“விராட் கோஹ்லிக்கு எதிராக பந்துவீசுவது சவாலா?” கூறும் ஷானக!

Asia Cup 2022

1377

இந்திய அணி வீரர் விராட் கோஹ்லியின் துடுப்பாட்ட பிரகாசிப்பை தடுப்பதற்காக விஷேடமான விடயங்கள் எதனையும் செய்யவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள போட்டி தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

>> எதிர்பார்ப்பை தூண்டியுள்ள போட்டியில் மோதும் இலங்கை – இந்தியா!

“விராட் கோஹ்லி ஒரு சிறந்த வீரர். அதிகமான விமர்சனங்கள் இருந்தாலும், தற்போது ஓட்டங்களுக்கு வந்துள்ளார். அவர் மிகப்பெரிய ஓட்ட எண்ணிக்கைக்கு செல்லவில்லை. ஆனால், தொடர்ந்து ஓட்டங்களை குவிக்கிறார். இதுதான் பிரச்சினையாக இருக்கிறது. அதற்காக எந்தவித விஷேடமும் இல்லை. நாம் அடுத்த போட்டிக்காக தயாராகியிருக்கிறோம்” என்றார்.

அதேநேரம், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் முகங்கொடுப்பதற்கான திட்டங்கள் தொடர்பிலும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

“கடந்த போட்டிகளை போன்று இந்த போட்டியையும் கையாள எதிர்பார்க்கிறோம். நேர்மறையான எண்ணத்துடன் விளையாடுவோம். நாம் தயார்படுத்தல்களை சிறப்பாக மேற்கொண்டுள்ளோம். சிறந்த மனத்திடத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளோம்”

இலங்கை அணி சுபர் 4 சுற்றின் முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. இந்தப்போட்டி தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய இலங்கை அணியின் உப தலைவர் சரித் அசலங்க, ஓட்டங்களை குவிக்க தவறியுள்ளார். இவர் இன்றைய போட்டியில் விளையாடுவாரா? அல்லது தனன்ஜய டி சில்வா இணைக்கப்படுவாரா என்பது தொடர்பிலும் தசுன் ஷானக கூறியுள்ளார்.

“தனன்ஜய டி சில்வா விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் இன்னும் முடிவுசெய்யவில்லை. தேர்வுக்குழுவினர் கலந்துரையாடி வருகின்றனர். விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன”

இதேவேளை இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தொடர்ந்து ஓட்டங்களை குவித்து வருகின்றமை இந்தப்போட்டியில் அணிக்கு சவாலாக அமையும் என்ற விடயத்தினையும் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தியாவிடம் சிறந்த துடுப்பாட்ட வரிசை உள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர்களுடைய ஆரம்ப மற்றும் முதல் வரிசை வீரர்கள் கடந்த இரண்டு வருடங்களாக ஓட்டங்களை குவித்து வருகின்றனர். அவர்களுடைய வெற்றிகளுக்கு இதுவே காரணம். எனவே, நாளைய போட்டியில் எமது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயற்படவேண்டும்” என மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசியக்கிண்ணத்தின் சுபர் 4 சுற்றுப்போட்டி இன்றைய தினம் (06) டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<