தாய்லாந்திடம் இலங்கை மகளிர் அணிக்கு அதிர்ச்சித் தோல்வி

254
Thailand cricket

மகளிர் ஆசிய கிண்ண டி-20  தொடரில் தாய்லாந்துக்கு எதிராக தனது கடைசி லீக் போட்டியில் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட்டுகளால் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.

இதன் மூலம் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் மகளிர் ஆசிய கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை பெரும் ஏமாற்றத்துடன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதன் போதும் இலங்கை அணிக்கு எதிராக பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய தாய்லாந்து சுழல் வீராங்கனை வொங்பகா லிங்பிரசெர்ட் இக்காட்டான நிலையில் அந்த அணிக்கு வெற்றி ஓட்டத்தையும் பெற்று ஆட்ட நாயகியாக தெரிவானார்.

இந்தியாவிடம் தோற்ற இலங்கை மகளிர் இக்கட்டான நிலையில்

கோலாலம்பூர் ரோயல் செலகோர் மைதானத்தில் இன்று (09) நடைபெற்ற இந்த போட்டியில் தாய்லாந்து அணியால் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை மகளிர் அணிக்கு ஆரம்ப ஜோடியான யசோதா மெண்டிஸ் மற்றும் அனுஷ்கா சஞ்ஜீவனி இருவரும் 31 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றனர்.

எனினும் 15 பந்துகளில் 22 ஓட்டங்களை பெற்று சிறப்பாக ஆடிவந்த யசோதா மெண்டிஸை தாய்லாந்து அணித் தலைவி சொர்னாரின் டிபோச் தனது பந்துவீச்சுக்கே பிடியெடுத்து ஆட்டமிழக்கச் செய்தார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் ஓட்ட வேகம் குறைந்ததோடு தாய்லாந்த வீராங்கனைகளின் சிறப்பான களத்தடுப்பு மற்றும் லிங்பிரசெர்ட்டின் அதிரடி பந்துவீச்சு இலங்கை அணிக்கு நெருக்கடியாக மாறியது.   

எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை சஞ்ஜீவனி பொறுமையுடன் 45 பந்துகளில் 32 ஓட்டங்களை பெற்று நிலைத்திருந்தபோதும் மறுமுனை துடுப்பாட்ட வீராங்கனைகள் மூவர் ரன் அவுட் ஆவதற்கு காரணமாக இருந்தார். அடுத்து வந்த வீராங்கனைகள் ஐவர் வரிசையாக ஒற்றை ஓட்ட இலக்கத்தோடு வெளியேற எட்டாவது வரிசையில் வந்த ஓஷதி ரணசிங்க மாத்திரமே இலங்கை மகளிர் அணிக்காக இரட்டை இலக்க ஓட்டங்களை பெற்ற மற்றைய வீராங்கனை ஆவார். 18 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 20 ஓட்டங்களை பெற்றார்.

இதன் மூலம் இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 104 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

மூன்றாம் நாள் ஆதிக்கத்தோடு இலங்கைக்கு கடின இலக்கை நிர்ணயிக்கும் மேற்கிந்திய தீவுகள்

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய தாய்லாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் விக்கெட்டை காத்துக் கொண்டு நிலையாக ஆடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை நருமோல் சைவாய் 56 பந்துகளுக்கு 43 ஓட்டங்களை பெற்று ஆரம்ப விக்கெட்டுக்கு 43 ஓட்ட இணைப்பாட்டத்தையும் இரண்டாவது விக்கெட்டுக்கு 34 ஓட்ட இணைப்பாட்டத்தையும் பகிர்ந்துகொள்ள தாய்லாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 77 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் சைவாய் ஆட்டமிழக்கும்போது தாய்லாந்து அணி வெற்றிபெற 29 பந்துகளில் 28 ஓட்டங்களைப் பெற வேண்டி இருந்தது. அப்போது இலங்கை மகளிர் அணி நெருக்கடி கொடுத்து மத்திய வரிசை விக்கெட்டுகளை சாய்த்தனர்.

எனினும் தாய்லாந்து அணிக்கு பந்துவீச்சில் சோபித்த லிங்பிரசெர்ட் 18 ஆவது ஓவரில் 6 ஆவது வீராங்கனையாக வந்து 9 பந்துகளில் ஆட்டமிழக்காது 13 ஓட்டங்களை பெற்றதன் மூலம் தாய்லாந்து அணியின் வெற்றி உறுதியானது.

தாய்லாந்து அணி சரியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 105 ஓட்டங்களை எட்டியது. நிலக்ஷி டி சில்வா 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் அது வெற்றிக்கு போதுமாக இருக்கவில்லை.

இதன்படி மகளின் ஆசிய கிண்ண தொடரில் முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி அடுத்த மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து நாடு திரும்பவுள்ளது.

இதில் சர்வதேச அந்தஸ்த்துக் கூட பெறாத தாய்லாந்து அணி ஐ.சி.சி இன் முழு அங்கத்துவ நாடு ஒன்றை வீழ்த்துவது இது முதல் முறையாகும். தாய்லாந்து மகளிர் அணிக்கு இலங்கையின் ஜனக் பெரேராவே பயிற்றுவிப்பாளராக செயற்படுகிறார்.  

இதேவேளை இன்று  நடைபெற்ற பாகிஸ்தானுடனான தீர்க்கமான போட்டியில் இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பெற்று மீண்டும் ஒருமுறை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கோலாலம்பூர் கின்ராரா அகடமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த பாகிஸ்தான் மகளிர் அணியை 72 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்திய இந்திய மகளிர் அணி, 3 விக்கெட்டுகளை இழந்து அந்த வெற்றி இலக்கை எட்டியது.

19 வயதுக்கு கீழ்ப்பட்ட மாகாண ரீதியிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 12 ஆம் திகதி முதல்

இதுவரை நடந்த ஆறு மகளிர் ஆசிய கிண்ண தொடர்களிலும் இந்திய அணியே ஒட்டுமொத்தமாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை மகளிர் ஆசிய கிண்ண டி-20  தொடரின் இறுதிப் போட்டி நாளை (10) கோலாலம்பூர் கின்ராரா அகடமி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.     

போட்டியின் சுருக்கம்

இலங்கை மகளிர் அணி – 104 (20) – அனுஷ்கா சஞ்ஜீவனி 32, யசோதா மெண்டிஸ் 22, ஓஷதி ரணசிங்க 20*, வொங்பகா லிங்பிரசெர்ட் 5/12, சொர்னரி டிபொச் 2/19

தாய்லாந்து மகளிர் அணி – 105/6 (20) – நருமோல் சைவாய் 43, நடாயா பூச்தாம் 19, நிலக்சி டி சில்வா 2/17

முடிவு – தாய்லாந்து மகளிர் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க