தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன் நிறைவுக்கு வந்த 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் பந்தை சேதப்படுத்தி சிக்கிய விவகாரம் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய கரும் புள்ளிளை ஏற்படுத்திய சம்பவமாகவும் இது மாறியது.

இதன்படி, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித்தின் தலைவர் பதவியும், வோர்னரின் உப தலைவர் பதவியும் அதிரடியாகப் பறிக்கப்பட்டது. மறுபுறத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஸ்மித்துக்கு ஒரு டெஸ்ட்டில் விளையாடத் தடை விதிக்கப்பட்டதுடன், 100 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டது. அதேநேரம் கெமரூன் பேன்கிராப்ட்டுக்கு 75 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.

பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்ட ஆஸி. அணி

இதனையடுத்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்த அந்நாட்டு கிரிக்கெட் சபை, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் உப தலைவர் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு ஒரு வருட போட்டித் தடையும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பென்கிரோப்ட்டுக்கு 9 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டது.

இதன்படி, ஸ்மித் மற்றும் பேன்கிராப்ட்டுக்கு 2 வருடங்களுக்கு அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்க முடியாது. அதேபோன்று வோர்னர் இனி எந்த காலத்திலும் அவுஸ்திரேலிய தலைவர் பதவியை ஏற்க முடியாது. அத்துடன், எதிர்வரும் ஒரு வருடங்களுக்கு உள்ளுர் போட்டிகளில் மாத்திரம் இவர்களுக்கு விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தடைகளுக்கு மத்தியில் ஸ்மித்தும், வோர்னரும் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் விளையாட முடியாது என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்தது.

இதற்கிடையே ஸ்மித் மற்றும் வோர்னர் மீதான ஓர் ஆண்டு தடை குறித்து உலகின் முன்னாள் கிரிக்கெட் பிரபலங்களும், இலங்கை வீரர்களும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார, க்ரிக் பஸ் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை எடுத்திருப்பது சரியான முடிவு எனவும், இது உலகின் ஏனைய கிரிக்கெட் சபைகளுக்கு சிறந்த முன் உதாரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், ”அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையினால் இந்த வீரர்களுக்கு வழங்கப்பட்ட தண்டணைகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. ஏனைய கிரிக்கெட் சபைகளும் இந்த முடிவை முன் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் தமது அணியின் அதி சிறந்த வீரர்களுக்கு ஏன் இவ்வாறானதொரு தண்டணையை அந்நாட்டு கிரிக்கெட் சபை வழங்கியிருக்கின்றது என்பது பற்றியும் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆனால் கிரிக்கெட் விளையாட்டு கனவாண்களின் விளையாட்டு என்பதை அவுஸ்திரேலியா இந்த தண்டணை மூலம் வெளிக்காட்டியுள்ளது. அதுவும், வளர்ந்து வருகின்ற இளம் வீரர்களுக்கு இது சிறந்த பாடமாக அமையும். ஆனால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்க ஐ.சி.சியினால் முன்னெடுக்கின்ற நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை. உண்மையில் ஒரு வீரராக இந்த தண்டணைக்கு எனது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் பந்தை சேதப்படுத்துவது மிகப் பெரிய குற்றமாகும். அதனை மன்னிக்கவே முடியாது. எனவே எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான சம்பவங்களை தவிர்க்க ஐ.சி.சி இன்னும் இறுக்கமான தண்டணைகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கிரிக்கெட் நாடகமாக மாறியுள்ள ஆஸி வீரர்களின் சூழ்ச்சி

அத்துடன், ஸ்மித் மற்றும் வோர்னர் அவுஸ்திரேலிய அணியின் மிகச் சிறந்த வீரர்கள். எனினும், துரதிஷ்டவசமாக அவர்கள் இவ்வாறான சம்பவத்துக்கு மூல காரணியாக இருந்துவிட்டனர். அவர்கள் திட்டமிட்டுதான் இந்த காரியத்தை செய்ததை ஒப்புக்கொண்ட பிறகும் இவ்வாறான தண்டணைகள் வழங்கப்பட்டுள்ளது. யார் என்ன சொன்னாலும் விளையாட்டுக்கு உள்ள மரியாதையை பாதுகாக்க வேண்டியது கிரிக்கெட் சபைகளின் பொறுப்பாகும். எனவே இவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வருட போட்டித் தடையானது அனைவருக்கும் சிறந்த முன் உதாரணமாகும்” என்றார்.

