கொவிட்-19 தாக்கத்தால் பிற்போடப்பட்ட FFSL தலைவர் கிண்ணம்

311

இலங்கையில் இம்மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடர், நாட்டின் தற்போதைய கொவிட்-19 நிலைமையை கருத்திற்கொண்டு ஆகஸ்ட் 9 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

தகவல்களை கசியவிடுபவரைத் தேடும் FFSL

எவ்வாறாயினும், குறித்த இந்த தொடருக்கான தயார்படுத்தல்களுக்காக பொருளாதார ரீதியில் ஒத்துழைப்பை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது தொடருக்கான பயிற்சிகளை கழகங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளன.

இலங்கையின் கால்பந்து போட்டிகள் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் வருட இறுதியில் காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக தடைப்பட்டிருந்தது. இந்த நிலையில், இவ்வருடம் கொவிட் -19 காரணமாக மீண்டும் கால்பந்து போட்டிகள் பாதிக்கப்பட்டன. 

எனினும், கடந்த மாதத்தில் நாட்டின் சூழ்நிலை சற்று மாற்றமடைந்து வந்த காரணத்தால், மீண்டும் கால்பந்து போட்டிகளை நடாத்த இலங்கை கால்பந்து சம்மேளனம் தீர்மானித்திருந்தது. அதன்படி, 20 அணிகளை கொண்ட FFSL தலைவர் கால்பந்து தொடரை நடத்த திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த தொடர் குறித்த கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு கடந்த 30 ஆம் திகதி நாட்டின் 24 முன்னணி கால்பந்து கழகங்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில், 20 கழகங்கள் மாத்திரமே கலந்துரையைாடலுக்கு வருகைதந்திருந்தன. அவ்வாறு வருகைதந்திருந்த 20 கழகங்களுக்கு இடையில்,  ஜூலை 26 ஆம் திகதி முதல் போட்டிகளை நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

குறித்த இந்த தொடரின் போட்டிகள் கொழும்பு சுகததாஸ மைதானம் மற்றும் கொழும்பு குதிரைப்பந்தய சர்வதேச திடல் ஆகிய மைதானங்களில், ரசிகர்கள் இல்லாத நிலையில், நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இப்போது மீண்டும் இலங்கையில் கொவிட்-19 வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தொடர் ஜூலை 26 ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 9 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

>>மேலும் கால்பந்து செய்திகளை படிக்க<<