மழையினால் போட்டியை சமப்படுத்திக்கொண்ட களுத்துறை பெளதீக கலாசார அணி

615
Rain intervenes in all matches; Kalutara PCC saved by the rain

இன்று நடைபெற்று முடிந்த, இலங்கை பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித்தொடரில், அனைத்து போட்டிகளிலும் மழை குறிக்கிட்ட காரணத்தினால் B மட்ட அணிகளான லங்கன்ஸ் அணி மற்றும் களுத்துறை பெளதீக கலாசார அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் நிறைவுற்றது. அத்துடன், இன்று ஆரம்பமாகிய மற்றைய போட்டிகளில், பாணதுறை கிரிக்கெட் கழகம், பொலிஸ் விளையாட்டு கழகம், இலங்கை துறைமுக அதிகார சபை கிரிக்கெட் கழகம் ஆகியவை வலுவான நிலையில் உள்ளன.

லன்கன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் களுத்துறை பெளதீக கலாசார அணி

இரண்டு நாட்களிற்கு முன்னர் (25), ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் களுத்துறை பெளதீக கலாசார அணி, தமது முதல் இன்னிங்சிற்காக, 37 ஓவர்களிற்கு 5 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை பெற்றிருந்தவாறு, போட்டியின் இறுதி நாளான இன்று தமது முதல் இன்னிங்சினை தொடர்ந்தது.

இன்றைய நாளில், இடது கை சுழல் பந்து வீச்சாளர் நவின் கவிகரவின் பந்து வீச்சினை சமாளிக்க முடியாமல் திணறிய களுத்துறை அணி, நடுத்தர வரிசை வீரர்களை ஓரிலக்க ஓட்டங்களுடன் பறிகொடுத்து, இன்றைய நாளில் 45 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 53.5 ஓவர்களிற்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 152 ஓட்டங்களை மாத்திரம் தமது முதல் இன்னிங்சிற்காக பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக, துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக, ரசிக பெர்னாந்து 54 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இன்று வீழ்த்தப்பட்ட 5 விக்கெட்டுக்களில் மூன்றினை நவின் கவிகர லங்கன்ஸ் அணி சார்பாக கைப்பற்றினார்.

பின்னர், களுத்துறை பெளதீக கலாசார கழக அணி பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதனால், மீண்டும் துடுப்பெடுத்தாட வேண்டிய நிலைக்கு அவர்கள் உள்ளாகினர்.

இதன்படி மீண்டும் துடுப்பெடுத்தாடிய அவ்வணி, 5 விக்கெட்டுக்களை இழந்து 102 ஓட்டங்களினை பெற்றிருந்த வேளையில், போட்டியில் மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்தும் நீடித்த காரணத்தினால் இன்றைய போட்டியின் ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது இதனால், இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது.

களுத்துறை அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்திருந்த, தமிந்து அஷன் 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில், லக்சன் ரோட்ரிகோ மற்றும் லால் குமார் ஆகியோர் லங்கன்ஸ் அணி சார்பாக இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இப்போட்டியின் ஆட்டத்தின் அடிப்படையில், லங்கன் கிரிக்கெட் கழகம் 12.25 புள்ளிகளையும், களுத்துறை கிரிக்கெட் கழகம் 2.77 புள்ளிகளினையும் பெற்றுக்கொண்டன.

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம்(முதல் இன்னிங்ஸ்): 428 (109.3), மதுரங்க சொய்ஸா 127, சரித் பெர்னாந்து 104, லக்சன் ரொட்ரிகோ 68, ருச்சிர தரின்த 108/3, பஹாத் பாபர் 49/2

களுத்துறை பெளதீக கலசார அணி(முதல் இன்னிங்ஸ்): 152 (53.5), ரசிக்க பெர்னாந்து 54, மனோஜ் நிரோசன் 44, நவின் கவிகர 73/6, ரஜீவ வீரசிங்க 54/3

களுத்துறை பெளதீக கலசார அணி f/o (இரண்டாவது இன்னிங்ஸ்): 102/5 (40.3), தமிது அஷன் 49(71), நிலான் பெர்னாந்து 23*, லக்சன் ரொட்ரிகோ 3/2, லால் குமார் 21/2

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது.


களுத்துறை நகர கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

மக்கோன சர்ரேய் மைதானத்தில் இன்று ஆரம்பமாகிய இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற களுத்துறை நகர கழக அணியின் தலைவர் சுலான் ஜயவர்த்தன முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

இதன்படி முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய அவரின் அணி, ஒரு நல்ல ஆரம்பத்தினை கொடுத்த போதும், அச்சுறுத்தலாக அமைந்த எதிரணியின்  பந்து வீச்சாளர்களால் 66.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

களுத்துறை நகர அணி சார்பாக துடுப்பாட்டத்தில், நடுத்தர வரிசையில் ஓரளவு சிறப்பாக அவ்வணியின் தலைவர் சுலான் ஜயவர்தன 38 ஓட்டங்களினை பெற்றுக்கொண்டதுடன், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த சமோத் சில்வா 30 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில், இடது கை சுழல் பந்து வீச்சாளர் சமிகர எதிரிசிங்க 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியதுடன், வேகப்பந்து வீச்சாளர் ஒமேஷ் விஜயசிரிவர்தன 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பின்னர், தமது முதலாவது இன்னிங்சினை ஆரம்பித்த இலங்கை துறைமுக அதிகார சபை, ஒரு ஓவர் மாத்திரம் வீசப்பட்ட நிலையில் விக்கெட் இழப்பின்றி 2 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டியில் மழை குறுக்கிட இன்றைய ஆட்டம் நிறைவிற்கு வந்தது.

