சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்த மடவளை வேகப்புயல் சிராஸ்

1777

இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால பின்னடைவுகளுக்கு சிரேஷ்ட வீரர்களின் உபாதைகள் முக்கிய காரணமாக மாறிவிட்டன. இதன் காரணமாக, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அடுத்தடுத்து படுதோல்வி அடைந்த இலங்கை கிரிக்கெட் அணி அடுத்ததாக தென்னாபிரிக்காவில் 3 வகையான போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இலங்கை குழாத்தில் நான்கு புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு இலங்கை தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்திருந்தது. இதில் உள்ளூர் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற மணிக்கு 130 தொடக்கம் 135 கிலோ மீற்றர் வரையிலான வேகத்தில் பந்துவீசும் திறமை கொண்ட வலதுகை வேகப்பந்து வீச்சாளரான 23 வயதுடைய மொஹமட் சிராஸ், இன்று (13) ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியில் மொஹமட் சிராஸ் – உத்தியோகபூர்வ அறிவிப்பு

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட குழாத்தினை

அந்த வகையில் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இதுவரை காலத்திற்குள் ஏழு தமிழ் பேசுகின்ற வீரர்கள் விளையாடியிருக்கின்றனர். இவர்களுள் ரஸல் ஆர்னல்ட், உவைசுல் கர்ணைன், நவீட் நவாஸ், பிரதீப் ஜெயப்பிரகாஷ், முத்தையா முரளிதரன், ஜெஹான் முபாரக் மற்றும் பர்வீஸ் மஹ்ரூப் ஆகியோர் பலராலும் அறியப்பட்டவர்களாக உள்ளனர்.  

இவர்களுடன் தற்போது தேசிய அணியில் வாய்ப்புப் பெற்றிருக்கும் மொஹமட் சிராஸ் தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் களமிறங்கினால் மேலுள்ள வீரர்கள் வரிசையில் புதிய வீரராக அவர் வரலாற்றில் இடம்பெறுவார்.  

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை பரைசாற்றும் வகையில், முயற்சியைக் கைவிடாமல் போராட்ட குணம் படைத்த ஒரு துடிப்பான வீரராக விளங்கியவர் மொஹமட் சிராஸ். கண்டி மடவளை மதீனா தேசிய பாடசாலையில் இருந்து கிரிக்கெட் விளையாட்டுக்கு பிரவேசித்த அவர், பொருளாதார நெருக்கடி மற்றும் கஷ்டத்துக்கு மத்தியிலும் பிராந்திய கழகமட்டப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி, முதல்தரப் போட்டிகளிலும் பிரகாசித்தார்.

இதன் பிரதிபலனாக மிகவும் குறுகிய காலத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்ட அவர், தற்போது இலங்கை தேசிய அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பையும் பெற்றுக்கொண்டார். இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலத்துக்கு இன்று 24 வயதாகின்றது.

அதற்குள் நட்சத்திர அந்தஸ்தை எட்டிவிட்டார் சிராஸ். கடந்த மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இவர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளைக் கைப்பற்றி பட்டையைக் கிளப்ப, இலங்கை அணிக்கு விளையாடுவதற்கு முன் யாருடா இந்தப் பையன்? என்று முழு இலங்கை மக்களினதும் அன்பையும், ஆதரவையும் ஒரே நாளில் பெற்றுவிட்டார் சிராஸ்.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் இலங்கையின் தோல்வி ஓட்டம் முடிவுக்கு வருமா?

சிரேஷ்ட வீரர்களின் ஓய்வுக்கு பின்னர் சர்வதேச அரங்கில் தொடர்ந்தும் தடுமாறி வந்த இலங்கை அணி

இதுஇவ்வாறிருக்க, இன்று (13) தனது பிறந்த நாளைக் கொண்டாடும் மொஹமட் சிராஸ் தென்னாபிரிக்காவுக்கு புறப்பட்டுச் செல்வதற்குமுன் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விஷேட நேர்காணலை இங்கு எழுத்து வடிவில் பார்க்கலாம்.

