அரையிறுதிக்கு முன் ICU இல் சிகிச்சை பெற்ற ரிஸ்வான்

ICC T20 World Cup – 2021

99
mohammad rizwan

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான T20 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன் பாகிஸ்தான் அணியின் விக்கெட் காப்பாளர் மொஹமட் ரிஸ்வான் இரண்டு நாட்களாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார் என்ற செய்தி தற்போது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகி உள்ளது.

உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் அவர் நாட்டுக்காக ஆடியது பாகிஸ்தானியர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களையும் வென்றுள்ளது. இதனால் அவருக்கு முன்னாள் ஜாம்பவான்களும் ரசிகர்களும் பாராட்டுமழை பொழிந்துவருகின்றனர்.

ஐக்கிய அரபு இராட்சியத்தில் நடைபெற்றுவரும் T20 கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் முன்னேறியுள்ளன. இதில் முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணியும், பாகிஸ்தானை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்த தொடர் முழுவதும் அபாரமாக விளையாடிய பாகிஸ்தான் அணி, சுபர் 12 சுற்றில் இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட பிரபல அணிகளை வீழ்த்தியதுடன், விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

அதுமாத்திரமின்றி, இம்முறை T20 உலகக் கிண்ணத்தை வெல்கின்ற வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, நேற்று (11) நடைபெற்ற 2ஆவது அரையிறுதியில் அவுஸ்திரேலியாவிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறியது.

இதனிடையே, அவுஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றிருந்தாலும், அந்த அணியின் விக்கெட் காப்பாளர் மொஹமட் ரிஸ்வான் செய்த அர்ப்பணிப்பால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றுவிட்டார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆடுவதற்கு முன், சுவாசக் குழாயில் ஏற்பட்ட தொற்று காரணமாக மொஹமட் ரிஸ்வான் கடந்த 2 நாட்களாக டுபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

இதில் அரையிறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் இரவு முழுவதும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ரிஸ்வான், போட்டி நாளான நேற்று காலை தான் மருத்துவமனையிலிருந்து வெளியேறி அணியுடன் இணைந்துகொண்டார்.

இதற்குமுன் மொஹமட் ரிஸ்வானும், சொஹைப் மலிக்கும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இருவரும் அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் விளையாடுவது சந்தேகம் என செய்திகள் வெளியாகி இருந்தன.

எவ்வாறாயினும், மொஹமட் ரிஸ்வான் சுவாசக் குழாயில் ஏற்பட்ட தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது போட்டி முடிவடைந்த பிறகுதான் தெரிய வந்தது.

இதனிடையே, மொஹமட் ரிஸ்வானின் உடல்நிலையை கருத்தில்கொண்டு ஓய்வு எடுக்குமாறு பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் போட்டிக்கு முன்னர் கூறியிருக்கிறார்.

ஆனால், நாட்டுக்காக ஆடியே தீருவேன் என்ற உறுதியுடன் அவுஸ்திரேலியாவிற்கு எதிராகக் களமிறங்கிய அவர், அபாரமாக ஆடி அரைச்சதம் அடித்தார். 52 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 67 ஓட்டங்களைக் குவித்தார். அதிலும் போட்டியின் 18ஆவது ஓவரில் தான் ரிஸ்வான் ஆட்டமிழந்தார்.

உடல்நலக்குறைவுடன் ஆரம்ப வீரராகக் களமிறங்கி கிட்டத்தட்ட 20 ஓவர்கள் வரை ஆடிவிட்டு, அதன்பின்னர் 2ஆவது இன்னிங்ஸில் 20 ஓவர்கள் முழுமையாக விக்கெட் காப்பாளராகவும் அவர் செயல்பட்டார்.

எனவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு நாட்டுக்காக மீண்டும் விளையாடிய மொஹமட் ரிஸ்வான், துடுப்பாட்டத்தில் பிரகாசித்து, விக்கெட் காப்பிலும் முழுமையாக செயல்பட்டது கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்றுவிட்டது. இதனால் அவர் பாகிஸ்தானின் ரியல் ஹீரோவாக கொண்டாடுகின்றனர்.

இதுதொடர்பில் பாகிஸ்தான் அணியின் ஆலோசகரும், அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரருமான மெத்யூ ஹெய்டன் கருத்த தெரிவிக்கையில்,

மொஹமட் ரிஸ்வான் எப்படி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என சந்தேகம் எழுந்தது. நுரையீரல் பிரச்சினை காரணமாக ரிஸ்வான் இரவு முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மறுநாள் ஒரு போர் வீரன் போல களத்திற்கு வந்தார். அவருடைய தைரியம் பாராட்டத்தக்கது என கூறியுள்ளார்.

அதேபோல, ரிஸ்வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்த சொஹைப் அக்தர்,

உங்களால் நம்ப முடிகிறதா, இவர் இன்று நாட்டுக்காக ஆடி பெரிய பங்களிப்பு செய்ததை? கடந்த 2 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பெரிய மரியாதை ஏற்படுகிறது. ஹீரோ ரிஸ்வான் என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த மொஹமட் ரிஸ்வான், 6 போட்டிகளில் விளையாடி 281 ஓட்டங்களைக் குவித்துள்ளார். பாபர் அசாமிற்குப் பிறகு (303 ஓட்டங்கள்) அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, ரிஸ்வானின் இந்த உடல் நிலை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான அவரது தைரியமான இன்னிங்ஸ் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க