“வாய்ப்புக்காக நான் தேர்வாளர்களை தேடிச்செல்வதில்லை” – திமுத் கருணாரத்ன

Afghanistan tour of Sri Lanka 2023

538
​Dimuth

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்தில் அனுபவ துடுப்பாட்ட வீரரும், டெஸ்ட் அணியின் தலைவருமான திமுத் கருணாரத்ன உள்வாங்கப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டித்தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான குழாத்தை உறுதிசெய்வதற்கு இந்த தொடர் முக்கியமானதாக அமையவுள்ளது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடுவர் குழாத்தில் தர்மசேன

இவ்வாறான நிலையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியின் தலைவராக செயற்பட்டிருந்த திமுத் கருணாரத்ன 2021ஆம் ஆண்டுக்கு பின்னர் மீண்டும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் விளையாட அழைக்கப்பட்டார்.

திமுத் கருணாரத்னவின் இந்த மீள்வருகை ஒரு பக்கம் விமர்சனங்களை எழுப்பி வருவதுடன் மறுமுனையில் நேர்த்தியான ஆரம்பத்தை பெற்றுக்கொடுப்பதற்கான சிறந்த வீரராக திமுத் கருணாரத்ன இருப்பார் என்ற பரவலான கருத்துகளும் பகிரப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் இலங்கை கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆடக்கூடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரரின் தேவை இருப்பதுடன், மீண்டும் அணிக்குள் உள்வாங்கப்பட்டமை தொடர்பிலும் திமுத் கருணாரத்ன வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

“ஒரு பக்கம் நீண்டநேரம் களத்தில் நின்று வீரர் ஒருவர் துடுப்பெடுத்தாடுவதுடன், அவரைச்சுற்றி ஏனைய வீரர்கள் வேகமாக ஓட்டங்களை குவிக்க வேண்டும் என்ற திட்டம் இலங்கை அணிக்கு கடந்த காலங்களில் வெற்றிகளை கொடுத்துள்ளது.

அணியின் 40 ஓவர்கள் வரை களத்திலிருந்து துடுப்பெடுத்தாட வேண்டிய வீரர் ஒருவர் எமக்கு தேவை என்பதை நான் நம்புகிறேன். தேர்வாளர்களிடம் நான் எதனையும் கேட்கவில்லை. நான் சிறந்தவராக இருந்தால் அவர்கள் தெரிவுசெய்வார்கள். நான் தேர்வாளர்களை துரத்திச்சென்று என்னால் இதனை செய்ய முடியும் என கூறமாட்டேன். நான் அப்படியான நபர் இல்லை. நான் ஓட்டங்களை பெறவேண்டும் என்பதுடன் துடுப்பாட்ட மட்டையால் பேசுவேன்” என்றார்.

இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பிலும் இதன்போது திமுத் கருணாரத்ன தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்.

“நான் 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துக்கு பின்னர் சில போட்டிகளில் மாத்திரமே விளையாடினேன். அதனைத்தொடர்ந்து சில கழக மட்ட போட்டிகள். இவற்றை தவிர்த்து போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். என்னை அணியிலிருந்து நீக்கும்போது 40 என்ற ஓட்ட சராசரி, சில அரைச்சதங்கள் மற்றும் ஏழு 100 ஓட்ட இணைப்பாட்டங்களையும் பெற உதவியிருந்தேன்.

குசல் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் நான் என எம்முடைய பங்களிப்பை தேர்வளார்கள் எதிர்பார்த்தப்படி சரியாக செய்திருந்தோம். தேர்வாளர்கள் 40 ஓவர்கள் வரை என்னை விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் துடுப்பெடுத்தாடும் படி கூறினர். அதனையும் செய்தேன். எனினும் புதிய தேர்வாளர்கள் புதிய திட்டத்துடனும், புதிய மாற்றங்களுடனும் இலங்கை கிரிக்கெட் செல்லவேண்டும் என கூறினர். எனவே அதற்கு என்னுடைய மரியாதையை செலுத்தினேன்” என்றார்.

இலங்கை கிரிக்கெட் அணியானது தற்போது நிலைத்து நின்று ஓட்டங்களை குவிக்கக்கூடிய துடுப்பாட்ட வீரர் ஒருவரை எதிர்பார்த்து திமுத் கருணாரத்னவை அணிக்குள் அழைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் திமுத் கருணாரத்ன விளையாடினாலும், உபாதைக்கு முகங்கொடுத்துள்ள குசல் பெரேரா மீதான கவனத்தையும் இலங்கை கிரிக்கெட் சபை செலுத்தி வருகின்றது.

எனவே ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் பெதும் நிஸ்ஸங்கவுடன் திமுத் கருணாரத்ன அல்லது குசல் பெரேரா ஆகியோரில் ஒருவர் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<