மனைவியின் நெகிழ்ச்சியான பதிவால் பலர் மனதை வென்ற கோஹ்லி

141

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான விராட் கோஹ்லி 186 ஓட்டங்கள் விளாசி அசத்தினார்.

இரட்டைச் சதமடிக்கின்ற வாய்ப்பை அவர் தவறவிட்டாலும், அவரது அந்த இமாலய இன்னிங்ஸ் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸுக்காக 571 ஓட்டங்களைக் குவித்தது. உடல்நலக்குறைவையும் மீறி விராட் கோஹ்லி சிறப்பாக விளையாடியதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையில் அகமதாபாத்தில் நடைபெற்ற 4ஆவதும், கடைசியுமான டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய வென்றதோடு, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். இது அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் 28ஆவது சதம் என்பதுடன், சர்வதேச கிரிக்கெட்டில் 75ஆவது சதமாகும்.

அவர் கடைசியாக 2019 நவம்பர் மாதம் 22ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதையடுத்து 40 மாதங்களுக்கு பின்னர் கோஹ்லி, டெஸ்ட் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

 இதற்கு இடைப்பட்ட நாட்களில் கோலி 41 இன்னிங்ஸ்களை டெஸ்டில் விளையாடியிருந்தார். இந்த போட்டிகளில் அவர் சதம் ஏதும் அடிக்காததால் விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தார். எனவே, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இந்த அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எனவே, 3 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் சதமடித்து சாதனை படைத்த விராட் கோஹ்லிக்கு முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுனர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், தண்ணீர் சத்து குறைந்து விராட் கோஹ்லிக்கு காலில் வலி ஏற்பட்டது. இதனை அடுத்து அணி மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தார்கள்.

இந்த நிலையில் விராட் கோஹ்லி சதம் அடித்ததன் பின்னணி குறித்து அவரது மனைவியும், பொலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டபோதிலும், சிறப்பாக கோஹ்லி விளையாடியுள்ளார். இந்த பண்புதான் என்னை எப்போதும் ஈர்க்கும்’ என்று பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் உடல் நல பாதிப்பையும் பொருட்படுத்தாமல் விராட் கோஹ்லி சதத்தை விளாசியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவரை சிலாகித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<