சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இறுதிக் கட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி 124 ஓட்டங்களால் எதிரணியை விட முன்னிலை பெற்றுள்ளது.  

பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்தை தகர்த்து ஓட்டம் குவித்த சந்திமால்

P. சரவணமுத்து மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியிருந்த இப்போட்டியின் முதலாம் நாளில் பந்து வீச்சுத் துறையில் பங்களாதேஷ் ஆதிக்கத்தினை காண்பித்திருந்தது. எனினும் தினேஷ் சந்திமாலின் போராட்டத்துடன் இலங்கை அணி தமது முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது 7 விக்கெட்டுகளை பறிகொடுத்து 238 ஓட்டங்களைக் குவித்திருந்தவாறு போட்டியின் இரண்டாம் நாளான இன்று தமது  முதலாம் இன்னிங்ஸ் ஆட்டத்தினை தொடர்ந்தது.

களத்தில் அரைச் சதம் கடந்திருந்த சந்திமால் 86 ஓட்டங்களுடனும், இலங்கை அணியின் தலைவர் ரங்கன ஹேரத் 18  ஓட்டங்களுடனும் இன்றைய நாளினை ஆரம்பம் செய்தனர்.

போட்டி ஆரம்பித்து  அரைமணி நேரத்திற்குள் இலங்கை அணியின் 8 ஆவது விக்கெட் பறிபோனது. சகீப் அல் ஹஸனின் பந்து வீச்சில் செளம்யா சர்க்கரிடம் பிடிகொடுத்த ரங்கன ஹேரத் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இவர் 8 ஆம் விக்கெட்டிட்காக அரைச்சத (55) இணைப்பாட்டம் ஒன்றினை சந்திமாலுடன் சேர்ந்து பெற்று, அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 250 ஐ நெருங்க உதவினார்.

ஹேரத்தின் விக்கெட்டினை தொடர்ந்து மைதானத்தில் இருந்த சந்திமால் சதம் தாண்டி அணிக்கு இன்றைய நாளிலும் முதுகெலும்பாக செயற்பட்டார். நீண்ட நேர இன்னிங்ஸ் ஒன்றினை வெளிப்படுத்திய சந்திமால்,  இறுதியில் மெஹதி ஹஸனின் சுழலிற்கு இரையாகி இலங்கையின் 9ஆம் விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

ஆட்டமிழக்கும் போது, மொத்தமாக 300 பந்துகளினை எதிர்கொண்ட சந்திமால் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்களாக 138 ஓட்டங்களினை விளாசி இருந்ததுடன், இப்போட்டியின் மூலம் தனது 8ஆவது சர்வதேச டெஸ்ட் சதத்தினையும் பதிவு செய்து கொண்டார்.

சென்ற போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் பங்களாதேசுக்கு எதிராக அரைச் சதம் விளாசி இப்போட்டியிலும் ஜொலித்திருக்கும் சந்திமால், இப்போட்டியின் மூலம் பெற்ற சதம் பங்களாதேஷ் அணிக்கு எதிராக பெற்ற நான்காவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் 9ஆவது விக்கெட்டுக்கும் 8ஆம் விக்கெட் மூலம் பெறப்பட்ட அதே இணைப்பாட்டம் (55) சந்திமாலின் பெரும் பங்களிப்புடன் பெறப்பட்டிருந்தது.

பின்னர், இலங்கை அணி இறுதி துடுப்பாட்ட வீரர்கள் லக்மால் மற்றும் சந்தகன் ஆகியோர் சேர்த்த சில பெறுமதியான ஓட்டங்களுடன், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 113.3 ஓவர்களில் தமது முதல் இன்னிங்சுக்காக 338 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி இந்த இன்னிங்சில் பின்வரிசை மூலம் மொத்தமாக (7 ஆவது விக்கெட் பறிபோனதிலிருந்து) 143 ஓட்டங்களினைக் குவித்து எதிரணியின் நேற்றைய சவாலான பந்து வீச்சிற்கு பதிலடி கொடுத்து மீண்டது. இதில், இலங்கை அணியின் இறுதி விக்கெட்டாக பறிபோன சுரங்க லக்மால் விரைவாகப் பெற்றுக்கொண்ட 35 ஓட்டங்களுடன் தனது டெஸ்ட் வாழ்க்கையில் சிறந்த துடுப்பாட்டத்தினை இப்போட்டியின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில் மெஹதி ஹஸன் மொத்தமாக 3 விக்கெட்டுக்களையும், இலங்கை அணிக்கு இறுக்கம் தரும் வகையில் பந்து வீசிய சகலதுறை ஆட்டக்காரர் சகீப் அல் ஹஸன், முஹ்தபிசுர் ரஹ்மான் மற்றும் சுபாசிஸ் ரோய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இலங்கை அணியின் இன்னிங்சுடன் வீரர்களிற்கு மதிய போசன இடைவேளை வழங்கப்பட்டிருந்தது. பின்னர், பங்களாதேஷ் விளையாடும் இந்த நூறாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பிக்க தமிம் இக்பால் மற்றும் செளம்யா சர்க்கர் ஆகியோர்  மைதானம் விரைந்தனர்.

