மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் நாடுகளுக்கு தடை

111

உலக மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் நடத்தப்படுகின்ற போட்டிகளில் பங்கேற்பதற்கு ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிப்பதற்கு சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

உக்ரைன் நாடு மீது ரஷ்யா கடந்த 24ஆம் திகதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.

இதனிடையே, ரஷ்யா இன்று (02) ஏழாவது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால், சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதிக்க முன்வந்துள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை அடுத்து, ரஷ்யா மற்றும் அதன் ஆதரவு நாடான பெலாரஸ் ஆகிய நாடுகளின் விளையாட்டு அணிகளை சர்வதேச அளவில் நடைபெறும் அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என்று, அனைத்து விளையாட்டு அமைப்புகளுக்கும் சர்வதேச ஒலிம்பிக் குழு பரிந்துரை செய்தது.

இதனையடுத்து சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA), ஐரோப்பிய கால்பந்து சங்கம், சர்வதேச பெட்மிண்டன் சம்மேளனம், சர்வதேச ஹொக்கி சம்மேளனம், சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம், சர்வதேச ஐஸ் ஹொக்கி சம்மேளனம், சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் மற்றும் உலக ரக்பி சம்மேளனம் ஆகிய விளையாட்டு அமைப்புகள் ரஷ்ய மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு உடனடியாக தடைகளை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், ரஷ்ய மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கேற்பதற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்படுவதாக சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் இன்று (12) அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரஷ்யா மற்றும் பெலாரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உலக மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற எந்தவொரு மெய்வல்லுனர் போட்டிகளிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இதன்படி, உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப், உலக உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் மற்றும் உலக வேகநடை சம்பியன்ஷிப் ஆகிய தொடர்களில் குறித்த 2 நாட்டு வீரர்களுக்கும் பங்கேற்க முடியாது.

அதேபோல, குறித்த இரண்டு நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து அடுத்த வாரம் இடம்பெறவுள்ள நிர்வாகக்குழு கூட்டத்தின் போது விவாதிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ரஷ்ய நாட்டு மெய்வல்லுனர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபணமாகியதை அடுத்து ரஷ்ய மெய்வல்லுனர் சங்கத்தை தடைசெய்வதற்கு சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

மேலும், அந்த நாட்டு வீரர்களுகள் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்கவோ அல்லது போட்டியிடவோ அனுமதிக்கப்படவில்லை.

இருப்பினும், அவர்களுக்கு நடுநிலை பிரிவில் போட்டியிட அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையின் மூலம் ரஷ்ய நாட்டு வீரர்கள் எதிர்காலத்தில் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அதன்படி, இம்மாதம் ஓமானில் நடைபெறவுள்ள உலக குழுநிலை வேகநடை சம்பியன்ஷிப் மற்றும் உலக உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர்களில் களமிறங்க இருந்த ரஷ்ய மற்றும் பெலாரஸ் நாட்டு வீராங்கனைகள் அதில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இழக்கவுள்ளனர்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<