காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி அந்த மைதானத்தில் தங்களது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவுசெய்தது.

இந்த போட்டியில் மோசமான துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு காரணமாக இலங்கை அணி, படுதோல்வியுடன் தங்களது அனுபவ வீரர் ரங்கன ஹேரத்துக்கு பிரியாவிடை வழங்கியிருந்தது. இந்த நிலையில் இலங்கை அணியின் தோல்வி குறித்தும், மோசமான துடுப்பாட்டம் குறித்தும் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க அணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

போட்டியின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சந்திக ஹதுருசிங்க, ”டெஸ்ட் போட்டியொன்றில் 40 ஓட்டங்களுக்கு அணி 4 விக்கெட்டுகளை இழக்குமானால் அது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.  இவ்வாறான துடுப்பாட்டம் அணியின் மேலும் பலமிழக்க செய்யும்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்த போட்டியை பொருத்தவரை எமது அணி, இங்கிலாந்து அணியின் முதல் ஐந்து விக்கெட்டுகளை வெறும் நூறு ஓட்டங்களுக்கு வீழ்த்தியிருந்தது. எனினும் இங்கிலாந்து அணியின் அனுபவமற்ற துடுப்பாட்ட வீரர்கள் அணியின் ஓட்ட எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தியிருந்தனர்.

காலி டெஸ்ட்டில் இலங்கை அணி படுதோல்வி

இவர்களின் விக்கெட்டுகளை எமது பந்துவீச்சாளர்கள்  கைப்பற்ற தவறியமையினால் போட்டியில் முன்னோக்கி செல்ல முடியாமல் போனதுடன், அணியின் தோல்விக்கு இது முக்கிய காரணமாகவும் அமைந்தது.

பின்னர் துடுப்பெடுத்தாடிய எமது அணியின் வீரர்கள் துடுப்பெடுத்தாடிய விதம் அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. வீரர் ஒருவர் தனது துடுப்பாட்டத்தின் தவறுகளை ஓரிரு போட்டிகள் அல்லது, உள்ளூர் போட்டிகளில் அடையாளம் காணவேண்டும். இவ்வாறான தவறுகளை சர்வதேச போட்டிகளில் விடுவதை ஏற்றுகொள்ள முடியாது. நான் ஏற்கனவே பயிற்றுவித்த வீரர்கள் போட்டிகளின் தன்மையை  அறிந்து விளையாட கூடியவர்கள். ஆனால், நாம் இப்போது விடும் தவறுகள் பாரதூரமானவை. அதனை நாம் உடனடியாக திருத்தி கொள்ள வேண்டும்” என்றார்.

அஞ்செலோ மெதிவ்ஸின் துடுப்பாட்டம் குறித்து  கூறுகையில்,

“மெதிவ்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பி துடுப்பெடுத்தாடிய விதம் நம்பிக்கை அளித்துள்ளது. விக்கெட்டுகள் ஒரு பக்கம் வீழ்த்தப்பட்டபோது தனியாளாக அணிக்கு ஓட்டங்களை பெற்றுகொடுத்தார் .இவர் இரண்டு அரைச்சதங்கள் பெற்றகொடுத்தாலும், அவரால் அதிக ஓட்டங்களை பெறமுடியவில்லை. எனினும், சிறந்த ஆரம்பத்தை பெற்றிருந்தார். ஓட்டங்களை ஓடி பெறும் விதம் முன்னேற்றம் அடைந்திருந்தது.

அவரால் மீண்டும் 2013, 2014 ஆம் ஆண்டுகளில் போன்று தொடர்ச்சியாக ஓட்டங்களை பெறமுடியுமானால் இலங்கை அணிக்கு மேலும் பலம் சேரும். எவ்வாறாயினும், அவர்  உபாதைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும்” என்றார்.

இலங்கை அணிக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<