ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடும் இலங்கை குழாம்

829

ஜூன் மாதம் இரண்டாம் திகதி ஹம்பந்தோட்டையில் ஆப்கானிஸ்தான் அணியுடன் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் தொடரில் ஆடும் இலங்கையின் 16 பேர் அடங்கிய எதிர்பார்க்கை குழாமானது அறிவிக்கப்பட்டுள்ளது.

பலமிக்க குழாத்துடன் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் ஐக்கிய அமெரிக்கா

முன்னதாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடர் என்பவற்றில் ஆடவிருக்கும் இலங்கையின் 30 பேர் அடங்கிய உத்தேச குழாம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தேச குழாம் தற்போது 16 பேர் கொண்ட குழாமாக மட்டுப்படுத்தப்பட்டிருப்பதோடு, இதில் இருந்தே இலங்கை ஆப்கான் தொடருக்கான குழாமும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த குழாத்தில் முக்கிய உள்ளடக்கமாக இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரட்னவின் உள்வாங்கப்பட்டிருப்பதனை குறிப்பிடலாம். இறுதியாக 2021ஆம் ஆண்டிலேயே ஒருநாள் போட்டியொன்றில் ஆடியிருந்த திமுத் கருணாரட்ன ஆப்கான் தொடரில் இலங்கை ஒருநாள் அணியின் ஆரம்பவீரராக பரீட்சிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரமவும் ஒருநாள் குழாத்தில் தனது வாய்ப்பினை தக்க வைத்திருக்க, இளம் துடுப்பாட்டவீரரான அஷேன் பண்டாரவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மறுமுனையில் காயம் காரணமாக ஆப்கான் தொடரில் அனுபவ துடுப்பாட்டவீரரான குசல் பெரேரா இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உபாதையினால் ஆப்கான் தொடரில் விளையாட முடியாமல் போகும் என எதிர்பார்க்கப்பட்ட வனிந்து ஹஸரங்க, ஆப்கான் குழாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சுழல் சகலதுறை வீரரான துஷான் ஹேமன்த அறிமுக வீரராக ஆப்கான் தொடருக்காக இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. துஷான் ஹேமன்தவுடன் IPL போட்டிகளில் கலக்கி வரும் இளம் வேகப் பந்துவீச்சாளர் மதீஷ பதிரனவும் ஆப்கான் தொடரில் இலங்கை அணிக்காக ஒருநாள் அறிமுகம் பெறலாம் என நம்பப்படுகின்றது.

இதேநேரம், நீண்ட இடைவேளையின் பின்னர் உபாதையில் இருந்து மீண்டிருக்கும் அனுபவ வேகப் பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீரவின் சேவை ஆப்கான் தொடரில் மீண்டும் இலங்கை அணிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய வீரர்களில் இலங்கையின் துடுப்பாட்டம் பெரிதும் குசல் மெண்டிஸ், சரித் அசலன்க ஆகியோரில் தங்கியிருக்க அஞ்செலோ மெதிவ்ஸின் அனுபவமும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்களாக துஷ்மன்த சமீரவுடன் கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் கரம் கொடுக்க, அணியின் பிரதான சுழல்வீரர்களாக மகீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் காணப்படுகின்றனர்.

இலங்கை குழாம்
திமுத் கருணாரட்ன, பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், அஞ்செலோ மெதிவ்ஸ், சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (அணித்தலைவர்), சதீர சமரவிக்ரம, வனிந்து ஹஸரங்க, துஷான் ஹேமன்த, மகீஷ் தீக்ஷன, சாமிக்க கருணாரட்ன, துஷ்மன்த சமீர, லஹிரு குமார, மதீஷ பதிரன, கசுன் ராஜித

செய்தி மூலம் – Ceylon Today

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<