இந்திய அணிக்கு படு தோல்வி

2634
CRICKET-WT20-2016-IND-NZL

மொத்தமாக 35 போட்டிகளைக் கொண்ட 6ஆவது டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் நேற்று இந்தியாவில் ஆரம்பமானது.

நேற்றைய முதல் போட்டியில் போட்டியை நடாத்தும் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதின. போட்டி இந்தியாவின் நாக்பூரில் அமைந்துள்ள விதர்பா கிரிக்கட் அரங்கில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பித்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணித் தலைவர் கேன் விலியம்சன் தாம் முதலில் துடுப்பாடப் போவதாகக் கூறி இருந்தார்.

அதன்படி மார்டின் குப்டில் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினார்கள்.முதல் ஓவரை ரவி அஸ்வின் வீசினார். முதல் பந்தை மார்டின் குப்டில் சந்தித்தார். ரவி அஸ்வின் வீசிய முதல் பந்திலேயே  மார்டின் குப்டில் பந்து வீசிய ரவி அஷ்வினின் தலைக்கு மேலால் நேராக உயர்த்தி அடித்து 6 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம் டி20 உலகக் கிண்ணத் தொடரை மார்டின் குப்டில் சிக்ஸருடன் தொடங்கினார். அதன் பின் ஓவரின் 2ஆவது பந்தில் மார்டின் குப்டில் எல்.பி.டபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார். ஆனால் அது ஆட்டமிழப்பு அல்ல. அவரின் துரதிஷ்டவசமான விக்கட்டைத் தொடர்ந்து அதிரடி துடுப்பாட்ட வீரர் கொலின் முன்றோ களம் இறங்கினார். இவர் இந்த ஓவரின் 4ஆவது பந்தில் “ரிவர் ஸ்வீப்” முறையில் இமாலய சிக்ஸ் ஒன்றை விளாசினார்.

ரவி அஸ்வின் முதல் ஓவரில் 13 ஓட்டங்களைக் கொடுத்து 1 விக்கட்டை  வீழ்த்தினார். அடுத்த ஓவரை வேகபந்து வீச்சாளர் அஷிஷ் நெஹ்ரா வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் முன்றோ ஆட்டம் இழந்தார். நியூசிலாந்து அணி முதல் 2 ஓவரில் 14 ஓட்டங்களைப் பெற்று 2 விக்கட்டுகளை இழந்த நிலையில் காணப்பட்டது.

3ஆவது விக்கெட்டுக்காக கேன் வில்லியம்சனுடன் கோரி எண்டர்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ரவி அஸ்வின் வீசிய 5ஆவது ஓவரில் கோரி எண்டர்சன் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். பவர் பிளே-யான முதல் 6 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கட் இழப்பிற்கு 33 ஓட்டங்களைப் பெற்று இருந்தது.

அதன் பின் 7ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் சுரேஷ் ரைனா வீசிய பந்தில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அவர் 16 பந்தில் 8 ஓட்டங்களை மட்டுமே பெற்றார். 4ஆவது விக்கெட்டுக்கு கோரி எண்டர்சனுடன் ரொஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தனர். இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி ஓட்டங்களை குவிக்கத் திணறியது.

ரொஸ் டெய்லர் 10 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.. அடுத்து கோரி எண்டர்சனுடன் சான்ட்னர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி களத்தில் நின்றாலும் அதிரடியாக ரன்களை குவிக்க இயலவில்லை.

இறுதியாக கோரி எண்டர்சன் 34 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஜஸ்ப்ரிட் பும்ப்ரா வீசிய பந்தை பின்னால் அடிக்க முயன்ற போது அது தவறி பந்து நேரடியாக விக்கட்டில் பட்டு ஆட்டம் இழந்தார். அடுத்து க்ராண்ட் எலியாட் களம் இறங்கினார். சான்ட்னெர் 18 ஓட்டங்களைப் பெற்ற  நிலையில் ரவீந்திர  ஜடேஜா வீசிய பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்தவர்கள் ஒன்றிரண்டு ஓட்டங்களை சேர்க்க, நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 126 ஓட்டங்களை எடுத்தது.

இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் அசிஷ் நெஹ்ரா, ரவி அஸ்வின், ஜஸ்ப்ரிட் பும்ப்ரா , ரவீந்திர  ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கட்டுகள் வீதம் தம்மிடையே பரிமாறினார்கள்.

இதையடுத்து 127 ஓட்டங்களைப் பெற்றால்  வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஷீகர் தவான் மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் களமிறங்கினார்கள். இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன.

முதல் ஓவரிலேயே ஷீகர் தவான் தனது விக்கட்டை அன்பளிப்பாக நியுசிலாந்து அணிக்கு பறிகொடுத்தார். நெதன் மெக்கலம் வீசிய பந்தில் ஒரே ஒரு ஓட்டத்தைப் பெற்று எல்.பி.டபிள்யூ முறை மூலம் ஆட்டம் இழந்தார். அதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மா 5 ஓட்டங்களோடும், சுரேஷ் ரெய்னா 1 ஓட்டத்தோடும், யுவராஜ் சிங் 4 ஓட்டங்களோடும் பெவிலியன் திரும்பி உலகக் கிண்ண ஆரம்ப போட்டியிலேயே இந்திய அணிக்கு பாரிய ஒரு ஏமாற்றத்தை வழங்கினார்கள்.

8 ஓவர்கள் வரை சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய விராட் கொஹ்லி 27 பந்துகளில் 23 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழக்க இந்திய அணி 39 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்து தட்டுத் தடுமாறியது. அதன் பின்பும் இந்திய அணியின் விக்கட் வீழ்ச்சி மீண்டும் தொடர்ந்தது. ஹர்திக் பாண்டியா 1 ஓட்டத்தோடும், ரவீந்திர ஜடேஜா ஓட்டம்  எதுவும் பெறாமலும் ஆட்டம் இழந்து இந்திய அணியை மேலும் மேலும் நெருக்கடியான நிலைக்கு தள்ளி விட்டனர்.

சுழல் பந்து வீச்சாளர் ரவி அஷ்வின் மிக மெதுவாக துடுப்பாடி 20 பந்துகளில் 10 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்க இறுதியில் தலைவர் மஹேந்திர சிங் தோனி சிறிது நேரம் போராடினார். 30 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்று தோனி ஆட்டமிழந்த பிறகு இறுதி நம்பிக்கையும் பொய்த்து போனது. இறுதியில் 18.1 ஓவர்களில் 79 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் இந்திய அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சில் மிக மிக அற்புதமாக பந்து வீசிய இடது கை சுழல் பந்து வீச்சாளர் மிச்சல் சாண்ட்னர்  4 ஓவர்கள் பந்து வீசி  வெறுமனே 11 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கட்டுக்களை சாய்த்தார். அவருக்கு பக்க பலமாக மறு முனையில் இஷ் சோதி 4 ஓவர்கள் பந்து வீசி 18 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கட்டுக்களைக் கைபற்றி பலம் பொருந்திய இந்திய அணியை பதம் பார்த்தார். இவர்கள் இருவரையும் தவிர நேதன் மெக்கலம் 3 ஓவர்கள் பந்து வீசி 15 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளைக் கைபற்ற நியுசிலாந்து அணி இந்திய அணியை 47 ஓட்டங்கள்  வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக துடுப்பாட்டத்தில் இறுதி நேரத்தில் வந்து 18 ஓட்டங்களை விளாசி, பந்து வீச்சில் 4 விக்கட்டுகளையும் கைபற்றிய நியுசிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்த மிச்சல் சாண்ட்னறிற்கு வழங்கப்பட்டது.

இந்திய அணி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பரிதாபமாக தோல்வியடைந்தது. இதனால் நாக்பூர் மைதானத்தில் குவிந்த 45,000 இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

6ஆவது டி20 உலக கிண்ணப் போட்டித் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இன்றைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை எதிர்த்து ஆடுகிறது. அதேவேளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடுகிறது.