ஆறுதல் வெற்றிக்காக மே.தீவுகளுடன் மோதும் இலங்கை!

ICC Men’s T20 World Cup 2021

169

ஐசிசி T20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ள நிலையில், தங்களுடைய ஆறுதல் வெற்றிக்காக வியாழக்கிழமை (04) மேற்கிந்திய தீவுகள் அணியை அபு தாபியில் சந்திக்கவுள்ளது.

இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்திருந்தாலும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக அமையவுள்ளது. குறிப்பாக, தங்களுடைய அடுத்த போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு, இந்த வெற்றியை பெற்றுக்கொண்டால் அரையிறுதிக்கான வாய்ப்பை நீடித்துக்கொள்ள முடியும்.

T20 உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை

இரண்டு அணிகளதும் கடந்தகால மோதல்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20i மோதல்களில், சம பலமான முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இரண்டு அணிகளும் 14 போட்டிகளில் மோதியுள்ளதுடன், தலா 7 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன.

எனினும், 2015ம் ஆண்டுக்கு பின்னர் விளையாடிய போட்டிகளின் அடிப்படையில், மே.தீவுகள் அணி அதிகமான சாதகத்தை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த காலப்பகுதிக்குள் விளையாடிய 8 போட்டிகளில், 6 போட்டிகளில் மே.தீவுகள் அணி வெற்றிபெற்றுள்ளதுடன், இலங்கை அணி 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது.

T20 உலகக்கிண்ணத்தை பொருத்தவரை, இரண்டு அணிகளும் 7 தடவைகள் மோதியுள்ளதுடன், 5 போட்டிகளில் வெற்றிபெற்று, இலங்கை அணி ஆதிக்கத்தை செலுத்திவருகின்றது. எனினும், 2012ம் ஆண்டு T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி உட்பட, இரண்டு போட்டிகளில் மே.தீவுகள் அணி வெற்றியை தக்கவைத்துள்ளது.

இலங்கை அணி

T20 உலகக்கிண்ணத்தின் ஆரம்பத்தில் வெற்றிகளை குவித்துவந்த இலங்கை அணிக்கு, சுபர் 12 சுற்றின் கடைசி 3 போட்டிகள் தோல்வியில் முடிவடைந்திருக்கிறது. பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிறந்த வெற்றியை பதிவுசெய்த இலங்கை அணி, அவுஸ்திரேலியாவிடம் வீழ்ந்திருந்தது.

எனினும், அதன்பின்னர் நடைபெற்ற தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில், சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, இறுதிநேர தவறுகளால் வெற்றிகளை மயிரிழைகளில் தவறவிட்டது.

குறிப்பாக, இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு முதல் சுற்றில் பலம் கொடுத்தாலும், சுபர் 12 சுற்றில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு வழங்கவில்லை. துஷ்மந்த சமீர சிறப்பாக பந்துவீசியிருந்த போதும், லஹிரு குமார கடந்த மூன்று போட்டிகளிலும் எதிரணிகளுக்கு ஓட்டங்களை வழங்கியிருந்தார். அதேநேரம், துடுப்பாட்டத்திலும் தொடர் முழுவதும் குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய முன்னணி வீரர்கள் பிரகாசிக்க தவறியிருந்தனர்.

இவ்வாறான சில பின்னடைவுகள் காரணமாக, இலங்கை அணியால், வெற்றிகளை குவிக்கமுடியாத நிலை ஏற்பட்டதுடன், அரையிறுதிக்கான வாய்ப்பையும் இழக்க நேரிட்டுள்ளது. எனவே, தற்போது, அழுத்தமின்றிய மே.தீவுகளுக்கு எதிரான இந்த போட்டியில், அணியாக தங்களுடைய ஒட்டுமொத்த பிரகாசிப்பையும் வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளது.

