புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் ஏற்பாடு செய்து நடாத்திக்கொண்டிருக்கின்றட்ரகன்ஸ் லீக் -2017′ போட்டிகளின் 19வது லீக் ஆட்டம் புத்தளப் பிரதேசத்தின் அனுபவமிக்க அணிகளான த்ரீ ஸ்டார் மற்றும் யுனைடட் விளையாட்டுக் கழகங்களுக்கு இடையில் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

பொல்ட்டன் கழகத்தை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறியது நியுப்ரண்ஸ் கழகம்

இப் போட்டியில் இரண்டாம் பாதியின் அசத்தலான ஆட்டத்தினால் பலமிக்க த்ரீ ஸ்டார் கழகத்தினை 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்ட யுனைடட் அணி தொடர்ச்சியான நான்காவது வெற்றியினைப் பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் முதல் நிலையில் உள்ளது.

”இப் போட்டி ஆரம்பிக்க முன்னர் கடந்த வியாழக்கிழமை டெங்குக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த த்ரீ ஸ்டார் கழகத்தின் தலை சிறந்த முன்னாள் வீரரான மனாசிர் அவர்களுக்காக மைதானத்திலிருந்த அனைவரினாலும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

பின்னர் போட்டி ஆரம்பித்து 17வது நிமிடத்தில் த்ரீ ஸ்டார் கழக வீரர் அப்ரீன் கொடுத்த பந்தினை ஆதில் கம்பம் நோக்கி அடிக்க பந்து கம்பத்திற்கு அப்பால் சென்றது.

சில நிமிடங்களின் பின்னர் யுனைடட் கழகத்தின் இர்ஸாத் வழங்கிய உயரமான பந்துப் பரிமாற்றத்தை றுஸான் உயரே எழுந்து தலையால் முட்டி கம்பம் நோக்கி அனுப்ப பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது. எனவே, சிறப்பான முயற்சி வீணாகிப் போனது.

அதன் பின்னர் 25வது நிமிடத்தில் யுனைடடின் ஜர்க்கின் கொடுத்த பந்தினை றுஸான் தலையால் முட்டி கம்பத்திற்குள் திருப்ப, அதை வேகமாக செயற்பட்டு தன் கையால் குத்தி வெளியேற்றினார் த்ரீ ஸ்ரார் கோல் காப்பாளர் நிப்ராஸ்.

மேலும் 5 நிமிடங்களில் த்ரீ ஸ்டார் வீரர் பௌஸான் கொடுத்த நேர்த்தியான பந்துப் பரிமாற்றத்தை பெற்ற ஆதில் கோலாக்க வேண்டிய வாய்ப்பை தலையால் முட்டி ஹஸானின் கைகளுக்கே தாரை வார்த்தார்.

இர்ஸாத் கொடுத்த இலகுவாக கோல் அடிக்கக் கூடிய பந்துப் பரிமாற்றத்தை பஸ்ரின் கம்பத்திற்கு வெளியே உதைக்க, மற்றொரு கோல் வாய்ப்பும் வீணாகிப் போனது.

இரு அணி வீரர்களும் கோலுக்காக அதிகமான முயற்சிகளில் ஈடுபட மைதானம் முழுதும் திரண்டிருந்த ரசிகர்களின் ஆரவாரமும் அதிகரித்துக் காணப்பட்டது.

இதேவேளை, முதல் பாதியின் இறுதி முயற்சியாக த்ரீ ஸ்டார் கழக வீரர் இன்ஸாப் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை பெற்ற பௌஸான் சிறப்பாக கம்பம் நோக்கி அடிக்க நேர்த்தியாகச் செயற்பட்ட ஹஸான் பந்தை கையால் தட்டி விட்டார்.

முதல் பாதி : யுனைடட் விளையாட்டுக் கழகம் 0-0 த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம்.

முதல் பாதியில் பலன் கிடைக்காமல் போக இரு கழகங்களும் இரண்டாம் பாதியில் வெற்றிக்காக அதிகமாக உழைகக்க வேண்டியிருந்தது.

