16 வயதின்கீழ் தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவு ஒத்திவைப்பு

206

நாளை மற்றும் நாளை மறுதினம் (மே 27, 28) ஆகிய இரண்டு தினங்களிலும் இடம்பெற இருந்த 16 வயதின்கீழ் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கான வீரர்கள் தெரிவு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளம் தெரிவித்துள்ளது.

16 வயதின் கீழ் தேசிய கால்பந்து அணிக்கான தெரிவு இம்மாத இறுதியில்

ஆசிய கால்பந்து சம்மேளத்தின் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் பங்குகொள்வதற்கான அணி வீரர்கள் தெரிவு குறித்த தினங்களில் இடம்பெறும் என ஏற்கனவே கால்பந்து சம்மேளனம் தெரிவித்திருந்தது.

எனினும், நாட்டில் நிலவியுள்ள அசாதாரண காலநிலையே வீரர்கள் தெரிவு ஒத்திவைப்பிற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும், மீண்டும் இந்த தெரிவு எப்பொழுது இடம்பெறும் என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

நடைபெறவுள்ள தகுதிகாண் சுற்றுப் போட்டியில் உஸ்பகிஸ்தான், சவுதி அரேபியா, ஜோர்தான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுடன் இலங்கை அணி குழு A யில் அங்கம் வகிக்கின்றது.  

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற 16 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான ஆசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் போட்டிகளில் உஸ்பகிஸ்தான் 5ஆவது இடத்தையும், சவுதி அரேபியா 11ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

இம்முறை இடம்பெறும் போட்டித் தொடரில், ஒவ்வொரு குழுவில் இருந்தும் முதல் இடத்தைப் பெறும் 10 அணிகளும், அதிக புள்ளிகளுடன் குழு நிலையில் இரண்டாவது இடத்தைப் பெறும் 5 அணிகளும் போட்டியை நடாத்தும் நாடுகளின் அணிகளுடன் இணைந்து இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும்.