  • முதற்தடவையாக தேசிய அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். என்ன நினைக்கிறீர்கள்?

முதலில் அல்லாஹ்வுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அல்ஹம்துலில்லாஹ். அதன்பிறகு எனது பெற்றோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால், அவர்கள் இல்லாவிட்டால் நான் இந்த அளவு தூரத்துக்கு வந்திருக்க முடியாது. என்னை இந்த இடத்துக்கு கொண்டு வருவதற்கு பல கஷ்டங்களையும், துன்பங்களையும் அவர்கள் அனுபவித்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக, நான் தென்னாபிரிக்க தொடருக்காக தெரிவானதைக் கேட்ட எனது தாயார் அடைந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. எனவே, என்னை உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்க வேண்டும் என கனவு கண்ட எனது தாய்க்கு நான் சந்தோஷத்தைக் கொடுத்துவிட்டேன்.   

  • உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

எனது பெயர் கட்டுப்புள்ளே கெதர மொஹமட் சிராஸ் ஷஹாத். எனக்கு தற்போது 23 வயது. எனது தந்தை மோட்டார் கார் நிறுவனமொன்றில் தொழிலாளியாக உள்ளார். எனது தாயாரின் பெயர் சரீகா. அவர் வீட்டில் உள்ளார். எனக்கு ஒரு அக்காவும், ஒரு தம்பியும் உள்ளனர்.  

  • ஏன் நீங்கள் கிரிக்கெட் விளையாட்டை தெரிவு செய்தீர்கள்?

நான் கண்டியிலுள்ள முன்னணி முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றான மடவளை மதீனா தேசிய பாடசாலையில் கல்வி கற்றேன். கண்டியில் கிரிக்கெட்டுக்கு பெயர் போன ஒரே இடம் மடவளைதான். எனவே, சிறுவயது முதல் கிரிக்கெட்டை தான் மிகவும் நேசித்து விளையாடினேன். அதேபோல, நான் படிக்கும் போது பாடசாலையில் கிரிக்கெட் விளையாட்டு மாத்திரம் தான் இருந்தது. அதனால் நான் கிரிக்கெட் விளையாட்டை தெரிவு செய்தேன்.

எனினும், வீட்டில் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் எனது பெற்றோருக்கு நான் கிரிக்கெட் விளையாடுவது பெரிதாக விரும்பவில்லை. அவ்வாறான சூழ்நிலையிலும் பெற்றோருடன் பிடிவாதம் செய்துதான் கிரிக்கெட் விளையாடினேன்.

  • உங்களுடைய கிரிக்கெட் ஆரம்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் 13 வயதில் கிரிக்கெட் விளையாட்டை ஆரம்பித்தேன். 15 வயதுக்குட்பட்ட பிரிவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது மாவட்ட மட்ட தெரிவுப் போட்டிகளுக்காக எமது பாடசாலையில் இருந்து 3 பேர் தேர்வாகியிருந்தனர். அந்த தெரிவுப் போட்டியில் நான் மட்டும் தான் மாவட்ட அணிக்காக எமது பாடசாலையிலிருந்து தெரிவாகினேன். உண்மையில் மாவட்ட அணிக்கு தெரிவாகுவேனா என எனக்கு துளியேனும் நம்பிக்கை இருக்கவில்லை. ஆனாலும் பந்துவீச்சில் வெளிக்காட்டிய திறமையை அடிப்படையாக வைத்து மாவட்ட அணிக்கு என்னை தெரிவு செய்தார்கள். அத்துடன், கிரிக்கெட்டில் எனக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும், அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும்படியும் அங்குவந்த பயிற்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.  

புதிய மாற்றங்களுடனான அணித்தெரிவு பற்றி விளக்கும் அசந்த டி மெல்

அடுத்த வாரம் நடைபெறவுள்ள தென்னாபிரிக்க சுற்றுப் பயணத்தின் போதான டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 17 பேர்

எமது பாடசாலையின் கிரிக்கெட் பயிற்சியாளர்களான றிகாஸ் மற்றும் நஜிமி ஆகியோரது வழிகாட்டலுடன் கிரிக்கெட் பயிற்சிகளை முன்னெடுத்தேன். அதேபோல, ஆரம்பம் முதல் கிரிக்கெட் விளையாட்டை முன்னெடுப்பதற்கான சகல வசதிகளையும் இன்றுவரை சகோதரர் இன்சாப்; செய்து தந்தார்.

