சீரற்ற காலநிலையால் மாற்றம் செய்யப்பட்ட இலங்கை – பங்களாதேஷ் A தொடர்

57

சுற்றுலா பங்களாதேஷ் A அணிக்கும் இலங்கை A அணிக்குமிடையில் ஆரம்பமாகவிருந்த உத்தியோகபூர்வமற்ற இருதரப்பு தொடரானது, தொடர்ச்சியான மழை காரணமாக பாதிக்கப்பட்டுவந்த நிலையில் தற்போது மாற்றியமைக்கப்பட்ட புதிய தொடர் அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்டுள்ளது.  

உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் A அணியானது கடந்த புதன்கிழமை (18) இலங்கை வந்தடைந்தது. இலங்கை A அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆகிய இரு தொடர்களில் பங்கேற்கவுள்ளது. 

பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை A அணியில் அசேல குணரத்ன

சுற்றுலா பங்களாதேஷ் அணியுடன் மோதவுள்ள இலங்கை A அணியின் டெஸ்ட் மற்றும்…

இரு அணிகளுக்குமிடையிலான இருதரப்பு தொடரின் முதல் தொடரான டெஸ்ட் தொடர் நேற்று முன்தினம் (23) கட்டுநாயக்கவில் நடைபெறவிருந்தது. போட்டியின் முதல் நாள், இரண்டாம் நாள் மற்றும் மூன்றாம் நாள் ஆகிய தொடர்ச்சியான மூன்று நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டன. 

இலங்கையின் மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் நிலவிவரும் தொடர்ச்சியான சீரற்ற காலநிலை காரணமாக முன்னர் குறிப்பிடப்பட்ட தொடர் அட்டவணையின்படி போட்டிகள் நடைபெறுவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் குறித்த தொடரை ஏற்பாடு செய்து நடாத்தும் இலங்கை கிரிக்கெட் சபையானது சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு போட்டி அட்டவணையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், போட்டி நடைபெறவிருந்த மைதானத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தற்போது மழையால் முழுமையாக பாதிக்கப்பட்ட முதலாவது டெஸ்ட் போட்டி மீண்டும் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

புதிய தொடர் அட்டவணையின்படி கட்டுநாயக்க மற்றும் காலியில் நடைபெறவிருந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரை தொடர்ந்து நடைபெறவுள்ள ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளும் ஏற்கனவே வெளியிடப்பட்ட தொடர் அட்டவணைக்கமைய அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை A – பங்களாதேஷ் A முதல் டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது

சுற்றுலா பங்களாதேஷ் A கிரிக்கெட் மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகளுக்கு…

மேலும் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாவது ஒருநாள் போட்டி தொடர்பான மாற்றம் செய்யப்பட்ட தொடர் அட்டவணை வெளியிடப்படவில்லை. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது. 

மாற்றம் செய்யப்பட்ட புதிய தொடர் அட்டவணை

  • 28 செப்டம்பர் – 1 ஒக்டோபர் – முதலாவது டெஸ்ட் போட்டி – அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • 4 ஒக்டோபர் – 7 ஒக்டோபர் – இரண்டாவது டெஸ்ட் போட்டி – அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • 9 ஒக்டோபர் – முதலாவது ஒருநாள் போட்டி – அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம்
  • 10 ஒக்டோபர் – இரண்டாவது ஒருநாள் போட்டி – அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானம்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<