பெங்களூர் அணியின் இரண்டாவது வீரருக்கு கொவிட்-19!

IPL 2021

175

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சகலதுறை வீரர் டேனியல் சேம்ஸ் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக, சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய வீரரான டேனியல் சேம்ஸ் கடந்த 3ம் திகதி சென்னையில் வைத்து றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் இணைந்துக்கொண்டார். இவர் அணியில் இணைந்திருந்த போது, கொவிட்-19 தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஹோட்டலில் எடுக்கப்பட்ட இரண்டாவது பரிசோதனையில் சேம்ஸ் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மும்பை அணியின் பயிற்றுவிப்பாளருக்கு கொவிட்-19

இதுதொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. “டேனியல் சேம்ஸ் கடந்த 3ம் திகதி சென்னையில் வைத்து அணியில் இணைந்த போது, கொவிட்-19 தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டது.

எனினும், இன்று மேற்கொள்ளப்பட்ட கொவிட்-19 பரிசோதனையில், டேனியல் சேம்ஸிற்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாத நிலையில், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்” என றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வைத்திய குழாம், டேனியல் சேம்ஸை கண்கானித்து வருவதுடன், இந்திய கிரிக்கெட் சபையின் வழிமுறைகளை பின்பற்றி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர் டேனியல் சேம்ஸ் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், இதற்கு முன்னர் அந்த அணியின் தேவ்துத் படிக்கல் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருந்தார். எனினும், தேவ்துத் படிக்கல் பெங்களூரில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும், சென்னையில் அணியுடன் இணையவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரை பொருத்தவரை இதுவரை மூன்று வீரர்கள் உள்ளடக்கமாக, நான்கு உறுப்பினர்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் அக்ஷர் பட்டேல், மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் காப்பு ஆலோசகர் கிரன் மோர் மற்றும் பெங்களூர் அணியின் தேவ்துத் படிக்கல், டேனியல் சேம்ஸ் ஆகியோர் இவ்வாறு கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க