின் போது இலங்கை அணியின் பயிற்சியாளராக விமுக்தி சொய்ஸா இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் பங்குபற்றும் அனைத்து வீரர்களும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான இலங்கை மெய்வல்லுனர் அணியில் இடம்பெற்றுள்ளதால், அவர்களின் திறமைகளை மேலும் அதிகரித்துக் கொள்ள இந்தப் போட்டித் தொடர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<