டி20 சர்வதேச போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா

221
Image Courtesy - BCCI

நியூஸிலாந்து அணியுடன் நேற்று (08) நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியின் நிறைவில் ரோஹித் சர்மா ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு நியூஸிலாந்து கிரிக்கெட் அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இரு வகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகின்றது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து சகிப் அல் ஹசன் நீக்கம்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான சகிப் அல் ஹசன்…

சுற்றுப் பயணத்தின் முதல் தொடரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரை இந்திய அணி 4-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர் நடைபெற்று வருகின்றது.

புதன்கிழமை (06) நடைபெற்ற முதலாவது டி20 சர்வதேச போட்டியில் நியூஸிலாந்து அணி 80 ஓட்டங்களினால் அபார வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (08) ஓக்லாந்தில் ஆரம்பமாகியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி தங்களுக்கு வழங்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பின்னர் 159 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலிருந்து மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி விக்கெட்டுக்களை கட்டுப்படுத்தி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்று தொடரை சமப்படுத்தியுள்ளது.

இந்திய அணி சார்பாக அதிகபட்ச ஓட்டங்களாக அதன் அணித் தலைவர் ரோஹித் சர்மா 29 பந்துகளுக்கு முகம்கொடுத்து 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். போட்டியின் ஆட்ட நாயகனாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய பாண்டியா சகோதரர்களில் ஒருவரான குர்னால் பாண்டியா தெரிவானார்.

இந்த போட்டியில் இந்திய அணியின் தலைவராக செயற்பட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா தனது அதிரடி துடுப்பாட்டத்தின் மூலம் நேற்று (08) நடைபெற்றிருந்த இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் ஒரே போட்டியில் மூன்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

டி20 சர்வதேச போட்டிகளில் அதிக தனிநபர் ஓட்டம்

இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா டி20 சர்வதேச போட்டிகள் வரலாற்றில் இன்றைய போட்டியில் பெற்ற அரைச்சத்தின் மூலம் டி20 சர்வதேச போட்டிகள் வரலாற்றில் அதிக தனிநபர் ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

இலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான இரண்டு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

இலங்கை கிரிக்கட் நிறுவனத் தேர்தலில் தலைவர் பதவி உள்ளிட்ட முக்கிய…

நேற்றைய போட்டிக்கு முன்னராக 2,238 ஓட்டங்களுடன் குறித்த பட்டியலில் 4 ஆவது இடத்தில் இருந்த ரோஹித் சர்மா தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுவரையில் 92 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 84 இன்னிங்சுகளில் மொத்தமாக 2,288 ஓட்டங்களை குவித்துள்ளார்.

2 ஆவது இடத்தில் நியூஸிலாந்து அணி வீரர் மார்டின் கப்டில் 2,272 ஓட்டங்களை குவித்துள்ளார். இவர் தற்போது நடைபெற்றுவரும் தொடரில் உபாதை காரணமாக முழுமையாக விலகியிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

குறித்த பட்டியலில் இலங்கை அணி சார்பாக திலகரத்ன டில்ஷான் 80 டி20 சர்வதேச போட்டிகளில் 1,889 ஓட்டங்களை குவித்து 8 ஆவது இடத்தில் உள்ளார். டில்ஷான் 2016 ஆம் ஆண்டு டி20 சர்வதேச போட்டிகளில் இருந்த ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டி20 சர்வதேச போட்டிகளில் அதிக அரைச்சதம்

ரோஹித் சர்மா நேற்றைய போட்டியில் பெற்ற அரைச்சதத்தின் மூலம் டி20 சர்வதேச போட்டிகள் வரலாற்றில் அதிக அரைச் சதங்கள் பெற்றவர்கள் வரிசையில் விராட் கோஹ்லிக்கு அடுத்ததாக இரண்டாமிடத்தில் உள்ளார். விராட் கோஹ்லி 19 அரைச்சதங்களை கடந்துள்ளார்.

92 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள இவர் நேற்றைய போட்டியுடன் 16 அரைச்சதங்களை பூர்த்தி செய்துள்ளார். மேலும் 4 சதங்களை பெற்று அதிக சதங்கள் பெற்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஓட்ட இயந்திரம் (Run machine) என வர்ணிக்கப்படும் விராட் கோஹ்லி இதுவரையில் டி20 சர்வதேச அரங்கில் சதம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

டி20 சர்வதேச போட்டிகளில் தனிநபர் பெற்ற அதிக சிக்ஸர்கள்

நேற்றைய போட்டியில் 4 சிக்ஸர்களை ரோஹித் சர்மா பறக்கவிட்டிருந்தார். இதன் மூலம் டி20 சர்வதேச போட்டிகள் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை குவித்தவர்கள் வரிசையில் 102 சிக்ஸர்களுடன் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் மற்றும் நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்டில் ஆகியோர் 103 சிக்ஸர்களுடன் குறித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

குறித்த பட்டியலில் இலங்கை அணி சார்பாக சகலதுறை வீரர் திஸர பெரேரா 60 சிக்ஸர்களுடன் 17 ஆவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் விராட் கோஹ்லி வெறும் 48 சிக்ஸர்களுடன் 31 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய – நியூஸிலாந்து அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான டி20 சர்வதேச போட்டி நாளை (10) ஹமில்டனில் நடைபெறவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க