SAFF முதல் வெற்றிக்காக மாலைதீவுகளை வீழ்த்துமா இலங்கை?

SAFF Championship 2021

948

தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் 2021 தொடரின் முதலாவது வெற்றியைப் பெறுவதற்காக, இலங்கை அணி தமது இறுதி லீக் மோதலில், தொடரை நடத்தும் மாலைதீவுகளை எதிர்த்தாடவுள்ளது.

இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் நோக்குடன் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் களமிறங்கிய இலங்கை வீரர்கள் சிறந்த முறையில் தடுப்பாட்டத்தினை மேற்கொண்டு, பலமான இந்திய அணியை கோல்கள் இன்றி சமப்படுத்தியது.

இந்தியாவிற்கு ஆச்சரியம் கொடுத்த இந்த முடிவுடன் ஏற்கனவே ஒரு தோல்வி மற்றும் ஒரு வெற்றியைப் பெற்றுள்ள மாலைதீவுகளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 இற்கு எதிர்கொள்ளவுள்ளது இலங்கை.

மாலைதீவுகள் – இலங்கை இடையிலான போட்டி முடிவுகள்

மோதியுள்ள போட்டிகள் – 19

இலங்கை வெற்றி – 03

மாலைதீவுகள் வெற்றி – 07

சமநிலை – 09  

இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ள மோதல்களைப் பார்க்கின்றபோது மாலைதீவுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. எனினும், இறுதியாக இந்த இரு அணிகளும் மோதிய கடந்த 2018ஆம் அண்டு SAFF சம்பியன்ஷிப் தொடரின் லீக் போட்டி கோல்கள எதுவும் இன்றி சமநிலையடைந்தது. எனவே, இம்முறை போட்டியிலும் எந்தவொரு முடிவும் கிடைக்கலாம் என்ற ஒரு உறுதியற்ற நிலைமையே காணப்படுகின்றது.

இலங்கை அணி

இலங்கை அணியின் இம்முறை SAFF சம்பியன்ஷிப் போட்டி முடிவுகளை பார்க்கும்போது, முதல் போட்டியை விட இரண்டாவது போட்டியிலும், இரண்டாவது போட்டியை விட மூன்றாவது போட்டியிலும் முன்னேற்றம் கண்டு வரும் ஒரு அணியாகவே இருக்கின்றது.

குறிப்பாக, பிஃபா தரவரிசையில் 107ஆவது இடத்தில் இருக்கும் பலமான இந்திய அணிக்கு எதிராக காண்பித்த திறமை இலங்கை அணிக்கு மாலைதீவுகள் அணியை தம்மால் வீழ்த்தலாம் என்ற ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது.

சுஜான் பெரேரா

எனினும், தமது சொந்த மைதானத்தில், அதுவும் மாலைதீவுகள் ரசிகர்களுக்கு முன்னாள் அந்த அணியை எதிர்கொள்வதில் நிறையவே சவால்கள் இலங்கை அணிக்கு உள்ளது.

எனினும், நேபாளம் அணியினர் மாலைதீவுகள் அணியை அவர்களது முதல் போட்டியில் வீழ்த்தியிருந்தமையினால் இலங்கை அணிக்கும் அது மாலைதீவுகளை எதிர்த்தாடலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அவதானிக்கப்பட வேண்டியவர்கள்

இந்தப் போட்டியில் இலங்கை அணியின் முக்கிய வீரர்களாகப் பார்க்கப்படுபவர்களில் முதன்மையாக இருப்பவர் அணியின் தலைவரும் கோல் காப்பாளருமான சுஜான் பெரேரா. ஆறு ஆண்டுகளாக மாலைதீவுகளின் ஈகல்ஸ் கழகத்திற்காக தொழில்முறை கால்பந்தில் ஆடிய அனுபவம் அவருக்கு உண்டு. எனவே, அந்நாட்டு தேசிய அணி வீரர்கள் அனைவரைப் பற்றியும், சுஜான் நன்றாக அறிந்து வைத்துள்ளார்.

அதுபோன்றே, சுஜான் பெரேராவின் திறமையையும் அந்நாட்டு வீரர்கள் அனைவரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இதற்கு மோதிகமாக, இந்த தொடரின் கடந்த அனைத்து போட்டிகளிலும் சுஜானின் தடுப்புக்கள் அபரிமிதமாக இருந்தமையினால், இலங்கை அணியின் துரும்புச் சீட்டு அவர்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

டக்சன் பியுஸ்லஸ்

அதுபோன்றே, மாலைதீவுகளின் முன்னணி லீக்கான திராகு திவெஹி பிரீமியர் லீக்கில் TC விளையாட்டுக் கழகத்திற்காக இம்முறை இலங்கை அணியின் பின்கள வீரர் டக்சன் பியுஸ்லஸ் விளையாடியுள்ளார். எனவே, அவரும் மாலைதீவுகள் தேசிய அணியில் உள்ள வீரர்களின் நுட்பங்களை அறிந்து வைத்துள்ளார்.

