மீண்டும் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவராகும் டோனி

154

சென்னை சுபர் கிங்ஸ் (CSK) அணியின் தலைவரான ரவிந்திர ஜடேஜா, தனது தலைமைப் பொறுப்பினை மஹேந்திர சிங் டோனியிடம் ஒப்படைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

>>அமெரிக்காவில் கிரிக்கெட் மைதானம் அமைக்கவுள்ள கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

எனவே, இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவராக மீண்டும் மஹேந்திர சிங் டோனி செயற்படவிருக்கின்றார்.

2022ஆம் ஆண்டுக்கான IPL தொடர் ஆரம்பமாக முன்னர் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக சகலதுறைவீரரான ரவிந்திர ஜடேஜா செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், 2008ஆம் ஆண்டு தொடக்கம் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த டோனி இனிவரும் காலங்களில் சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவராக செயற்பட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கின்ற ரவிந்திர ஜடேஜா, சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியினை மீண்டும் டோனியிடம் ஒப்படைக்க வேண்டுகோள் ஒன்றினை விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

>>சகலதுறையிலும் பிரகாசித்து லக்னோவின் வெற்றிக்கு உதவிய சமீர

டோனி ரவிந்திர ஜடேஜாவின் வேண்டுகோளினை ஏற்றிருப்பதோடு, 2022ஆம் ஆண்டுக்கான IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணி ஆடவுள்ள எஞ்சிய போட்டிகளில் அதன் தலைவராக செயற்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சுபர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் தலைவராக மஹேந்திர சிங் டோனி நியமனம் செய்யப்பட்டிருக்கும் விடயத்தினை, அவ்வணியின் நிர்வாகம் உறுதி செய்திருக்கின்றது.

இதேவேளை சென்னை சுபர் கிங்ஸ் அணி, தமது அடுத்த போட்டியில் நாளை (01) சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியினை எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<