18 வயதிற்குட்பட்ட ஆசிய றக்பி கிண்ணத்தை சுவீகரித்து இலங்கை

211
Sri Lanka u18 Asia Rugby

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 20 வயதிற்குட்பட்ட இலங்கை றக்பி அணி ஆசிய கிண்ணத்தை சுவீகரித்ததைத் தொடர்ந்து இம்முறை 18 வயதிற்குட்பட்ட இலங்கை றக்பி அணி ஆசிய கிண்ணத்தை சுவீகரித்து இலங்கைக்கு பெருமையை சேர்த்துள்ளது.

மாதத்திற்கு முன்னர் நடைபெற்ற இப்போட்டியின் முதலாம் பாகத்தில் இலங்கை அணி ஹொங் கொங் மற்றும் தாய்லாந்து அணிகளுக்கு பின்னால் மூன்றாம் இடத்தை தழுவியது.

இரண்டாம் பாகத்தில் ஹொங் கொங், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் பங்குகொள்ளாமை இலங்கை அணிக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது.

சைனீஸ் தாய்பேய் நாட்டில் நடைபெற்ற இரண்டாம் பாகத்தில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை சுவீகரித்து.

1ஆம் நாள்

இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் 49-00

இரண்டாம் பாகத்தின் முதல் நாளில் இலங்கை அணி முதலாவது போட்டியாக ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்கொண்டது.

முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 49-00 என்ற புள்ளி வித்தியாசத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தை இலகுவாக வென்றது. போட்டிகளின் முதலாவது ட்ரையை தலைவர் நவீன் ஒரு சிறப்பான ஓட்டத்தின் மூலம் ஆரம்பித்து வைத்தார்.

மொத்தமாக தலைவர் நவீன் இரண்டு ட்ரை, திரித்துவக் கல்லூரி வீரர் அவிஷ்க ஷீக்  2 ட்ரை வீதமும், வினுல் பெர்னாண்டோ, டிலுஷ்க தங்கே தீக்ஷண தசநாயக ஆகியோர் தல ஒரு ட்ரை வீதமும் வைத்து இலங்கை அணியை வெற்றிபெறச் செய்தனர்.

இலங்கை மற்றும் சீனா 42-00

இலங்கை அணி தனது இரண்டாவது போட்டியில் சீன அணியை எதிர்கொண்டது. முதலாவது போட்டியை இலகுவாக வென்ற இலங்கை அணி அதே வேகத்துடன் இப்போட்டியை ஆரம்பித்தது. மின்னலுடன் மழை காரணமாக போட்டி ஆரம்பிக்க சிறிது தாமதமாகியது. போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி தொடர்ந்து ட்ரை வைத்து அசத்தியது. முதலாம் பாதி முடிவின் பொழுது இலங்கை 21-00 என்று முன்னிலை வகித்தது. முதல் பாதியில் சமோத் பெர்னாண்டோ 2 ட்ரை மற்றும் சதுர செனவிரத்ன ஒரு ட்ரையம் வைத்தார்.

இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி மேலும் 21 புள்ளிகளைக் குவித்தது. அணுக போயகொட, டிலுக்ஸ தங்கே  மற்றும் தலைவர் நவீன் தலா ஒரு ட்ரை வீதம் வைத்தனர். இறுதியில் இலங்கை 42-00 என்ற புள்ளி வித்தியாசத்தில் இப்போட்டியையும் இலகுவாக வென்றது.

இலங்கை மற்றும் சிங்கப்பூர் 38-05

மழையின் காரணமாக மைதானம் பாதிப்படைந்த நிலையில் இப்போட்டி நடாத்தப்பட்டது. மழையின் காரணமாக பந்தைப் பிடிப்பது கடினமாக காணப்பட்ட பொழுதிலும் தலைவர் நவீன் எந்த ஒரு சிரமமும் இன்றி தொடர்ந்து இரு ட்ரை வைத்து இலங்கை அணியை முன்னிலை அடையச் செய்தார். சிங்கப்பூர் அணி மட்டுமே முதலாம் நாளில் இலங்கைக்கு எதிராக ட்ரை வைத்த ஒரே நாடு ஆகும். ஒரு கட்டத்தில் 12-05 என சிங்கப்பூர் அணி இலங்கை அணிக்கு அழுத்தத்தைக் கொடுத்த பொழுதிலும் இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டு தொடர்ந்து பல ட்ரை வைத்து தமது திறமையை மீண்டும் ஒரு முறை வெளிக்காட்டியது.

