“ரக்பிக்குள் நுழைவோம்” செயற்திட்டம் இன்று பொலன்னறுவையிலிருந்து ஆரம்பம்

139

ரக்பி விளையாட்டினை இலங்கையில் அபிவிருத்தி செய்யும் நோக்கில் இலங்கை ரக்பி சம்மேளனம், உலக ரக்பி சம்மேளனத்துடன் இணைந்து நடாத்தும் “ரக்பிக்குள் நுழைவோம்” (GET INTO RUGBY) செயற்திட்டத்தின் முதலாவது பயிற்சி முகாம் இன்று (21) பொலன்னறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மஹேல ஜயவர்தன நியுசிலாந்து ரக்பி அணியின் ரசிகரானது எவ்வாறு?

மஹேல ஜெயவர்தன நவீன கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவர்.

ஜெட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் நடாத்தப்படும் பயிற்சி முகாம் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் நடாத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வோரு மாவட்டத்திலும் குறித்த கல்வி வலயத்திலுள்ள 15 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதன்போது பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இன்று நடைபெற்ற பயிற்சி முகாமில் பொலன்னறுவை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 300 க்கும் மேற்பட்ட தரம் 7,8 மற்றும் 9 ஐச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இப்பயிற்சி முகாமிற்கு பயிற்சியளிப்பதற்காக உலக ரக்பி சம்மேளனத்தின் பிரதிநிதி பென் வெய்ன் ரூயேன் கலந்து கொண்டார். இப்பயிற்சி முகாமிற்கு கல்வி அமைச்சு, இலங்கை இராணுவ ரக்பி பயிற்றுவிப்புக் குழு மற்றும் வடமத்திய மாகாண ரக்பி பயிற்றுவிப்புக் குழு என்பனவும் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சிகள் குறித்து இலங்கை ரக்பி சம்மேளனத்தின் அபிவிருத்தி முகாமையாளர் திருமதி தனுஜா குலதுங்க கருத்துத் தெரிவிக்கையில் இலங்கையில் ரக்பி விளையாட்டு குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்யும் முகமாக உலக ரக்பி சம்மேளனத்தின் ரக்பி அபிவிருத்தியின் ஒரு அங்கமாக இந்த பயிற்சி முகாம் இன்று ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமாகும் இப்பயிற்சி முகாம் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.  இதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கும் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை இராணுவம் மற்றும் வடமத்திய மாகாண பயிற்றுவிப்பாளர் மலித் ஹெட்டியாராச்சி ஆகியோரை இங்கே நினைவு கூறக் கடமைப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்தார்.

மோட்டார் பந்தயத்தில் கால்பதித்துள்ள புத்தளம் வீரர் ஹம்தான்

வடமத்திய மாகாண ரக்பி பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றும் இலங்கை ரக்பி அணியின் முன்னாள் வீரரும்  கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியின் முன்னாள் ரக்பி அணித் தலைவருமான மலித் ஹெட்டியாராச்சி கருத்துத் தெரிவிக்கையில் இப்பயிற்சி முகாம் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள ரக்பி விளையாட்டில் விருப்பம் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

உண்மையில் ரக்பி விளையாட்டினை முன்னேற்ற நாம் மிகுந்த சிரமத்தை எடுத்துள்ளோம். அது போன்றே நாம் சில தடங்கல்களை எதிர்நோக்குகிறோம். எமக்கு சிறந்த உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள் கிடைக்கும் பட்சத்தில் இங்கிருந்து மிகத்திறமையான வீரர்களை தேசிய அணிக்கு வழங்க முடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது எனத் தெரிவித்தார்.    

இதேவேளை பயிற்சி முகாமின் ஒரு அம்சமாக கண்காட்சி ரக்பி போட்டியொன்று இலங்கை இராணுவ மகளிர் அணிக்கும் இலங்கைக் கடற்படை மகளிர் அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இப்போட்டியில் கடற்படை மகளிர் அணி 15-10 எனும் புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.