T20i போட்டிகளில் உலக சாதனை படைத்த ரோஹித் சர்மா

133
Rohit Sharma
@BCCI

இலங்கைக்கு எதிரான முதல் T20i போட்டியில் 44 ஓட்டங்களை அடித்ததன் மூலம் T20i கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை குவித்த வீரராக ரோஹித் சர்மா புதிய உலக சாதனை படைத்தார்.

இலங்கைக்கு எதிராக லக்னோவில் நேற்று (24) நடைபெற்ற முதலாவது T20i போட்டியில் 62 ஓட்டங்களால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா 37 ஓட்டங்களை எடுத்த போது, சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக இருந்த நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டிலை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து அசத்தினார்.

T20i கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, மார்டின் கப்டில் ஆகிய மூவரும் மாறி மாறி பிடித்துவருகின்றனர். இவர்கள் மூவருக்கும் இடையே முதலிடத்துக்காக கடும் போட்டி நிலவுகிறது.

112 சர்வதேச T20 போட்டிகளில் விளையாடி 3299 ஓட்டங்களைக் குவித்த மார்டின் கப்டில் முதலிடத்திலும், 97 போட்டிகளில் ஆடி 3296 ஓட்டங்களைக் குவித்த விராட் கோஹ்லி இரண்டாம் இடத்திலும் இருந்தனர். ரோஹித் சர்மா 3ஆம் இடத்தில் இருந்தார்.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிராக லக்னோவில் நேற்று நடைபெற்ற முதல் T20i போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களைக் (3307 ஓட்டங்கள்) குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

எவ்வாறாயினும், மார்டின் கப்டில் மற்றும் விராட் கோஹ்லி ஆகிய இருவருமே தொடர்ந்து T20i போட்டிகளில் விளையாடி வருவதால், இந்தப் பட்டியலில் முதலிடம் கைமாறிக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

34 வயதான ரோஹித் சர்மா இதுவரை 123 T20i போட்டிகளில் விளையாடி 4 சதங்கள், 26 அரைச்சதங்கள் உட்பட 3,307 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இதனிடையே, அண்மையில் நிறைவுக்கு வந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான T20i தொடரில் தடுமாறிய இஷான் கிஷன் இலங்கைக்கு எதிரான முதல் T20i போட்டியில் 30 பந்துகளில் அரைச்சதம் அடித்ததுடன், 56 பந்துகளில் 89 ஓட்டங்களைக் குவித்தார்.

இதன்மூலம் சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் அடித்த இந்திய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் ரிஷப் பான்ட் 65 ஓட்டங்களை அடித்து இருந்ததே சாதனையாக இருந்தது.

இதேவேளை, இலங்கை அணிக்கு எதிரான முதல் T20i போட்டியில் யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்தார்.

இந்தியாவுக்காக T20i போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரராக சஹால் 67 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா 66 விக்கெட்டுகளுடன் 2ஆவது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 61 விக்கெட்டுகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<