  • பாடசாலை மட்டத்தில் நீங்கள் நிகழ்த்திய சாதனைகள் என்ன?

2014ஆம் ஆண்டு சண்டே ஒப்சவர் அதிசிறந்த பாடசாலை வீரருக்கான விருதை சில்வர் பிரிவில் பெற்றுக்கொண்டேன். அதேபோல, பாடசாலை மட்டப் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த துடுப்பாட்ட வீரர் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளேன்.

  • முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் எப்போது விளையாட ஆரம்பித்தீர்கள்?

நான் உயர்தரத்தில் கலைப் பிரிவில்தான் கல்வி கற்றேன். அப்போது நாங்கள் பிரிவு 3 (டிவிஷன் 3) பாடசாலையாக இருந்தோம். அந்த காலத்தில் 19 வயதுக்குட்பட்ட எமது பாடசாலை அணிக்காகவும் விளையாடினேன். உண்மையில் அதுவும் எனது ஒருசில நண்பர்களின் உதவியோடுதான் பயிற்சிகளை மேற்கொண்டு விளையாடியிருந்தேன். அதன்பிறகு 2011ஆம் ஆண்டு குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது கண்டி மாவட்ட பயிற்றுவிப்பாளராக இருந்த வசந்த அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி, தேசிய அணியில் விளையாடுவதற்கான அனைத்து தகுதிகளும் என்னிடம் இருப்பதாகத் தெரிவித்து குருநாகல் கழகத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொடுத்தார்.

உண்மையில் அந்த கழகத்துக்காக விளையாடிய போது பயிற்றுவிப்பாளராக எல்லப்பொல இருந்தார். எனது பந்துவீச்சின் சிறப்பம்சமே ஸ்விங் செய்வதுதான். எனவே எனது திறமையைப் பார்த்தவுடன் அவருக்கு என்மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. அந்த ஒரே காரணத்துக்காக அவரும் என்னை சிறந்த முறையில் வழிநடத்தி தேசிய அணிக்காக விளையாட வைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்தார். எனவே, 2011 முதல் 2015 வரை குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடியிருந்தேன்.

இதற்கிடையே 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்துக்கு முன்னோடியாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பங்களிப்புடன் மனிகிரேம் நிறுவனத்தின் அனுசரணையில் இலங்கையின் அதிவேக பந்துவீச்சாளர் யார் என்பதை இனங்காண்பதற்கான தெரிவுப் போட்டிகள் மாவட்ட ரீதியாக நடைபெற்றிருந்தன. இதில் கண்டி மாவட்டம் சார்பாக நடைபெற்ற தெரிவுப் போட்டிகள் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் என்னோடு இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான லஹிரு குமாரவும் பங்குபற்றியிருந்தார். லஹிரு குமார 137 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீச, நானும் அதை சமப்படுத்தியிருந்தேன். ஆனால் எனக்கு மேலதிகமாக பந்துவீசுவதற்கு வாய்ப்பொன்று கிடைத்தது. அந்த பந்தில் தான் நான் 138 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசி தேசிய மட்ட சுற்றுப் போட்டிக்குத் தெரிவாகினேன். அதன்பிறகு, இறுதி தேர்வுகள் காலியில் நடைபெற்றதுடன், என்னால் இறுதி குழாமுக்கு தெரிவாக முடியாமல் போனது.

