தமிழக வீரர் சங்கரின் அதிரடியில் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஹைதராபாத்

1064
IPL 2017

பத்தாவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினமும் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லாத இரண்டு போட்டிகள் இடம்பெற்றன.

கான்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் லயன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களம் இறங்கிய குஜராத் லயன்ஸ் அணியின் டுவெயின் ஸ்மித், இஷான் கிஷான் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் 6 ஓவர்களில் (Power Play) குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 61 ஓட்டங்களைக் குவித்தது.

இஷான் கிஷான் 27 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் அரைச் சதமும், டுவெயின் ஸ்மித் 31 பந்துகளில் அரைச்சதம் அடிக்க குஜராத் அணி 9.3 ஓவர்களில் 100 ஓட்டங்களைத் தொட்டது.

அந்த அணியின் ஓட்ட எண்ணிக்கை 10.5 ஓவர்களில் 111 ஆக இருக்கும்போது டுவெயின் ஸ்மித் 54 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

13ஆவது ஓவரை மொஹமத் சிராஜ் வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் இஷான் கிஷான் 61 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரின் கடைசிப் பந்தில் சுரேஷ் ரெய்னா ஆட்டமிழந்தார்.

அத்துடன் அடுத்த ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்தார். 120 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணியின் ஓட்ட எண்ணிக்கை சரிய ஆரம்பித்தது.

இந்த விக்கெட்டுகள் இழப்பால் நிலைகுலைந்த குஜராத் அணியை ஹைதராபாத் பந்து வீச்சாளர்கள் மீண்டெழவிடவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தி, 19.2 ஓவர்களில் 154 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

ஹைதராபாத் அணி சார்பில் மொகமது சிராஜ் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து 155 என்ற வெற்றி இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சிகர் தவான், டேவிட் வோர்னர் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர்.

சிகர் தவான் 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹென்றிக்ஸ் 4 ஓட்டங்களில் ஓய்வறை திரும்பினார். 25 ஓட்டங்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் சற்று தடுமாறியது.

3ஆவது விக்கெட்டுக்கு டேவிட் வோர்னர் உடன் தமிழக வீரர் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்தது.

இருவரும் அரைச்சதம் அடிக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் 158 ஓட்டங்களை எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாயசத்தில் அபார வெற்றி பெற்றது. வோர்னர் 69 ஓட்டங்களுடனும், விஜய் சங்கர் 63 ஓட்டங்களுடனும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 போட்டிகளில் 8 வெற்றி, ஒரு சமநிலை என 17 புள்ளிகளுடன் பிளே ஆஃப் (Play Off) சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

குஜராத் லயன்ஸ் 154 (19.2) – இஷான் கிஷான் 61(40), டுவெயின் ஸ்மித் 54(33), மொஹமத் சிராஜ் 32/4(4)

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 158/2(18.1) – டேவிட் வோர்னர் 69(52), விஜய் சங்கர் 63(44)

முடிவு – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகளால் வெற்றி

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய மும்பை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக திவாரி மற்றும் சிம்மன்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.

5 பந்துகள் சந்தித்த நிலையில் ஓட்டங்கள் எதுவும் பெற்றுக்கொள்ளாத நிலையில் சிம்மன்ஸ் ட்ரெண்ட் போல்ட்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் ரோகித் ஷர்மா ஓரளவு சமாளித்து ஆடினார்.

8ஆவது ஓவரில் ரோஹித் ஷர்மா 27 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஓய்வறை திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய அம்பாதி ராயுடு அதிரடியாக விளையாடி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திவாரி 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி வீரர் கிரோன் பொல்லார்ட் 13 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக அம்பாதி ராயுடு 37 பந்துகளில் 63 ஓட்டங்களை குவித்தார். கொல்கத்தா தரப்பில் ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து, 174 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சுனில் நரைன் ஓட்டங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் ஆட்டமிழந்தார்.

இவருடன் களமிறங்கிய கிரிஸ் லின் 14 பந்துகளில் 26 ஓட்டங்களை குவித்தார். பின் களமிறங்கிய கௌதம் கம்பீர் 21 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ரொபின் உத்தப்பா 2 ஓட்டங்களும், பாண்டே 33 ஓட்டங்களையும் குவித்து ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய யூசுப் பதான் 20 ஓட்டங்களும் கிராண்ட்ஹோமி 29 ஓட்டங்களையும் குவித்து ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 9 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது.

போட்டியின் சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் 173/5 (20) – சௌரவ் திவாரி 52(43), அம்பாதி ராயுடு 63(37), ட்ரெண்ட் போல்ட் 2/30(4)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 164/8 (20) – மனிஷ் பான்டே 33(33), ஹர்திக் பாண்டியா 2/22(4)

முடிவு – மும்பை இந்தியன்ஸ் 9 ஓட்டங்காளால் வெற்றி