  • எமது வீரர்கள் பந்தை சேதப்படுத்தமாட்டார்கள் – மெதிவ்ஸ்

இதேநேரம், எமது வீரர்கள் பந்தை ஒரு போதும் சேதப்படுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக இலங்கை ஒரு நாள் மற்றும் டி-20 அணியின் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4 அணிகள் பங்கேற்கும் மாகாணங்களுக்கிடையிலான நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் அறிமுக விழா, கடந்த 27ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றதுடன், இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

”கடந்த சில தினங்களாக கிரிக்கெட் உலகில் நிறைய விடயங்களை பார்த்தும், கேட்டும் வருகின்றோம். பாரிய குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு சிறிய சம்பவம் ஒன்று போதுமானது. எமது வீரர்கள் ஒருபோதும் பந்தை சேதப்படுத்த மட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கடந்த காலங்களில் நாங்கள் அவ்வாறு செய்ததுமில்லை. கிரிக்கெட்டின் மகத்துவத்தைப் பாதுகாத்து எதிர்காலத்தை நோக்கி பயணிக்க சிறந்த சந்தர்ப்பமாக இந்த தொடரை எமது வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

  • அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு மிகப் பெரிய கலங்கம் – திலங்க சுமதிபால

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால கருத்து வெளியிடுகையில், ”கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் பங்களிப்பு அளப்பெரியது. எனினும், தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒரு சில வீரர்களின் மோசமான செயற்பாடுகள் அந்த நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தி விட்டது.

வோர்னரின் தடையால் குசல் பெரேரா ஐ.பி.எல் இல்

அதிலும் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் திஸர பெரேரா நடந்துகொண்ட விதம் தொடர்பில் பெருமைப்படுகிறேன். அவரின் நடத்தை அனைத்து வீரர்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும். அந்த சந்தர்ப்பத்தில் திஸரவும் மோசமாக நடந்துகொண்டிருந்தால் மிகப் பெரிய விபரீதத்தை சந்திக்க வேண்டி ஏற்பட்டிருக்கும்” என தெரிவித்தார்.

கிரிக்கெட் ஒரு கனவாண்களின் விளையாட்டு என்பதை அனைவரும் அறிவர். நேர்மையுடன் விளையாட வேண்டும் என்று நான் நம்புகிற விளையாட்டு ஆகும். என்ன நடந்ததோ அது துரதிஷ்டவசமானது. ஆனால் கிரிக்கெட் விளையாட்டில் நேர்மையை நிலை நாட்ட சரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது ஒரு போட்டியின் முடிவு மட்டும்தானா..? இல்லை  ஒரு தொடரின் முடிவா…? இல்லை… இது ஒரு சகாப்தத்தின் முடிவாகவும் இருக்கலாம். கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள். நேற்று வரை உலக சம்பியன் பட்டத்தோடு வலம் வந்த அவுஸ்திரேலியர்கள் இன்று ஏமாற்றுக்கார முத்திரையோடு முடங்கிக் கிடக்கிறார்கள். ஒரே ஒரு சம்பவம் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் ஆணி வேரை ஆட்டிவிட்டது. அவர்களுக்கு அவர்களே அசிங்கத்தைத் தேடிக்கொண்டார்கள் என்பதுதான் அனைவரதும் பொதுவான கருத்தாக அமைந்துள்ளது.