எதிர்பார்ப்பு வீரர்

இலங்கை அணிக்காக இந்த T20 உலகக்கிண்ணத்தில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் சிறப்பாக வனிந்து ஹஸரங்க பிரகாசித்துவருகின்றார். துடுப்பாட்டத்தில் ஒருசில இன்னிங்ஸ் சிறப்பாக ஆடியிருந்தாலும், பந்துவீச்சில், எதிரணிகளுக்கு மிகப்பெரிய சவாலை கொடுக்கக்கூடிய வீரராக உள்ளார்.அதன்படி, வனிந்து ஹஸரங்க தான் விளையாடிய 7 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்த உலகக்கிண்ணத்தில் அதிகூடிய விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டுள்ளார். அத்துடன், மேற்கிந்திய தீவுகள் அணி ஏற்கனவே, சுழல் பந்துவீச்சுக்கு தடுமாறிவரும் நிலையில், அவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை குழாம்

தசுன் ஷானக (தலைவர்), தனன்ஜய டி சில்வா (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, அகில தனன்ஜய, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார

மேற்கிந்திய தீவுகள் அணி

மே.தீவுகள் அணி இந்த ஆண்டு விளையாடிய 20 T20I போட்டிகளில், 9  போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், 8 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதில், இலங்கை அணிக்கு எதிராக இந்த ஆண்டு நடைபெற்ற தொடரினை 2-1 எனவும் கைப்பற்றியிருந்தது.

அதேநேரம், இந்த T20 உலகக்கிண்ணமானது, மே.தீவுகள் அணிக்கு சிறந்த ஆரம்பமாக அமையவில்லை. குறிப்பாக, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்திருந்தது. எனினும், இறுதியாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில், இறுதிநேரத்தில் திரில் வெற்றியை பெற்றது.

எனவே, அணியாக மீண்டும் வெற்றிப்பாதைக்கு நுழைந்துள்ள மே.தீவுகள் அணி, தங்களுடைய அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்புடன் இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது. மே.தீவுகள் அணியை பொருத்தவரை, இலங்கை அணியை விட, அனுபவத்தில் மிகச்சிறந்த அணியாக உள்ளது. குறிப்பாக, கிரிஸ் கெயில், கீரன் பொல்லார்ட், அன்ரே ரசல், டுவைன் பிராவோ மற்றும் ஜேசன் ஹோல்டர் போன்ற வீரர்கள் T20 போட்டிகளில் மிகச்சிறந்த அனுபவத்தை கொண்டவர்கள்.

எனவே, தங்களைவிட அனுபவம் குறைந்த இளம் அணியாக உள்ள இலங்கை அணிக்கு, அழுத்தத்தை கொடுத்து, தங்களுடைய அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளது.

எதிர்பார்ப்பு வீரர்

மேற்கிந்திய தீவுகளை பொருத்தவரை, அவர்களுடைய முன்னணி அனுபவம் மிக்க வேகப்பந்துவீச்சாளர் டுவைன் பிராவோ. இவர், T20 போட்டிகளில் அதீத அனுபவம் கொண்டுள்ளதுடன், அதீகூடிய விக்கெட்டுகளையும் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக கைப்பற்றியுள்ளார்.டுவைன் பிராவோ கடந்த காலங்களில், இலங்கை அணிக்கு எதிராகவும் அதீகூடிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இலங்கை மற்றும் மே.தீவுகளுக்கு இடையிலான போட்டிகளில் அதிகூடிய விக்கெட்டுகளை (14) வீழ்த்தியுள்ள இவர், ஒரு அரைச்சதம் அடங்கலாக 224 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். எனவே, இலங்கைக்கு எதிரான போட்டியில், இவர் மிகவும் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் குழாம்

கீரன் பொல்லார்ட் (தலைவர்), நிக்கோலஸ் பூரன் (உப தலைவர்), டுவைன் பிராவோ, ரொஸ்டன் சேஸ், அன்ரே பிளச்சர், கிரிஸ் கெயில், ஷிம்ரொன் ஹெட்மையர், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொஸைன், எவின் லிவிஸ், ரவி ராம்போல், அன்ரே ரசல், லெண்டல் சிம்மன்ஸ், ஒசானே தோமஸ், எய்டன் வோல்ஜ் ஜூனியர்

இறுதியாக…

இலங்கை அணியை பொருத்தவரை, இந்த போட்டியின் முடிவு அவர்களுக்கான அரையிறுதி வாய்ப்பை தரப்போவதில்லை. எனவே, பாரிய அழுத்தமின்றி, இந்த போட்டியில் களமிறங்கும். எனினும், மேற்கிந்திய தீவுகள் அணி இந்த போட்டியில், வெற்றிபெற்றால், அவர்களுடைய அரையிறுதி வாய்ப்பை அதிகரித்துக்கொள்ள முடியும். எனவே, இந்த போட்டியானது, விறுவிறுப்பான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<