மீண்டும் உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலியாவிடம் இழந்த இந்தியா

ICC Youth ODI World Cup 2024

42
ICC Youth ODI World Cup 2024

19 வயதின் கீழ்ப்பட்ட இளையோர் கிரிக்கெட் அணிகளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 79 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றிருக்கின்றது.

>>ரோஹித் சர்மாவின் உலக சாதனையை சமன் செய்த மேக்ஸ்வெல்<<

தென்னாபிரிக்காவில் நடைபெற்று வந்த இளையோர் உலகக் கிண்ணத்தொடரின் இறுதிப் போட்டி நேற்று (11) பெனோனி அரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தொடரின் இறுதிப் போட்டிக்கு அரையிறுதிகளில் பாகிஸ்தானை வீழ்த்திய அவுஸ்திரேலிய அணியும், தென்னாபிரிக்காவை வீழ்த்திய இந்திய அணியும் தெரிவாகியிருந்தன.

தொடர்ந்து இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  அவுஸ்திரேலிய இளம் அணி முதலில் துடுப்பாடி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 253 ஓட்டங்கள் எடுத்தது. அவ்வணிக்காக அதிகபட்ச ஓட்டங்களை ஹர்ஜாஸ் சிங் 55 ஓட்டங்களுடன் பதிவு செய்தார். இந்திய பந்துவீச்சில் ராஜ் லிம்பனி 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணியானது 43.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 174 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியினைத் தழுவியதோடு உலகக் கிண்ணத்தையும் பறிகொடுத்தது.

இந்திய இளம் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அதார்ஷ் சிங் 47 ஓட்டங்கள் எடுக்க, முருகன் அபிஷேக் 42 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அவுஸ்திரேலிய இளம் அணியின் வெற்றியை மஹ்லி பேர்ட்மன், ராப் மக்மிலன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து உறுதி செய்திருந்தனர்.

ஏற்கனவே ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டி என்பவற்றினை அவுஸ்திரேலியாவிடம் பறிகொடுத்த இந்தியா, இந்த தோல்வி மூலம் இளையோர் உலகக் கிண்ணத் தொடரினையும் மீண்டும் அவுஸ்திரேலியாவிடம் இழந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போட்டியின் சுருக்கம்

அவுஸ்திரேலியா – 253/7 (50) ஹர்ஜாஸ் சிங் 55, ராஜ் லிம்பானி 38/3

இந்தியா – 174 (43.5) அதார்ஷ் சிங் 47, மஹ்லி பேர்ட்மன் 15/3, ராப் மக்மிலன் 43/3

முடிவு – அவுஸ்திரேலியா 79 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<