ரியோ ஒலிம்பிக் 2016 – ஆகஸ்ட் 18

462
Rio Aug 18

ஜமெய்க்காவுக்கு இன்னுமொரு தங்கப்பதக்கம்

ஒலிம்பிக்கில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமெய்க்கா வீரர் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நடைபெற்றது. இதில், 22 வயதான ஜமெய்க்கா வீரர் ஒமர் மெசிலாட் பந்தய தூரத்தை 13.05 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜமைக்காவுக்கு முதல் தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.

ஸ்பெயின் வீரர் ஓர்டேகா 13.17 வினாடிகளில் கடந்து வெள்ளிப்பதக்கமும், பிரான்சைச் சேர்ந்த டிமிட்ரி பாஸ்கோவ் 13.24 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

பிரிட்டனின் முன்னணி வீரர்களான ஆண்ட்ரூ போஸி மற்றும் லாரன்ஸ் கிளார்க் ஆகிய இருவரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பளு தூக்கும் போட்டியில் புதிய உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை

பளு தூக்கும் போட்டியின் 105 கிலோ உடல் எடைக்கு மேற்பட்ட பிரிவில் ஜார்ஜியா வீரர் லஷ்கா புதிய உலக மற்றும் ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார்.

22 வயதான அவர் ஸ்னாட்ச் முறையில் 215 கிலோவும், கிளின் அன்ட் ஜொக் முறையில் 258 கிலோவும் ஆக மொத்தம் 473 கிலோ தூக்கி சாதனை புரிந்தார். அவர் ஈரான் வீரர் சலமிக்கு அதிர்ச்சி கொடுத்து இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

ஆர்மேனிய வீரர் மின் சயான் 451 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கமும், மற்றொரு ஜார்ஜிய வீரர் துர்மென்தஷ் 448 கிலோ தூக்கி வெண்கலமும் வென்றனர்.

ஆண்களுக்கான 200m ஓட்டப் போட்டியில் போல்ட்

ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்று நேற்று நடந்தது. இதில் பதற்றமின்றி சர்வ சாதாரணமாக ஓடிய நடப்பு சாம்பியன் உசேன் போல்ட் (ஜமைக்கா) 20.28 வினாடிகளில் தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறினார். அவருக்கு சவால் அளிக்கக்கூடிய அமெரிக்க வீரர் ஜஸ்டின் கேத்லின், கனடாவின் டி கிராசி ஆகியோரும் அரை இறுதியை எட்டினார்.

அரை இறுதிச் சுற்று இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கும், இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நாளை மறுதினம் (சனிக்க்கிழமை) காலை 7 மணிக்கும் நடக்கவுள்ளது.

பேட்மிண்டனில் இந்திய வீரர்கள் அசத்தல்

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் நடந்து வருகிறது. இதுவரை 73 நாடுகள் பதக்கப் பட்டியலில் இணைந்து விட்டன. அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 62 ஒலிம்பிக் சாதனையும், 21 உலக சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் திருவிழா தொடங்கி 11 நாட்கள் ஆகியும் இந்தியாவினால் இன்னும் ஒரு பதக்கம் கூட வெல்ல முடியவில்லை. இதனால் பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.

பேட்மிண்டன், தடகளம், மல்யுத்தம் ஆகியவற்றில் மட்டுமே இந்திய வீரர்கள் தற்போது களத்தில் நீடிக்கிறார்கள். இவற்றில் ஏதாவது ஒரு பதக்கம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெக்வால் வெளியேறினார். இருப்பினும் தொடர் சோகத்துக்கு மத்தியில் பேட்மிண்டன் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து ஆறுதல் அளித்து வருகிறார்.

மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கும் தாய்நாட்டு மக்களுக்கு, ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கப் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பி.வி. சிந்து பிரகாசப்படுத்தி உள்ளார். ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையரில் சாய்னாவுக்கு பிறகு கால்இறுதியை எட்டிய 2-வது இந்திய வீராங்கனை சிந்து ஆவார்.

