சரியாக விசாரணைகள் தேவை : FFSL இடம் ரோஹித வேண்டுகோள்

269
Rohitha Fernando

நியூ யங்ஸ் கால்பந்து கழகத்தின் தலைமை பயிற்சியாளர் ரோஹித பெர்னாண்டோ, தன் மேல் விதிக்கப்பட்டுள்ள போட்டித் தடை மற்றும் அபராதம் ஆகிய விடயங்கள் குறித்து ஒழுங்கான விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு இலங்கை கால்பந்து சம்மேளனத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நியூ யங்ஸ் மற்றும் சொலிட் கழக அணிகளுக்கிடையிலான டயலொக் சம்பியன்ஸ் லீக் சூப்பர் 8 சுற்றுப் போட்டியின் போது, முறைகேடாக நடந்துகொண்டதன் காரணமாக ரோஹித பெர்னாண்டோவுக்கு போட்டி ஒழுங்கமைப்பாளர்களினால் மூன்று போட்டிகளுக்கான தடை விதிக்கப்பட்டதுடன் 10,000 ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும் இது சம்பந்தமாக ரோஹித இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு பெர்னாண்டோ எழுதியுள்ள கடிதத்தில், அவருடைய அதிருப்தியை பின்வருமாறு வெளிப்படுத்தியிருந்தார்,

9/2/2017 அன்று திகதியிடப்பட்ட உங்கள் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களை கண்டு நான் ஆச்சரியமடைந்தேன். குறித்த அறிக்கையின் படி என்னுடைய முறைகேடான நடத்தை காரணமாக களநடுவர்கள், போட்டி ஆணையர் மற்றும் போட்டி ஒழுங்கமைப்பாளர்கள் உள்ளடங்கலாக, அனைவரும் எனக்கு மூன்று போட்டிகளுக்குத் தடை பிரப்பித்தும், 10,000 ரூபாய் தண்டப்பணம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்ததை அறிய முடிந்தது.

‘’எனினும், குறித்த போட்டியில் கள நடுவர் எனக்கு எச்சரிக்கை விடுக்கவோ, மஞ்சள் அட்டை காண்பிக்கவோ இல்லை. எனவே, இந்த குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக நிராகரிக்கும் அதேநேரம், எவ்விதமான ஒழுங்கான விசாரணைகளும் இன்றி எப்படி இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று ஆச்சிரியமடைகின்றேன். என்றார்.

இந்த விடயம் குறித்து ரோஹித பெர்னாண்டோ ThePapare.com இடன் பிரத்தியேகமாகக் கருத்து தெரிவிக்கும்பொழுது,

குறித்த விசாரணை தினத்தின் காலை வேளையிலேயே விசாரணைக்கு வருமாறு எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. நான் வென்னபுவயிலிருந்து கொழும்புக்கு வரவேண்டும். எனினும் எனக்கு அதற்கு வருவதற்கான நேரம் இருக்கவில்லை.

அவர் அனுப்பியுள்ள குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘’இது தொடர்பாக நான் மேலும் கூற விரும்புவதென்னவென்றால், எங்களுக்கும் சொலிட் கால்பந்து கழக அணிக்கும் இடையிலான போட்டிகளுக்கு நடுவராக திரு. உதயகாந்தவை நியமிக்க வேண்டாம் என்று நான் ஏற்கனவே இலங்கை கால்பந்து சம்மேளனத்திடம் பல தடவைகள் அறிவித்துள்ளேன்.

ஏனென்றால், அவருடைய போட்டித் தீர்மானங்கள் அனைத்தும் சொலிட் கால்பந்து கழகத்துக்கு சார்பாகவே இருக்கும். உண்மையில் இந்த போட்டிக்கு முன்னதாகவே, அவரை எங்களுடைய போட்டிகளுக்கு நியமிக்க வேண்டாம் என்று நான் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு அறிவித்திருந்தேன்’’  

‘’நாங்கள் மில்லியன் கணக்கான பணத்தை செலவழித்து எங்களுடைய கால்பந்து கழகம் மற்றும் அணியின் தரத்தைப் பேணுகின்றோம். அத்துடன் டயலொக் சம்பியன்ஸ் லீக் சுற்றுப் போட்டிகளில் எவ்விதமான தூர்நடத்தைகளும் எங்களுக்கெதிராகப் பதிவாகவில்லை.  பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் விரோத செயல்கள் எங்கள் ஒழுக்கத்தை நிலைகுலையச் செய்வதுடன் மனதளவில் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது’’ எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் இறுதியாக, ‘நான், போட்டி ஒழுங்கமைப்பாளர்களிடம் தவறுதலாக இடம்பெற்றுள்ள இந்த விடயம் சம்பந்தமாக முழுமையான விசாரணை நடத்துமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன். அதேசமயம், என்மேல் சுமத்தப்பட்டிருக்கும் பிழையான குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். மேலும், நான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து என்மேல் சுமத்தப்பட்டுள்ள களங்கத்திலிருந்து விடுபட வேண்டிய நிலையில் இருகின்றேன்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.