குறிப்பாக, இந்தியாவிற்கு எதிராக டக்சன் பின்களத்தில் ஆக்ரோசமாக விளையாடிய விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. எனவே, மாலைதீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் எதிரணியின் அனுபவ வீரர்களை இலக்கு வைத்தால் நிச்சயம், ஏனைய பின்கள வீரர்களுக்கு அது பெரிய உதவியாக இருக்கும்.

அது போன்றே, மார்வின் ஹமில்டன் மாலைதீவுகளின் சிரேஷ்ட வீரர்களான அலி அஷ்பாக் மற்றும் அலி பாசிர் ஆகியோரை தடுக்கும் பட்சத்தில் அந்த அணிக்கு கோலுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதில் இருந்து தடுக்கலாம்.

எவ்வாறாயினும், இலங்கை அணிக்கும் இன்னும் இறுதிப் போட்டிக்கு தெரிவாவதற்கான வாய்ப்பு முழுமையாக கைவிட்டுப் போகவில்லை என்பதால் இந்த ஆட்டத்தில் ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கலாம்.

இலங்கை அணியின் இறுதி 5 போட்டிகள்

0-0 எதிர் இந்தியா

2-3 எதிர் நேபாளம் 

0-1 எதிர் பங்களாதேஷ் 

0-5 எதிர் தென் கொரியா 

2-3 எதிர் லெபனான் 

மாலைதீவுகள் அணி

SAFF சம்பியன்ஷிப் நடப்புச் சம்பியன்களான மாலைதீவுகள் அணியைப் பொறுத்தவரையில் சொந்த நாட்டில் இடம்பெறும் SAFF சம்பியன்ஷிப்பை வென்று, கிண்ணத்தை தக்க வைக்க வேண்டும் என்ற ஒரே எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

எனினும், முதல் போட்டியில் நேபாளம் அணியிடம் 1-0 என பெற்ற தோல்வி அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ள அதேவேளை, அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை ஒரு தோல்வி மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக வெற்றியைப் பெற்றுள்ள அந்த அணி, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற வேண்டும் என்றால் இலங்கைக்கு எதிரான வெற்றி முக்கியமாகக் கருதப்படுகின்றது. காரணம், அந்த அணிக்கு அடுத்து உள்ள போட்டி பலம் மிக்க இந்திய அணியுடனாகும்.

அலி அஷ்பாக்

எனவே, அந்த நாட்டு வீரர்கள் அனைவரும் கழக மட்டப் போட்டிகளை ஆடும் மைதானமான மாலைதீவுகள் தேசிய கால்பந்து அரங்கத்தில் இலங்கைக்கு எதிராக வெற்றியைப் பெறுவதே அந்த அணியின் நோக்கமாக உள்ளது.

அவதானிக்கப்பட வேண்டியவர்கள்

அந்த அணியைப் பொறுத்தவரையில் சிரேஷ்ட வீரரான அலி அஷ்பாக் நிச்சயமாக இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுப்பார். SAFF சம்பியன்ஷிப் தொடர்களில் இதுவரை 21 கோல்களைப் போட்டு அதிக கோல் பெற்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் இவரின் அனுபவம் அணியின் ஏனைய அனைத்து வீரர்களுக்கும் மேலதிக வலுவாக இருந்து வருகின்றது.

அக்ரம் அப்துல் கானி

அது போன்றே, 34 வயதுடைய சிரேஷ்ட வீரரான அணியின் தலைவர் அக்ரம் அப்துல் கானி, பின்களத்தில் ஒரு தடுப்புச் சுவராக இருப்பார். இலங்கை அணியின் முக்கிய முன்கள வீரராக இருக்கின்ற வசீம் ராசிக் மற்றும் இளம் வீரர் டிலன் டி சில்வா போன்றவர்களை கானி தனது அனுவத்தினால் தடுக்கலாம்.

அலி அஷ்பாக்கிற்கு பந்தை வழங்குவது, அதேபோன்று மத்திய களத்தில் இருந்து அணியை செயற்படுத்துவது போன்ற பணிகளை திறன்பட செய்யும் அடுத்த சிரேஷ்ட வீரரான அலி பாசிர் இருக்கின்றார்.

மாலைதீவுகள் அணியின் இறுதி 5 போட்டிகள்

2-0 எதிர் பங்களாதேஷ்

0-1 எதிர் நேபாளம்

1-1 எதிர் பிலிபைன்ஸ்

0-5 எதிர் சீனா 

0-4 எதிர் சிரியா

இறுதியாக,

பொதுவாகவே இலங்கை எதிர் மாலைதீவுகள் அணிகளுக்கு இடையிலான கால்பந்து மோதல் என்பது ஆக்ரோஷமாகவும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமலும் இருக்கும்.

அதேவேளை, இந்தப் போட்டிக்கு மாலைதீவுகள் மிகப் பெரிய வெற்றி எதிர்பார்ப்புடன் இருக்கின்றமையினால் இலங்கை அணி வீரர்களின் எதிர் தாக்குதல் எவ்வாறு இருக்கும் என்பதே அனைவரதும் கேள்வியாக உள்ளது.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<