இரண்டாம் பாதி ஆரம்பமாகிய அடுத்த கனமே த்ரீ ஸ்டார் கழகத்திற்கு முதல் கோல் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வணியின் அப்தால் கொடுத்த பந்தினை பாரிஸ் யுனைடடின் தடுப்பு வீரர்கள் இருவரைத் தாட்டி கம்பம் நோக்கி உதைத்தார். எனினும் வேகமாக வந்த பந்தினை ஹஸான் இலகுவாக கையால் தட்டி விட்டார்.

ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் த்ரீ ஸ்டாரின் அப்ரார் கொடுத்த பந்தினை பௌஸான் கம்பம் நோக்கி அடிக்க மீண்டும் சிறப்பாகச் செயற்பட்ட ஹஸான் பாய்ந்து பந்தை கையால் குத்தி வெளியேற்றினார்.

போட்டியின் 60வது நிமிடத்தில் இரண்டாம் பாதியில் யுனைடட் கழகத்திற்கு கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் றுஸான் பந்தினை இர்ஸாத்திடம் கொடுக்க, அவர் கம்பத்திற்கு அருகில் சென்று இலகுவாக பந்தை கோலுக்குள் செலுத்தி தமது கழகத்தின் முதல் கோலினைப் பதிவு செய்தார்.

18 வயதின் கீழ் இலங்கை தேசிய கால்பந்து அணி விபரம்

இவ்வாறாக போட்டி சென்று கொண்டிருக்க 65வது நிமிடத்தில் த்ரீ ஸ்டார் வீரர் ஆதில் கொடுத்த அருமையான பந்துப் பரிமாற்றத்தை பெற்ற பாரிஸ் கம்பத்திற்கு வெளியே பந்தை உதைந்தார்.

ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் இர்ஸாத் தடுப்பு வீரர்களைத் தாண்டி பந்துப் பரிமாற்றம் ஒன்றினை ஜர்க்கினிற்கு கொடுத்தார். அதை சிறப்பாகச் செயற்பட்டு கோல் காப்பாளர் இல்லாத திசையினூடாக கம்பத்திற்குள் அடிக்க யுனைடடின் இரண்டாம் பாதியின் இரண்டாவது முயற்சி கோல் கணக்கினை இரட்டிப்பாக்கியது.

இரண்டாம் பாதி கோல் அதிர்ச்சியில் இருந்து த்ரீ ஸ்டார் கழகம் மீள்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டும் அவை ஒன்றும் பயனில்லாமல் செல்ல, த்ரீ ஸ்டார் வீரர்கள் ஆக்ரோசமாக ஆடத் தொடங்கினர்.

போட்டியின் 82வது நிமிடத்தில் த்ரீ ஸ்டார் வீரர் முராட் கொடுத்த பந்தினை தலைவர் அஸ்ரான் கம்பம் நோக்கி அடிக்க பந்து கம்பத்திற்கு அருகாமையால் வெளியே சென்றது.

இறுதி முயற்சிகள் பலனளிக்காமல் போக போட்டியின் 89வது நிமிடத்தில் இரு அணியினதும் வீரர்களுக்கிடையில் ஏற்பட்ட தர்க்கம் காரணமாக த்ரீ ஸ்டாரின் இரண்டு வீரர்களுக்கும் யுனைடடின் ஒரு வீரருக்கும் மஞ்சள் அட்டையினை காட்டி நடுவர் எச்சரிக்கை விடுத்தார்.

எஞ்சிய இறுதி நிமிடத்தில் த்ரீ ஸ்டாரின் கோலுக்கான முயற்சிகளை யுனைடட் தடுப்பு வீரர்கள் முறியடிக்க போட்டி நிறைவு பெற்றதாக நடுவர் அறிவித்தார். எனவே, த்ரீ ஸ்டார் கழகத்தினை வீழ்த்தி இந்த லீக் தொடரின் நான்காவது தொடர் வெற்றியினைப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் நிலைக்கு முன்னோரியது யுனைடட் விளையாட்டுக் கழகம்.

முழு நேரம் : யுனைடட் விளையாட்டுக் கழகம் 2-0 த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம்.

கோல் பெற்றவர்கள்

யுனைடட் விளையாட்டுக் கழகம் – இர்ஸாத் 60’, ஜர்க்கின் -75’

மஞ்சள் அட்டை

த்ரீ ஸ்டார் விளையாட்டுக் கழகம் –  பாரிஸ் 89’, நபாஸ் 89’

யுனைடட் விளையாட்டுக் கழகம் – இர்ஸாத் 89’