அடிசறுக்கிய லிவர்பூல் அணி அதிர்ச்சித் தோல்வி

81

இங்கிலாந்து ப்ரீமியர் லீக் மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய சில போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜுவன்டஸ் மற்றும் இன்டர் மிலான் அணிகளுக்கு எதிரான போட்டி உட்பட இத்தாலி சீரி A தொடரின் வார இறுதியின் ஐந்து போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

லிவர்பூல் எதிர் வட்போர்ட்

ப்ரீமியர் லீக்கில் பின்தங்கி இருக்கும் வட்போர்ட் அணியிடம் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்த முதல்நிலை அணியான லிவர்பூல் இந்தப் பருவத்தில் தனது முதல் தோல்வியை சந்தித்தது.  

ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் லிவர்பூலை விடவும் 55 புள்ளிகளால் பின்தங்கி 17 ஆவது இடத்தில் இருக்கும் வட்போர்ட் தனது சொந்த மைதானமான விகரகே ரோட் அரங்கிலேயே லிவர்பூல் அணியை எதிர்கொண்டது. 

முந்தைய ஐந்து போட்டிகளிலும் ஒரு வெற்றியைக் கூட பெற்றிராத வட்போர்ட் முதல் பாதியில் லிவர்பூல் அணிக்கு போதுமான நெருக்கடி கொடுத்தது. இதனால் முதல் 45 நிமிடங்களில் எந்த கோலும் பெறப்படவில்லை. எனினும் இரண்டாவது பாதியில் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவர வட்போர்ட் தாக்குதல் ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்த அரம்பித்தது.  

54 ஆவது நிமிடத்தில் அப்துலாயி டவுகூர் வழங்கி பந்தை லிவர்பூல் கோல் கம்பத்திற்கு நெருக்கமான தூரத்தில் இருந்து இஸ்மைலா சார் கோல் புகுத்தினார். 6 நிமிடங்களின் பின் மீண்டும் அதிர்ச்சி கொடுத்த செனகலைச் சேர்ந்த இஸ்மைலா சார் மற்றொரு கோலை பெற்று வட்போர்டை 2-0 என முன்னிலை பெறச் செய்தார். 

தொடர்ந்து செயற்பட்ட வட்போர்ட் வீரர்கள் 72 ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலையும் புகுத்தினர். அணித்தலைவர் ட்ரோய் டீனி கோல் பெற்றார். 

மறுபுறம் லிவர்பூல் அணி இந்தப் போட்டியில் இலக்கை நோக்கி ஒரு தடவை மாத்திரமே பந்தை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.   

லிவர்பூல் தனது 28 ஆவது போட்டியில் முதல் தோல்வியை பெற்றதன் மூலம் அந்த அணி இம்முறை ப்ரீமியர் லீக்கை தோல்வியுறாத அணியாக நிறைவுசெய்யும் எதிர்பார்ப்பு சிதறியது. அதேபோன்று 2019 ஜனவரி தொடக்கம் அந்த அணி 44 லீக் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியுறாத அணியாக நீடித்த சாதனையும் முடிவுக்கு வந்துள்ளது.  

தொடர்ச்சியாக 19 போட்டிகளில் வெற்றியீட்டிய நடப்புச் சம்பியன் மன்செஸ்டர் சிட்டியின் சாதனையை முறியடிக்கும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய லிவர்பூல் அணியே இந்தப் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எனினும் இந்தத் தோல்வியானது லிவர்பூல் அணி 30 ஆண்டுகளில் முதல் ப்ரீமியர் லீக் பட்டத்தை வெல்லும் வாய்ப்புக்கு பின்னடைவாக அமையாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சிட்டியை விடவும் 22 புள்ளிகளால் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

செல்சி எதிர் AFC போர்ன்மௌத்

பின்கள வீரர் மார்கோஸ் அலொன்சோவின் இரட்டை மீட்பு கோல்கள் மூலம் போர்ன்மௌத் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியை செல்சி 2-2 என்ற கோல் வித்தியாசத்தில் சமநிலை செய்தது. 

விடாலிட்டி அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 33 ஆவது நிமிடத்தில் வைத்து ஒலிவியர் கிரௌட் கோலை நோக்கி உதைத்த பந்து கம்பத்தில் பட்டுத் திரும்பியபோது அலொன்சோ அதனை கோலாக மாற்றினார். முதல் பாதியில் செல்சி முன்னிலை பெற்றிருந்தபோதும் மூன்று நிமிட இடைவெளியில் போர்ன்மௌத் இரண்டு கோல்களை பெற்று முன்னிலை பெற முடிந்தது. 

இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே ஜெபர்சன் லெர்மா மற்றும் ஜொசுரா கிங் ஆகியோர் அந்த கோல்களை பெற்றனர். 

தொடர்ந்து எதிரணி கோல் பகுதியை ஆக்கிரமித்த செல்சி சார்பில் மிச்சி பட்சுவாயி பெற்ற கோல் ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது. எனினும் போட்டியின் முழு நேரம் முடிவதற்கு ஐந்து நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது பெனால்டி பெட்டியின் நடுவில் இருந்து அலொன்சோ தலையால் முட்டி அந்த கோலை பெற்றார். 

இந்தப் போட்டியை சமநிலை செய்த செல்சி 45 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. தகுதி இழப்பு நிலையான 18 ஆவது இடத்தில் இருக்கும் போர்ன்மௌத் 27 புள்ளிகளுடன் காணப்படுகிறது.    

பரிஸ் செயின்ட் ஜெர்மைன் எதிர் டிஜோன்

தனிப்பட்ட அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கைலிய ம்பப்பே இரண்டு கோல்கள் மற்றும் ஒரு கோல் உதவியை பெற்றுக்கொடுக்க டிஜோன் அணிக்கு எதிரான போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் 4-0 என இலகு வெற்றியீட்டியது. 

நட்சத்திர வீரர் நெய்மர் மற்றும் மார்கோ வெர்ராட்டி இடைநிறுத்தப்பட்டு தியாகோ சில்வா காயம் காரணமாக விளையாடாத நிலையிலேயே PSG இந்தப் போட்டியில் களமிறங்கியது. எனினும் 3ஆவது நிமிடத்திலேயே பப்லோ சரபியாவின் கோல் மூலம் ஆதிக்கம் செலுத்திய அந்த அணி கடைசி நிமிடங்களில் தனது கோல் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துக் கொண்டது.  

74 ஆவது நிமிடத்தில் பந்தை வேகமாக எடுத்துச் சென்று இளம் வீரர் ம்பப்பே கோல் பெற்றதோடு 74 ஆவது நிமிடத்தில் மவுரோ இகார்டி கோல் பெற உதவினார். போட்டியின் மேலதிக நேரத்தில் வைத்து 21 வயதுடைய ம்பப்பே தனது இரண்டாவது கோலை பெற்றார்.  

இந்த வெற்றியின் மூலம் PSG அணி லீக் 1 தொடரில் 27 போட்டிகளில் 68 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த அணி இரண்டாவது இடத்தில் இருக்கும் மெர்சைல் அணியை விடவும் 13 புள்ளிகளால் முன்னிலை பெற்றுள்ளது.