முதல் போட்டியில் சம்பியன் அணியை எதிர்கொண்ட புனித பேதுரு கல்லூரி

214

2016ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட கால்பந்து சம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் போட்டிக்காக கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகள் மோதிக்கொண்டன.

கொழும்பு புனித பேதுரு கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்  இரு அணிகளும் சமபலத்துடன் மோதி தலா 2-2 என்ற கோல்கள் கணக்கில் போட்டியை சமநிலையில் முடித்தன.

கடந்தாண்டு, டிவிசன் ll பிரிவில் சம்பியன் பட்டத்தை சுவிகரித்து டிவிசன் l க்கு தர உயர்வு பெற்ற ரோயல் கல்லூரி அணியை புனித பேதுரு கல்லூரி அணி வரவேற்றது. டிவிசன் l சம்பியன்ஷிப் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெற்ற ரோயல் கல்லூரி அணி ஆரம்ப போட்டியை வெற்றி பெறும் நோக்கில் மிகுந்த உற்சாகத்தோடு இருந்தது.

நேற்றைய ஆரம்ப போட்டி எளிமையான முறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. போட்டி ஆரம்பித்தவுடன் இரு அணிகளும் விரைவாகவும் ஆரவாரத்துடனும் விளையாடினர். எனினும் புனித பேதுரு கல்லூரி அணி உடனடியாக போட்டியின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு ஆட்டத்தை மாற்றி போட்டியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

புதிதாக டிவிசன் l க்கு தரமுயர்த்தப்பட்ட ரோயல் கல்லூரி எந்தவிதமான போட்டி திட்டங்களுடனும் விளையாடவில்லை. மாறாக புனித பேதுரு கல்லூரி அணி, எதிரணி கோலுக்கு அடிக்கும் பந்துகளை வெளியேற்றியதை மாத்திரமே காணக் கூடியதாக இருந்தது.

Photo Album: St.Peter’s College v Royal College | U19 DIV I – 2016 

19 வயதுக்குட்பட்ட கால்பந்து சம்பியன்ஷிப் – 2016 புனித பேதுரு கல்லூரி எதிர் ரோயல் கல்லூரி புகைப்படங்கள்

போட்டியின் முதல் கோலை ரோயல் கல்லூரி பெற்றுக்கொண்டது. ரோயல் கல்லூரியின் நட்சத்திர வீரர் நவீன் ஜுட் தனக்கு கிடைக்க பெற்ற சிறு இடைவெளியில் கோல்காப்பாளர் பந்தை தடுக்க முற்பட்ட வேளையிலும் நுட்பமாக முறையில் உட்செலுத்தி கோல் அடித்தார்.

அதன் பின் ரோயல் கல்லூரி அணியினர் மெதுவாக போட்டியினுள் இணைந்து போட்டிக்கு தக்கவாறு பலமாக விளையாட தொடங்கினர். எனினும் புனித பேதுரு கல்லூரி தனது ஆதிக்கத்தை தொடர்ந்தும் செல்லுத்திய வண்ணம் இருந்தது.

புனித பேதுரு கல்லூரிக்கு பல வாய்ப்புகள் கிடைக்க பெற்ற போதிலும், முன்னணி வீரர்கள் அந்த வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளவதில் சற்றே தயக்கம் காட்டியதை காணக்கூடியதாக இருந்தது.

அதேநேரம் மறுமுனையில் வாய்ப்புகளுக்காக காத்திருந்த நவீன் ஜூட் கோல்களை அடிக்கும் முனைப்பில் ஈடுப்பட்டிருந்தார். அணித்தலைவர் சதுர அவிஷ்க உள் அனுப்பிய பந்தை நவீன் தனது தலையால் திசை திருப்பி கோலினுள் செல்லுத்த, அது ஓப் சைட் என நடுவர் தீர்ப்பளித்தார்.

சதுர அவிஷ்க புனித பேதுரு கல்லூரி வீரருடன் முட்டிமோதியதால் நடுவர் அவருக்கு மஞ்சள் அட்டையை காட்டி எச்சரிக்கை செய்தார். அந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு சிவப்பு அட்டையை வழங்கக்கூடிய நிலை இருந்தும் நடுவர் எதிர்வரும் போட்டிகளை கருத்தில் கொண்டு மஞ்சள் அட்டையுடன் நிறுத்தி விட்டார்.

முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் புனித பேதுரு கல்லூரியின் முன்னணி வீரர் ஷெஹன் லியனப்பத்திரன, தனக்கு கிடைத்த இலவச உதை ஒன்றை கோலாக மாற்ற பந்தை கோல் கம்பங்களுக்குள் அனுப்பினார். பின்னர் நடுவர் அது கோல் என சைகை செய்ய புனித பேதுரு கல்லூரி அணி வீரர்கள் உள ரீதியாக உந்துதல் பெற்றார்கள்.

