இலங்கையின் தோல்வியை ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா

228

இலங்கையை வீழ்த்தி, இந்திய அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற உதவிய நியூசிலாந்து அணிக்கு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நன்றி தெரிவித்துள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவதற்கு, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. ஒருவேளை, அந்த அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தால், இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறுகின்ற வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையும் இருந்தது.

அதாவது, நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி முன்னேறிவிடும். மறுபுறத்தில் இந்திய அணி வெளியேற்றப்படலாம் என்ற ஒரு சிக்கல் நிலை காணப்பட்டது.

ஒருபக்கம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் இருந்ததால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. மறுபக்கம் துரதிஷ்டவசமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது. இது இந்திய அணிக்கு இன்னும் தலைவலியை கொடுத்தது. இறுதியில் நியூசிலாந்து அணி ஐந்தாம் நாளில், கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இலங்கை அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. இதனால் இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதன்படி. எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறுகின்ற இறுதிப் போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

எனவே, அவுஸ்திரேலியாவுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடுவதற்கு தகுதி பெற மறைமுகமாக உதவிய நியூசிலாந்து அணிக்கு இந்திய ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

இருப்பினும் 2000ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணம் முதல் 2019 ஒருநாள் உலகக் கிண்ணம், 2021 உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் வரை நடைபெற்ற பெரும்பாலான ஐசிசி தொடர்களில் இந்திய அணியை நொக் அவுட் போட்டிகளில் தோற்கடித்து வெளியேற்றிய பெருமையைக் கொண்ட நியூசிலாந்து அணி, இப்போட்டியில் தங்களை மீண்டும் இம்முறை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இருந்தும்  வெளியேற்றும் என்று எதிர்பார்த்ததாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

ஆனால் இம்முறை காலை வாராமல் உதவி செய்த நியூசிலாந்துக்கு நன்றி தெரிவிக்கும் அவர், இலங்கைக்கு எதிரான போட்டியின் பரபரப்பான கடைசி 5 ஓவர்களை ரசிகர்களைப் போலவே தானும், இந்திய அணி வீரர்களும் தொலைக்காட்சியில் பார்த்ததாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இதுபற்றி அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த ராகுல் டிராவிட்,

‘நாங்கள் விளையாடும் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் முடிவுகளை காண முயற்சிக்கிறோம். குறிப்பாக, இத்தொடரில் 3 போட்டிகளை வென்று நியூசிலாந்து – இலங்கை தொடரை கணக்கில் எடுக்காமல் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை எங்கள் கையிலேயே வைத்திருக்க விரும்பினோம். இருப்பினும், அகமதாபாத் மைதானத்தின் ஆடுகளத்தைப் பார்த்த பிறகு நாணய சுழற்சியில் வெல்வது முக்கியம் என்பதை உணர்ந்தோம். ஆனால் அது கைநழுவி சென்ற போது அவுஸ்திரேலியா முதலிரெண்டு நாட்கள் சிறப்பாக துடுப்பாடி கணிசமான ஓட்டங்களைக் குவித்ததால் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியின் முடிவை நம்பியிருக்க வேண்டிய நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம்.

அதனால் அப்போட்டியை ஆவலுடன் பார்த்த நாங்கள் இலங்கை வெல்லக்கூடாது என்று நம்பினோம். மேலும் டெஸ்ட் சம்பியன்ஷிப் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தொடர் என்பதுடன், அதில் அனைத்து அணிகளும் 6 தொடர்களில் விளையாட வேண்டும் என்பதால் நீங்கள் மற்ற அணிகளின் வெற்றிகளை சார்ந்திருக்க வேண்டும் என்பது இயற்கையாகவே ஏற்படக்கூடிய நிலைமையாகும்.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் பொதுவாக எங்களை ஐசிசி தொடர்களில் நொக் அவுட் செய்து வரும் நியூசிலாந்து இம்முறை சிறிய உதவி செய்துள்ளது. அதற்கு அவர்களுக்கு நாங்கள் நன்றியை தெரிவிக்கிறோம். இலங்கையுடனான போட்டியை சமநிலையில் முடிக்காமல் நியூசிலாந்து வெற்றி காண முயற்சித்தது எங்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் எங்களை அமைதிப்படுத்திக் கொண்ட நாங்கள் பகல் உணவு இடைவெளியில் கடைசி 5 – 6 ஓவர்கள் போட்டியை தொலைக்காட்சியில் பார்த்தோம்’ என்று கூறினார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<