ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து வெளியேறும் ரஷித் கான்

Afghanistan tour of Sri Lanka 2023

1674

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரஷித் கான் இழந்துள்ளார்.

IPL இறுதிப் போட்டியின் போது முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற IPL இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடிய அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவர் முழு மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும், 3ஆவது ஒருநாள் போட்டியில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இம்முறை IPL தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் 3ஆவது இடத்தைப் பிடித்த ரஷித் கானுக்கு, சென்னை அணியுடனான இறுதிப் போட்டியில் எந்தவொரு விக்கெட்டையும் வீழ்த்த முடியவில்லை.

இலங்கை அணிக்கெதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ரஷித் கான் இல்லாத நிலையில், சுழல்பந்து துறையில் மொஹமட் நபி, முஜீப் உர் ரஹ்மான் மற்றும் நூர் அஹமட் ஆகியோர் கூடுதல் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும்.

இதில் இம்முறை IPL தொடரில் குஜராத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நூர் அஹ்மட், 13 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இருப்பினும், அவர் ஆப்கானிஸ்தானுக்காக ஒரு ஒருநாள் மற்றும் ஒரு T20i போட்டியில் மாத்திரம் விளையாடியுள்ளார். எவ்வாறாயினும், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் நூர் அஹ்மட் களமிறங்கி நெருக்கடியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி நாளை (02) ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளதுடன், 2ஆவது ஒருநாள் ஜூன் 4ஆம் திகதியும், கடைசி ஒருநாள் போட்டி ஜூன் 7ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

ஒருநாள் தொடரின் அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் பகல் போட்டியாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<