சச்சின் சாதனையை சமன்செய்த ருதுராஜ் கெய்க்வாட்!

Indian Premier League 2022

122
BCCI

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் அதிவேகமாக ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சென்னை சுபர் கிங்ஸ் அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சமன் செய்தார்.

IPL கிரிக்கெட் தொடரில் புனேவில் நேற்று (01) நடைபெற்ற 46ஆவது லீக் போட்டியில் சென்னை சுபர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கொன்வே ஆகியோரது அதிரடி ஆட்டத்தால் 2 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்களைக் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் 99 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் 189 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சுபர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில், IPL போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ஓட்டங்களை எடுத்த சச்சின் டெண்டுல்கர் சாதனையை ருதுராஜ் சமன்செய்துள்ளார்.  இதுவரை 31 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,076 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் 34 போட்டிகளில் 1000 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட சுரேஷ் ரெய்னா இரண்டாமிடத்திலும், ரிஷப் பாண்ட் (35), தேவ்தத் படிக்கல் (35) ஆகிய இருவரும் 3ஆம் இடத்திலும், ரோஹித் சர்மா (37), எம்.எஸ்.டோனி (37) ஆகிய இருவரும் 4ஆம் இடத்திலும் உள்ளனர்.

இதனிடையே, நேற்றைய போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் – கொன்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 182 ஓட்டங்களைக் குவித்தது. IPL போட்டிகளில் எந்தவொரு விக்கெட்டுக்கும் சென்னை அணி சார்பில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டம் இதுவாகும்.

மேலும், இந்த போட்டியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதல் விக்கெட்டில் அதிக ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றுக்கொண்ட ஜோடி என்ற பெருமையை ருத்துராஜ், கொன்வே ஜோடி படைத்தது.

இதேவேளை, குறித்த போட்டியில் ஆ.ட்டநாயகன் விருதை வென்ற ருதுராஜ் கெய்க்வாட், 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு IPL போட்டிகளில் அதிக தடவைகள் (8 தடவைகள்) ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர்கள் பட்டியலில் கே.எல் ராகுலுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<