ஆப்கான் அணியை இலகுவாக வீழ்த்திய மே.தீவுகள்

60
©ICC

எவின் லுவிஸின் அதிரடி அரைச்சதம் மற்றும் கெஸ்ரிக் வில்லியம்ஸின் மூன்று விக்கெட்டுகளின் உதவியோடு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 30 ஓட்டங்களால் இலகு வெற்றியை பெற்றது. 

இந்தியாவின் லக்னோவில் வியாழக்கிழமை (14) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் விக்கெட்டை ஆரம்பத்திலேயே வீழ்த்த ஆப்கானிஸ்தான் அணியால் முடிந்தது. 

பந்தை சேதப்படுத்திய நிகோலஸ் பூரானுக்கு போட்டித்தடை

மேற்கிந்திய தீவுகள் …….

தனது கன்னி டி20 சர்வதேச போட்டியில் களமிறங்கிய பிரன்டன் கிங் நான்கு ஓட்டங்களை பெற்றிருந்தபோது, முஜீபுர் ரஹ்மான் அவரை வெளியேற்றினார். 

எனினும் ஷிமோர் ஹெட்மியர் மற்றும் எவின் லுவிஸ் இரண்டாவது விக்கெட்டுக்கு 87 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் மொத்த ஓட்டங்களில் மூன்றில் இரண்டு பகுதியை தனியே குவித்த லுவிஸ் 41 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 68 ஓட்டங்களை பெற்றார். ஹெட்மியர் 21 பந்தியில் 21 ஓட்டங்களை பெற்றார்.

தொடர்ந்து வந்த தினேஷ் ராமிடின் இதே வேகத்தில் ஆடி 19 பந்தில் 20 ஓட்டங்களையும் டி-20 போட்டியில் முதல் முறை அணித்தலைவராக செயற்படும் கிரோன் பொல்லார்ட் 22 பந்தில் 32 ஓட்டங்களையும் விளாசினர். 

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை பெற்றது. 

பதிலெடுத்தாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 7 ஓட்டங்களை பெறுவதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்ததோடு, அதன் பின் அந்த அணி மீளவே இல்லை. முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்த அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. 

மத்தியவரிசையில் நஜிபுல்லா சத்ரான் அதிகபட்சமாக 22 பந்துகளில் 27 ஓட்டங்களை பெற்றார். 

மேற்கிந்திய தீவுகள் சார்பில் வில்லியம்ஸ் தனது நான்கு ஓவர்களுக்கும் 17 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் சகலதுறை ஆட்டத்தை வெளிப்படுத்தி பொல்லார்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என முன்னிலை பெற்றதோடு இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி இதே மைதானத்தில் வரும் சனிக்கிழமை (16) நடைபெறவுள்ளது. 

போட்டி சுருக்கம்

மேற்கிந்திய தீவுகள் – 164/5 (20) – எவின் லுவிஸ் 68, கிரோன் பொல்லார்ட் 32, ஷிமோர் ஹெட்மியர் 21, குல்பதின் நயீப் 2/24

ஆப்கானிஸ்தான் – 134/9 (20) – நஜிபுல்லா சத்ரான் 27, அஸ்கர் அப்கான் 25, கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3/17, கிரோன் பொல்லார்ட் 2/17

முடிவு – மேற்கிந்திய தீவுகள் 30 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<