இந்த நேரத்தில்தான் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் வேகப்பந்து வீச்சுப் பயிற்சியாளராக இருந்த சமில கமகேயின் முயற்சியினால் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியது. அப்போது அந்த கழகத்தின் பயிற்சியாளராக முத்துமுதலிகே புஷ்பகுமார இருந்தார். அதன்பிறகு கொழும்புக்குச் சென்று பயிற்சி முகாம்களில் இணைந்துகொண்டேன். 2016இல் 23 வயதுக்குட்பட்ட மத்திய மாகாண அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்ததுடன், அதேவருடம் கோல்ட்ஸ் அணிக்காக ப்ரீமியர் லீக்கிலும் களமிறங்கினேன். முவர்ஸ் கழகத்துடனான அந்தப் போட்டியில் 5 ஓவர்கள் மாத்திரம் பந்துவீசி ஒரு விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்ற முடிந்தது. அதன்பிறகு கையில் ஏற்பட்ட உபாதையினால் 2 போட்டிகளில் மாத்திரம்தான் என்னால் விளையாட முடிந்தது. எனினும், அதே வருடம் ப்ரீமியர் லீக்கில் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தேன். தொடர்ந்து 2017இல் 5 போட்டிகளில் கோல்ட்ஸ் அணிக்காக விளையாடினேன். எனினும், எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் போனது.

இதுஇவ்வாறிருக்க, 2018/2019 பருவகாலப் போட்டிகளுக்காக என்.சி.சி, ராகம உள்ளிட்ட முன்னணி கழகங்களில் இருந்து அழைப்புகள் கிடைத்தன. எனினும், எனது பந்துவீச்சுத் திறமையை வெளிப்படுத்தும் நோக்கில் கடந்த வருட இறுதியில் பி.ஆர்.சி கழகத்துடன் இணைந்து கொண்டேன்.

அத்துடன், கடந்த நவம்பர் மாதம் 31ஆம் திகதி ஆரம்பமான இப்பருவகாலத்துக்கான ப்ரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியிலேயே பதுரெலிய கழகத்துக்கு எதிராக விளையாடுவதற்கான வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. அந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளையும், அதன்பிறகு நடைபெற்ற நீர்கொழும்பு கழகத்துடனான போட்டியில் 6 விக்கெட்டுகளையும், தொடர்ந்து நடைபெற்ற செரசன்ஸ் கழகத்துடனான போட்டியில் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினேன். இறுதியாக கொழும்பு கிரிக்கெட் கழகத்துடனான போட்டியில் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினேன்.

இதன்பிறகு தான் கடந்த மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கெதிரான உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் மூலம் இலங்கை அணிக்காக முதல்தடவையாக விளையாடும் வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டேன்.

  • இதற்கு முன் தேசிய அணிக்காக விளையாடியுள்ளீர்களா?

நான் படிக்கின்ற போது பாடசாலை கிரிக்கெட்டில் டிவிஷன் 3 பாடசாலையாக இருந்தோம். எனினும், பாடசாலை காலத்தில் 13 வயதுக்குட்பட்ட அணிக்காக 2008இல் முதற்தடவையாக விளையாடினேன். அதன்பிறகு, 15, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் பாடசாலைக்காக விளையாடியுள்ளேன். எனவே பாடசாலை காலத்தில் தேசிய மட்டத்தில் இதற்குமுன் எந்தவொரு அணிக்காகவும் நான் விளையாடவில்லை. எனினும், கடந்த மாதம் நடைபெற்ற அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்காக முதற்தடவையாக விளையாடினேன். தற்போது தேசிய அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளேன்.

  • இலங்கை அணிக்காக விளையாடிய அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

மிகவும் குறுகிய காலத்தில் இலங்கை அணிக்காக விளையாடக் கிடைத்தமையிட்டு மிகவும் சந்தோஷமடைந்தேன். நான் இலங்கை அணிக்காக தெரிவாகியுள்ளேன் என்ற செய்தியைக் கேட்டவுடன் உண்மையில் பதற்றமும், பயமும் ஏற்பட்டது.  

ஏனென்றால் இதுவரை காலமும் தேசிய அணிக்காக நான் விளையாடியது கிடையாது. அதேபோல, மைதானத்துக்குச் சென்று என்ன செய்யப் போவேனோ என்ற பதற்றமும் ஏற்பட்டது. ஆனால் எதைப் பற்றியும் யோசிக்க வேண்டாம் எனவும், கழக மட்டத்தில் எவ்வாறு திறமையை வெளிப்படுத்துகின்றேனோ அதேபோல இந்த தொடரிலும் விளையாடும்படி பயிற்சியாளர்களும், சிரேஷ்ட வீரர்களும் எனக்கு அறிவுரை வழங்கியிருந்தனர்.