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடம் பிடித்தவருமான சீனாவின் வாங் யிகானை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பு நிறைந்த இந்த ஆட்டத்தில் பி.வி. சிந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீன வீராங்கனையை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். சீனா விராங்கனையும் சளைத்தவர் கிடையாது, பி.வி. சிந்துக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தார். இருப்பினும் பி.வி. சிந்து சிறு பிழைகளைச் செய்தாலும், மன உறுதியை இழக்காமல் அபாரம் காட்டினார்.

சுமார் 51 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் சீன வீராங்கனை வாங்யிகானை பந்தாடினார். முதல் செட்டை மகிழ்ச்சியுடன் தொடங்கிய சீன வீராங்கனைக்கு சவால் விடும் அளவிற்கு பி.வி. சிந்து அபாரம் காட்டினார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 13-13, 17-17 என்ற சரிசமான அளவிற்கு இருவரும் புள்ளிக் கணக்கை கொண்டிருந்தனர். பி.வி. சிந்து 20-18 என்ற கணக்கில் முதல்செட்டில் முன்னிலை பெற்று இருந்த போது சீன வீராங்கனை சளைக்காமல் விளையாடினார். நெருக்கடியான இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை 21-20 என்ற கணக்கில் வெற்றிபெற்றார்.

இரண்டாவது செட் தொடக்கத்திலே ஆட்டத்தை பி.வி. சிந்து தன் கைவசம் கொண்டுவந்தார், இருப்பினும் அனுபவம் வாய்ந்த சீன வீராங்கனை தொடர்ந்து நெருக்கடி கொடுத்தார். ஒருகட்டத்தில் 18-18 என்ற சமநிலையை இருவரும் அடைந்தனர். இருப்பினும் சீன வீராங்கனை வான் யிகான் செய்த ஒவ்வொரு தவறும் சிந்துவின் புள்ளிக்கணக்கை உயரச்செய்தது. 21-19 என்ற கணக்கில் பி.வி. சிந்து யிகானை தோற்கடித்து, அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார். சீன வீராங்கனை யிகானை தோற்கடித்த பி.வி. சிந்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அரையிறுதிப்போட்டியில் பி.வி. சிந்து உலக தரவரிசையில் மூன்றாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் ஒகுகாரா நொஜோமியை சந்திக்கிறார். புதுடெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய யூத் 19 வயதுக்குட்பட்டோருக்கான பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து, ஜப்பானின் ஒகுகாரா நொஜோமியைத் 18-21, 21-17, 22-20 என்ற கணக்கில் தோற்கடித்தவர்.

தங்கப்பதக்கத்தை திருப்பி கேட்டு ஒலிம்பிக் கமிட்டி உத்தரவு

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது 4×100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரஷியாவின் சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றவர் யூலியா செர்மோஷன்ஸ்க்கயா.

இந்தப் போட்டியின்போது இவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக முன்னர் புகார்கள் எழுந்தன. ஆனால், அப்போது அவரிடம் நடத்தப்பட்ட சிறுநீர் உள்ளிட்ட மாதிரி பரிசோதனைகளின்போது, அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியதற்கான தெளிவான ஆதாரம் கிடைக்கவில்லை.

ஆனால், போட்டியின்போது அவரிடமிருந்து பெறப்பட்ட சிறுநீர் மாதிரியை மறுபரிசோதனை செய்தபோது, யூலியா செர்மோஷன்ஸ்க்கயா (தற்போது வயது 30) தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை பயன்படுத்திய நிலையில் ஓடி வெற்றி பெற்றதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் அவருக்கு அளிக்கப்பட்ட தங்கப்பதக்கத்தை ரஷியா திருப்பி அளிக்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒலிம்பிக்கில் அவர் நிகழ்த்திய முந்தைய சாதனையும் பட்டியலில் இருந்து நீக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் போட்டியின்போது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை பயன்படுத்தியதாக ரஷிய விளையாட்டு வீர-வீராங்கனைகள் 14 பேரின்மீது குற்றம்சாட்டப்பட்டு, அவர்களது இரத்தம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகள் மறுபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, நினைவிருக்கலாம்.