இரு ஆரம்ப வீரர்களும் சிறப்பாக துடுப்பாடி தமது அணிக்கு சிறந்த ஆரம்பத்தினை தந்திருந்ததோடு, இலங்கைப் பந்து வீச்சாளர்களுக்கும் சவாலாக காணப்பட்டனர்.

நீண்ட நேரம் நீடித்த இவர்களின் இணைப்பாட்டம் 95 ஓட்டங்களுடன் தகர்க்கப்பட்டது. இதன் மூலம் இலங்கை அணிக்கு மிகவும் தேவையாகவிருந்த எதிரணியின் முதல் விக்கெட்டினை மூன்றாம் நடுவரின் தீர்ப்புடன் ரங்கன ஹேரத் பெற்றுக் கொண்டார். பங்களாதேஷின் முதல் விக்கெட்டாக பறிபோன, இடது கை வீரர் தமீம் இக்பால் 6 பவுண்டரிகள் உள்ளடங்களாக 49 ஓட்டங்களுடன் தனது 22 ஆவது டெஸ்ட் அரைச் சதத்தினை தவறவிட்டிருந்தார்.

இக்பாலின் விக்கெட்டினை தொடர்ந்து போட்டியில் தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டிருந்தது. எனினும், தேநீர் இடைவேளையினை தொடர்ந்து அரைச் சதம் கடந்த செளம்யா சர்க்கரின் ஆட்டத்துடன் பங்களாதேஷ் ஓட்டங்களினை சேர்ப்பதில் நேரான நிலையிலையே காணப்பட்டிருந்தது. எனினும், லக்ஷன் சந்தகன் மூலம் பின்னர் செளம்யா சர்க்கரின் விக்கெட் வீழ்த்தப்பட்டது.

ஆட்டமிழக்கும் போது, சர்க்கர் மொத்தமாக 61 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார். இவரின் விக்கெட்டினைத் தொடர்ந்து மூன்றாம் விக்கெட்டுக்காக இம்ருல் கைஸ் மற்றும் சப்பீர் ரஹ்மான் ஆகியோரால் பிரயோஜனமான இணைப்பாட்டம் (62) அணிக்கு வழங்கப்பட்டிருந்தது.

எனினும், மீண்டும் பந்தினை கையில் பற்றிக்கொண்ட சந்தகன் 57 ஆவது ஓவரில்  தான் வீசிய நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளில் தொடர்ச்சியான முறையில் இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்து, பங்களாதேஷ் அணிக்கு மிரட்டல் விடுக்க, இம்ருல் கைஸ் (34) மற்றும் தய்ஜுல் இஸ்லாம் (0) ஆகியோர் ஓய்வறை திரும்பினர்.

இதனையடுத்து, சிறிது நேரத்தில் 5ஆவது விக்கெட்டினையும் லக்மாலின் பந்து வீச்சில், விரைவான முறையில் பறிகொடுத்த பங்களாதேஷ் அணி சிறப்பான ஆட்டம் ஒன்றினை வெளிக்கொணர்ந்த சப்பீர் ரஹ்மானையும் (42) பறிகொடுத்தது.

முடிவில் போட்டியின் இரண்டாம் நாள் நிறைவுற மேலதிக விக்கெட் இழப்பின்றி 60 ஓவர்களிற்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களினை பங்களாதேஷ் அணி குவித்திருந்தது.

புதிய துடுப்பாட்ட வீரர்களான சகீப் அல் ஹஸன் 18 ஓட்டங்களுடனும் பங்களாதேஷ் அணியின் தலைவர் முஸ்பிகுர் ரஹீம் 2 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

இலங்கையின் பந்து வீச்சில் இன்றைய நாளில், ஹெட்ரிக் வாய்ப்பொன்றினை தவறவிட்டிருந்த லக்ஷன் சந்தகன் 65 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

போட்டியின் மூன்றாம் நாள் நாளை தொடரும்