எனவே, தேவையில்லாமல் மனதை குழப்பிக் கொள்ளாமல் முதல் போட்டியிலேயே சிறப்பாக விளையாடினேன். இறுதியில் அதற்கான பெறுபேறுகளையும் பெற்றுக்கொண்டேன். கொழும்பில் நடைபெற்ற முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளையும், ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினேன்.

  • தொடர்ந்து தேசிய அணியில் இடம்பெறுவதற்கு உங்களுக்கு முன் வந்த சவால்கள் என்ன?

உண்மையில் இந்த அனைத்துக்கும் அல்லாஹ்தான் துணையாக இருந்தான். என்னுடைய ஆரம்பகால பயிற்சியாளர்கள் தொடர்ந்து பயிற்சி செய்துவரும் படியும், அதற்கான முயற்சியை கைவிட வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கினார்கள். சந்தர்ப்பங்கள் கிடைத்தால் அதை தவறவிட வேண்டாம் என தெரிவித்திருந்தனர். ஆனாலும், ஆரம்பத்தில் கிரிக்கெட்டில் முன்னுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கவில்லை. 2011இல் முதல்தரப் போட்டிகளில் விளையாடுவதற்காக கொழும்புக்கு வந்தேன். அப்போது நான் சிறப்பாக பந்துவீசுகின்றேன் என தெரிவித்து முவர்ஸ் கழகத்தில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிட்டியது.

எனினும், எந்தவொரு அறிவிப்பும் இன்றி என்னை சிலாபம் மேரியன்ஸ் கழகத்துடன் இணைத்துக் கொண்டதாக அறிவித்தனர். இதனால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். மிகவும் எதிர்பார்ப்புடன் கொழும்புக்கு வந்த எனக்கு ஏமாற்றம் கிடைத்தது. இதனால் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஒதுங்கிக் கொள்ளவும் நினைத்தேன். ஆனாலும் அந்த கழகத்துக்காக ஒரு போட்டியில் கூட எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. மறுபடியும் நான் குருநாகல் கழகத்துடன் இணைந்து கொண்டேன். அங்குள்ள பயிற்சியாளர்களின் ஊக்கத்துடன் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு இன்று இந்த நிலைமைக்கு வந்தேன்.

  • உங்களுடைய இதுவரையான பணயத்துக்கு உதவி செய்தவர்கள் பற்றிச் சொன்னால்?

எமது பாடசாலையின் கிரிக்கெட் பயிற்சியாளர்களான றிகாஸ் மற்றும் நஜிமிக்கும், கிரிக்கெட் விளையாட்டை முன்னெடுப்பதற்கான சகல வசதிகளையும் ஆரம்பம் முதல் இன்றுவரை எனக்கு செய்து கொடுத்த சகோதரர் இன்சாப், எனது பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள், எனது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • எதிர்கால இலக்கு என்ன?

தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் இறுதி பதினொருவர் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் எனது முழு திறமையையும் வெளிப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன். அதேபோல, எதிர்காலத்திலும் தொடர்ந்து இலங்கை அணிக்காக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளேன்.

இறுதியாக

இலங்கை அணியில் தற்போது புதிய இளம் அணியொன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணியின் அணுகுமுறையும் விரைவில் மாற்றம் காணவுள்ளது. 1990ஆம் ஆண்டு தொடக்கத்தில் இலங்கை அணி எப்படியொரு மாற்றத்தைக் கண்டதோ, அப்படியொரு மாற்றம் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் காரணங்களில் ஒருவராய், எதிர்காலத் திட்டங்களின் மையப் புள்ளியாய் இருப்பவர், இருக்கப் போகிறவர் இந்த 24 வயதுடைய மொஹமட் சிராஸ்தான்!

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க