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர கழக அணி: 156 (66.5), சுலான் ஜயவர்தன 38, சமிகர எதிரிசிங்க 40/4, ஒமேஷ் விஜயசிரிவர்தன 23/3, சானக்க கோமசரு 32/2

இலங்கை துறைமுக அதிகாரசபை அணி: 2/0 (1)

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்


குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டு கழகம்

கடுநாயக்கவில் ஆரம்பமாகிய இப்போட்டியில், இதுவரை இத்தொடரில் எந்தவொரு வெற்றியினையும் பெறாத குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகமும் பொலிஸ் விளையாட்டு கழகமும் மோதிக்கொண்டன.

பின்னர், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழக அணியின் தலைவர் அனுராத ராஜபக்ச, முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்தார்.

ஆரம்ப வீரர்களில், ஒருவரான தர்ஷன மஹாவத்த முதல் ஓவரிலேயே ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்து சென்றார். பின்னர், வந்த முன்னணி வீரர்களும் ஓரிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து செல்ல, ஒரு கட்டத்தில், 18 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை இழந்து குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் தடுமாறியது.

பின்னர் நடுத்தர வரிசை வீரர்களான ருவன்த ஏக்கநாயக்க, மற்றும் அவ்வணியின் தலைவர் அனுராத ராஜபக்ச ஆகியோர் ஓரளவு சிறப்பான ஆட்டத்தினை கொண்டு அணியை முன்னேற்றிக்கொண்டு வரும் வேளையில், இருவரும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆட்டமிழந்து சென்று, ஏனைய வீரர்களும் சொதப்ப 40.5 ஓவர்களில் 109 ஓட்டங்களை மாத்திரம் அவ்வணி பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில், ஓரளவு சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த ருவன்த ஏக்கநாயக்க 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில், பொலிஸ் விளையாட்டு கழகம் சார்பாக சுவஞ்சி மதநாயக்க, சானுக்க விஜேயலாத் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பின்னர், தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த பொலிஸ் அணி 2 விக்கெட்டுக்களை இழந்து 35 ஓட்டங்களினை பெற்றிருந்த வேளையில், இப்போட்டியிலும் மழை குறுக்கிட்டு இன்றைய ஆட்டம் நிறைவிற்கு வந்தது.

இதன்போது பலித்த குமார 3 ஓட்டங்களுடனும், சுவஞ்சி மதுநாயக்க 1 ஓட்டத்துடனும் களத்தில் நின்றிருந்தனர்.

போட்டியின் சுருக்கம்

குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்: 109 (40.5), ருவந்த ஏக்கநாயக்க 43, அனுருத்த ராஜபக்ச 24, சுவஞ்சி மதுநாயக்க 20/3, சாருக்க விஜயலத் 30/3

பொலிஸ் விளையாட்டு கழகம்: 35/2 (18.4), அகில லக்சன் 14

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்


பாணதுறை விளையாட்டுக் கழகம் எதிர்  இலங்கை விமானப்படை விளையாட்டுக்s கழகம்

இத்தொடரில், புள்ளிகள் அடிப்படையில் முதலாம் இடத்தில் இருக்கும் பாணதுறை கிரிக்கெட் கழகமும், எதுவித போட்டியிலும் வெற்றி பெறாமல் புள்ளிகள் அடிப்படையில் இறுதியாக இருக்கும் இலங்கை விமானப்படை அணியும் பாணதுறையில் இடம்பெற்ற இப்போட்டியில் மோதிக்கொண்டன.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை விமானப்படை அணியின் தலைவர் ரங்க திசநாயக்க முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை பாணதுறை கிரிக்கெட் கழகத்திற்கு வழங்கினார்.

இதனடிப்படையில், தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த அவ்வணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர், நிசல் ரன்திக்க (88), மதவ்வ நிமேஷ் (51)  ஆகியோர் ஆட்டமிழக்காமல் பெற்ற அரைச்சதங்களின் உதவியுடன், 55 ஓவர்களிற்கு 235 ஓட்டங்களினை பெற்று வலுவான நிலையில் இருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்தும் மழை நீடித்த காரணத்தினால், இன்றைய போட்டியின் ஆட்டம் முடிவடைந்ததாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

இன்றைய ஆட்டத்தில், சஹான் ஜெயவர்தன 80 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை இலங்கை விமானப்படை அணி சார்பாக கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பாணதுறை கிரிக்கெட் கழகம்: 235/4 (55), நிசல் ரன்திக்க 88*, மதவ்வ 51*, சஹான் ஜெயவர்த்தன 80/2

போட்டியின் இரண்டாவது நாள் நாளை தொடரும்