2ஆம் நாள்

முதலாம் நாளில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற இலங்கை அணி தரவரிசையில் முதல் இடத்தை தக்கவைத்தவாறு இரண்டாம் நாளில் களமிறங்கியது. இரண்டாம் நாளிலும் எஞ்சி இருந்த குழு மட்ட போட்டிகளுடனேயே நாள் ஆரம்பித்தது.

இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் 19-14

முதல் நாளில் அணைத்து போட்டிகளையும் இலகுவாக வென்ற இலங்கை அணிக்கு இப்போட்டி சற்று சவாலாக அமைந்தது.வழக்கம் போல தலைவர் நவீன் ட்ரை வைத்து ஆரம்பிக்க இலங்கை அணி முதற் பாதி முடிவில் 12-00 என முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் பிலிப்பைன்ஸ் அணி ட்ரை வைத்து இலங்கை அணிக்கு அழுத்தம் கொடுத்தது. எனினும் சமோத் பெர்னாண்டோ சிறப்பாக ஓடி ட்ரை வைக்க இலங்கை 19 புள்ளிகளைப் பெற்றது. விட்டுக்கொடுக்காத பிலிப்பைன்ஸ் அணி இறுதிக் கட்டத்தில் இன்னொரு ட்ரை வைக்க இலங்கை அணி 19-14 என வென்றது.

இலங்கை மற்றும் சைனீஸ் தாய்பேய் 19-14 (இறுதி குழு மட்ட போட்டி)

ஏற்கனவே இறுதிப் போட்டிக்குத் தெரிவான நிலையில் இலங்கை அணி களமிறங்கியது.சைனீஸ் தாய்பேய் அணியே முதல் ட்ரை வைத்து அசத்தியது. தொடர்ந்து இலங்கை அணியின் அமரசிங்க மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட வாய்ப்பை பயன்படுத்திய சைனீஸ் தாய்பேய் அணி இன்னொரு ட்ரை வைத்து 14-00 என முன்னிலையை அதிகரித்தது. தீக்ஷண ஹெஷான் இலங்கை அணி சார்பாக முதல் ட்ரை வைக்க முதற் பாதி 14-05 என முடிவிற்கு வந்தது.

இரண்டாம் பாதி ஆரம்பத்திலேயே இலங்கை அணியின் ஹெஷான் மேலும் ஒரு ட்ரை வைக்க இலங்கை அணி 12 புள்ளிகளைப் பெற்றது. தொடர்ந்து மோசமான விளையாட்டின் காரணமாக இலங்கை அணியின் டில்ஷான் மற்றும் பெர்னாண்டோ இருவரும் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட இலங்கை அணி 5 வீரர்களுடன் விளையாடியது. எனினும் விட்டுக்கொடுக்காத இலங்கை அணி, அணுக போயகொடவின் உதவியுடன் அமரசிங்க மூலமாக இறுதி ட்ரை வைத்து போட்டியை வென்றது.

இறுதிப் போட்டி

இலங்கை அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளி வரிசையில் முதலிடம் பெற்றது. இரண்டாவது இடத்தை சைனீஸ் தாய்பேய் அணி பெற்றுக்கொண்டது. இதனால் இறுதி போட்டியில் மீண்டும் ஒரு முறை இரு அணிகளும் மோதிக்கொண்டன

இலங்கை மற்றும் சைனீஸ் தாய்பேய் 10-05 (இறுதிப் போட்டி)

இப்போட்டியில் சைனீஸ் தாய்பேய் அணியே ஆரம்ப நிமிடங்களில் ஆதிக்கம் செலுத்தியது. சைனீஸ் தாய்பேய் அணி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இலங்கை அணியின் சதுர செனவிரத்ன மஞ்சள் அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட அவ்வாய்ப்பைப் பயன்படுத்திய சைனீஸ் தாய்பேய் அணி முதலாவது ட்ரை வைத்து முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் ஆதிக்கம் இலங்கை அணி பக்கமே காணப்பட்டது. இலங்கை அணியின் சமோத் பெர்னாண்டோ இலங்கை அணி சார்பாக முதலாவது ட்ரை வைத்து புள்ளியை சமநிலை செய்தார். தொடர்ந்து இரண்டாவது ட்ரையை 100 மீட்டர் ஓடி செனவிரத்ன வைக்க இலங்கை அணி முன்னிலைகொண்டது. சைனீஸ் தாய்பேய் அணி ட்ரை வைக்க தவறிய நிலையில் இலங்கை அணி 10-05 என வெற்றிபெற்றது.