பலம் மிக்க இந்தியாவை சமப்படுத்திய இலங்கை வீரர்கள்

SAFF Championship 2021

492

தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடரில் கிண்ணம் வெல்லக்கூடிய அணி என பலராலும் கூறப்பட்டு வந்த இந்திய அணிக்கு எதிரான போட்டியை இலங்கை அணி எந்தவித கோல்களும் இன்றி சமநிலையில் முடித்துக்கொண்டது.

ஏற்கனவே, தமது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்விகண்ட இலங்கை வீரர்கள், மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் பிஃபா தரவரிசையில் 107ஆவது இடத்தில் இருக்கும் இந்திய அணியை மாலைதீவுகளின் தேசிய கால்பந்து அரங்கில் எதிர்கொண்டது.

தமது முதல் போட்டியில் பங்களாதேஷுடன் 1-1 என்ற சமநிலை முடிவைப் பெற்ற இந்திய வீரர்கள் இலங்கை அணியை வீழ்த்தி தமது முதல் வெற்றியை சுவைக்கும் நோக்குடனேயே களம் கண்டனர்.

இலங்கை முதல் பதினொருவர்

ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் பின்களத்தில் இருந்து சுமன் வழங்கிய பந்தை டிலான் டி சில்வா, கவிந்து இஷானிற்கு கொடுக்க, கவிந்து மீண்டும் வழங்கிய பந்தைப் பெற்ற வசீம் அதனை கோல் நோக்கி உதைய, பந்து கம்பங்களை விட்டு வெளியே சென்றது.

அதன் பின்னர் முதல் பாதி முடியும்வரை இந்திய அணி வீரர்களே கோலுக்கான முயற்சிகளை எடுத்தனர்.

தொடர்ச்சியாக கவுன்டர் அட்டாக் முறையில் இலங்கை அணியின் கோல் திசைக்கு வந்த இந்திய வீரர்களுக்கு இலங்கை பின்கள வீரர்கள் இறுதி வாய்ப்புக்களை வழங்கவில்லை.

மத்திய களத்தில் இருந்து இலங்கை அணியின் கோல் திசைக்கு இந்திய வீரர்கள் உயர்த்தி அனுப்பிய அனைத்து பந்துகளையும் கோல் காப்பாளர் சுஜான் சிறந்த முறையில் தடுத்தார்.

இதன் விளைவாக இந்திய வீரர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய முதல் பாதி கோல்கள் இன்றி நிறைவு பெற்றது.

முதல் பாதி: இலங்கை 0 – 0 இந்தியா  

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 3 நிமிடங்களின் பின்னர் இந்திய வீரர் லிஸ்டன் கொலாகொ இலங்கை அணியின் பாதியில் ஒரு திசையில் இருந்து கோல் திசைக்குள் செலுத்திய பந்தை, சுஜான் மிக வேகமாக முன்னே வந்து பற்றினார்.

மீண்டும் 54ஆவது நிமிடத்தில் இந்திய வீரர்களுக்கு கிடைத்த பிரீ கிக்கின்போது உள்வந்த பந்தை, சுனில் ஷெத்ரி ஹெடர் செய்ய, அது உயர்ந்து கோலுக்கு அண்மையில் வந்தபோது சுஜான் வெளியே தட்டிவிட்டார்.

அடுத்த 5 நிமிடங்களில் மந்தர் ராவோ ஒரு திசையில் இருந்து உள்ளனுப்பிய பந்து இலங்கை தடுப்பு வீரரின் காலில் பட்டு வெளியே சென்றது.

ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் பின்கள வீரர் ஷரித்த ரத்னாயக்கவுக்கு மாற்று வீரராக மொஹமட் பசால் களமிறக்கப்பட்டார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் இலங்கைக்கு கிடைத்த பிரீ கிக்கின்போது மைதானத்தின் மத்திய பகுதியில் இருந்து அசிகுர் ரஹ்மான் செலுத்திய பந்தை இந்திய கோல் காப்பாளர் குர்ப்ரீத் சிங் இலகுவாக பிடித்தார்.

ஆட்டத்தின் 78ஆவது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பிரீ கிக்கின்போது, பல முறை கோலுக்கான முயற்சிகளும் தடுப்புக்களும் இடம்பெற்றதன் பின்னர், பாரூக் சௌதூரி இந்தியாவிற்கான முதல் கோலைப் பெற்றபோதும், இந்திய வீரர் அங்கே முறையற்ற வித்தில் ஆடியமையினால் நடுவரால் கோல் நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து 80ஆவது நிமிடத்தில் கவிந்து இஷான் மற்றும் வசீம் ராசிக் ஆகியோர் மொஹமட் ஆகிப் மற்றும் மொஹமட் சிபான் ஆகியோரால் மாற்றம் செய்யப்பட்டனர்.

இரண்டாம் பாதியில் இலங்கை அணி பெற்ற கோலுக்கான முதல் முயற்சியாக, டிலன் டி சில்வா எதிரணியின் பின்கள வீரர்களுடன் முட்டி மோதி பந்தை எடுத்து இந்திய கோல் திசைக்குள் செலுத்தியபோது அதனை குர்ப்ரீத் சிங் தடுத்தார்.

அடுத்த நிமிடம் இந்தியாவிற்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை சுனில் ஷெத்ரி ஹெடர் செய்ய, மீண்டும் சுபாஷிஷ் போஸ் கோலுக்குள் செலுத்த எடுத்த முயற்சியின்போது பந்து கம்பங்களை விட்டு உயர்ந்து வெளியே சென்றது.

போட்டியின் உபாதையீடு நேரமாக 8 நிமிடங்கள் வழங்கப்பட்ட போதும், இந்திய வீரர்களின் கோல் முயற்சிகள் அனைத்தையும் இலங்கை வீரர்கள் தடுக்க, போட்டி கோல்கள் எதுவும் இன்றி சமநிலையில் முடிவுற்றது.

இந்தியாவிற்கு எதிரான போட்டியின் சிறந்த வீரராக இலங்கை அணியின் பின்கள வீரர் டக்சன் பியுஸ்லஸ் தெரிவு செய்யப்பட்டார்.

எனவே, இலங்கை அணி SAFF சம்பியன்ஷிப் தொடரில் ஒரு புள்ளியைப் பெற்றுக் கொண்டது. இலங்கை அணி இந்த தொடரில் தமது இறுதி லீக் போட்டியில் எதிர்வரும் 10ஆம் திகதி போட்டித் தொடரை நடத்தும் மாலைதீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

முழு நேரம்: இலங்கை 0 – 0 இந்தியா   

 >>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<