முதல் பாதி: புனித பேதுரு கல்லூரி 01 – 01 ரோயல் கல்லூரி

இரண்டாம் பாதியில் புத்தெழுச்சி பெற்ற புனித பேதுரு கல்லூரி தாக்குதல் பாணியை கையாண்டு தமது அணிக்கான கோல் பெறும் சந்தர்ப்பங்களை உருவாக்க ஆரம்பித்தது. அனுபவமற்ற கோல்காப்பாளரைக் கொண்ட ரோயல் அணிக்கு எதிராக தூரத்தில் இருந்து கோல் அடிக்க முயற்சிக்க அது சாதகமானது. போட்டியின் 47வது நிமிடம் ஷெஹன் அடித்த பந்தை பிடிக்க முயற்சித்த கோல்காப்பாளர் நிலை தடுமாற, பந்து கம்பங்களுக்குள் சென்று கோலாகியது. அதன் முலம் பேதுரு கல்லூரி 2-1 என்று முன்னிலை பெற்றது.

எனினும் மறு முனையில் சிறந்த முறையில் ஆடிக்கொண்டிருந்த நவீன் தனது கால்களுக்கு பந்து கிடைத்ததும் தடுப்பாளர்களை பக்கவாட்டுக்கு கவர்ந்து வலது பக்கமாக பந்தை உள்செல்லுத்த, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கோசல ஹசன்ஜித் அந்தப் பந்தை கோலுக்குள் தட்டிவிட போட்டி சமநிலையானது.

போட்டியின் இறுதி கட்டத்தை எட்டியபோது இரு அணி வீரர்களும் களைப்படைந்திருந்தனர். அதனால் கோல் போடும் சந்தர்ப்பங்களும் வெகுவாக குறைந்திருந்தன. பேதுரு கல்லூரிக்கு வெல்லும் வாய்ப்புக்கள் அதிகளவாக இருந்த போதிலும், நடுநிலை வீரர்கள் தமது கால்களில் பந்தை நிறைய நேரம் வைத்திருந்ததால் அவர்களுக்கான வாய்ப்புகள் பயனை ஏற்படுத்தவில்லை.

போட்டி முடிவுக்காக, நடுவர் ஊதியை ஊதிய போது இரு அணிகளும் 2-2 என்ற கோல்கள் கணக்கில் சமநிலையில் இருந்தன.

முழு நேரம் : புனித பேதுரு கல்லூரி 02 – 02 ரோயல் கல்லூரி

Thepapare.com இன் சிறந்த வீரர்நவீன் ஜூட் (ரோயல் கல்லூரி)

போட்டியின் பின்னர் புனித பேதுரு கல்லூரி அணியின் பயிற்சியாளர் இசுறு பெரேரா thepapare.com இடம் கருத்து தெரிவிக்கையில், எங்களுடைய அணி வீரர்களுக்கு பயற்சிக்குரிய நேரம் போதாமல் இருந்தது. அத்துடன் இந்த போட்டிகள் காலம் கடந்த நிலையில் ஆரம்பித்துள்ளன. போட்டி ஏற்பட்டளர்கள் சற்று சிந்திக்க வேண்டும். ஏனெனில் பாடசாலை பரீட்சைகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் பயிற்சிகள் மேற்கொள்வது கடினம்.

இருந்தாலும் நாம் சமாளித்துக் கொண்டோம். எனினும் நாம் உடல் நிலை மற்றும் ஏனைய பிரச்சினைகள் பற்றி அக்கறை கொண்டுள்ளோம். அடுத்த போட்டியில் மேலும் நன்றாக விளையாடுவோம்என்று தெரிவித்தார்.

ரோயல் கல்லூரி பயற்சியாளர் அசோக ரவீந்திர கூறுகையில்,

இவர்கள் இன்னும் சரியாக அனுபவப்படவில்லை மற்றும் இன்னும் பயிற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். எங்களுடைய வழமையான கோல்காப்பாளர் இன்று வருகை தரவில்லை. இருந்தாலும் வீரர்கள் போட்டியின் தன்மையை புரிந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்கள். அனுபவ வீரர்கள் தங்களுடைய முதிர்ச்சி தன்மையை காட்டி சிறப்பாக இணைந்து விளையாடினார்கள். மேலும் நாம் கடுமையாக பயிற்சி செய்து, எங்களை மேம்படுத்தி, திறமையாக விளையாட முயற்சி செய்வோம்.

கோல் பெற்றவர்கள்
புனித பேதுரு கல்லூரி – ஷெஹன் லியனபத்திரன 39 ‘, 47’
றோயல் கல்லூரி – நவீன் ஜூட் 09 ‘, கோசல ஹசன்ஜித் 50’

மஞ்சள் அட்டைகள்
சதுர அவிஷ்க 35 ‘(ரோயல் கல்லூரி)