புத்தளம் உதைப்பந்தாட்ட லீக் பெருமையோடு ஏற்பாடு செய்து நடாத்திக் கொண்டிருக்கின்ற ‘ட்ரகன்ஸ் லீக் -2017’ போட்டிகளின் 18ஆவது லீக் ஆட்டம் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில் பலமும் அனுபவமும் மிக்க புத்தளம் பொல்ட்டன் கழகமும் இளம் வீரர்களைக் கொண்ட நியுப்ரண்ஸ்  கழகமும் பலப்பரீட்சை நடாத்தின.

இப்போட்டியில் 4-2 என்ற கோல்கள் கணக்கில் அனுபவமிக்க பொல்ட்டன் கழகத்தை இளம் நியுப்ரண்ஸ் கழகம் இலகுவாக வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பெருந்திரலான ரசிகர்களின் கரகோசத்தோடு இரு அணி வீரர்களும் ஆடுகளம் கண்டனர். இப்போட்டி இரு அணியினருக்கும் மிக முக்கியமான போட்டி என்பதனால் இரு அணியினரும் வெற்றிக்காக பெரிதும் உழைக்க வேண்டியிருந்தது.

போட்டியின் 10ஆவது நிமிடத்தில் நியுப்ரண்ஸ் அணியின் தனஞ்சய கொடுத்த பந்தினை பர்மான் கோல் கம்பம் நோக்கி அடிக்க அதை இலகுவாக பிடித்துக் கொண்டார் உயரம் குறைந்த இளம் கோல் காப்பாளர் சராப்.

மீண்டும் போட்டியின் 16ஆவது நிமிடத்தில் நியுப்ரண்ஸின் அறூன் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை ஜஹீர் வந்த வேகத்திலே கம்பம் நோக்கி உதைக்க பந்து கம்பத்திற்கு மேலால் செல்ல வீணானது முயற்சி.

போட்டியின் 21ஆவது நிமிடத்தில் பொல்ட்டன் கழகத்தின் அப்துல்லாஹ் கொடுத்த உயரமான பந்துப் பரிமாற்றத்தை ஹகாம் தலையால் முட்டி கோலாக்க முயல அதை அப்ஸான் சிறப்பாக செயற்பட்டு கையால் தட்டி வெளியேற்றினார்.

ஒடிடாஸை இலகுவாக வீழ்த்தி புள்ளிக் கணக்கை ஆரம்பித்தது பேல்ஸ் கழகம்

மேலும் போட்டியின் 26ஆவது நிமிடத்தில் பொல்ட்டன் கழகத்திற்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பினை இஹ்ஸான் கம்பம் நோக்கி வேகமாக அடிக்க பந்து கம்பத்தின் மேல் பகுதியில் பட்டு வர அதை நியுபிரண்ஸின் தடுப்பு வீரர் வெளியேற்ற பொல்ட்டன் கழகத்தின் கோல் பெறும் முயற்சி வீணானது.

இரு அணியினரின் கால்களிலும் பந்து சம விகிதத்தில் காணப்பட போட்டி விறுவிறுப்பானது. கோலுக்கான முயற்சியில் இரு கழகத்தினதும் முன்கள வீரர்கள் மும்முரமாகக் ஈடுபட்டனர்.

போட்டியின் 36ஆவது நிமிடத்தில் நியுப்ரண்ஸ் அணியின் நிஸ்பாக் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தை பர்மான் கம்பம் நோக்கி உதைக்க பந்து மைதானத்திற்கு வெளியே சென்றது.

போட்டியின் 44ஆவது நிமிடத்தில் பெனால்டிப் பகுதிக்குள் நியுப்ரண்ஸின் வீரர் பர்மானை பொல்ட்டன் தடுப்பு வீரர் கையால் இழுத்து கீழே தள்ள நியுப்ரண்ஸ் கழகத்திற்கு பெனால்ட்டி உதையினை நடுவர் வழங்கினார்.

பெனால்ட்டி உதையை ஜஹீர் அடிக்க பந்து எந்தத் தடையும் இன்றி கம்பத்திற்குள் செல்ல நியுப்ரண்ஸ் கழகம் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை அடைந்தது.

முதல் பாதி:  நியுப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம் 1 – 0 பொல்ட்டன் விளையாட்டுக் கழகம்

முதல் பாதியில் கோல் அடிக்கும் வாய்புக்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிந்ததால் இரண்டாம் பாதியில் விட்ட தவறுகளை சீர் செய்து கோல் கணக்கினை ஆரம்பித்து சமப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பொல்ட்டன் கழகம் களமிறங்க முதற் பாதி முன்னிலையோடு களமிறங்கியது நியுப்ரண்ஸ்.

இரண்டாம் பாதி ஆரம்பித்து 5ஆவது (50) நிமிடத்தில் நியுப்ரண்ஸின் பர்மான் கொடுத்த சிறப்பான பந்துப் பரிமாற்றத்தை ஜஹீர் கம்பம் நோக்கி உயர்த்தி அடிக்க இலகுவாக பிடிக்க வேண்டிய பந்து உயரம் குறைந்த சராபின் கைகளுக்கு மேலால் சென்று கம்பத்திற்குள் சரணடைய நியுப்ரண்ஸின் கோல் எண்ணிக்கை இரட்டிப்பானது.

கோல் அதிர்ச்சியிலிருந்து பொல்ட்டன் கழகம் மீள்வதற்குள் அறூன் கொடுத்த நேர்த்தியான உயரமான பந்துப்பரிமாற்றத்தை அணித்தலைவர் இம்தியாஸ் நெஞ்சினால் தட்டி எடுத்து கம்பத்திற்குள் இலகுவாக அடிக்க சராப் பிடிக்க முயற்சிக்க முன் கோலாக மாற 3 – 0 என்ற கோல்கள் கணக்கில் நியுப்ரண்ஸ் கழகம் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதி ஆரம்பத்திலேயே நியுப்ரண்ஸின் அதிரடி ஆட்டத்தால் அனுபவம் மிக்க பொல்ட்டன் கழகம் ஆட்டம் கண்டு நின்றது.

போட்டியின் 61ஆவது நிமிடத்தில் பொல்ட்டன் கழகத்திற்கு கிடைத்த கோணர் கிக் வாய்ப்பினை இஹ்ஸான் கம்பம் நோக்கி அடிக்க உயர்ந்து வந்த பந்தை அஸ்பான் கையால் குத்தி விட பந்து மீண்டும் பொல்ட்டன் வீரர் ஹக்காமின் கால்களில் கிடைக்க அதை ஹக்காம் கம்பத்திற்குள் மீண்டும் அனுப்ப பொல்ட்டன் கழகம் முதல் கோலைப் போட்டு பதிலடி கொடுக்க ஆரம்பித்தது.

மீண்டும் போட்டியின் 73ஆவது நிமிடத்தில் பொல்ட்டன் அணியினருக்குக் கிடைத்த கோணர் கிக் வாய்ப்பை இஹ்ஸான் அடிக்க அதை நியுப்ரண்ஸின் தடுப்பு வீரர் தலையால் முட்டி வெளியேற்ற கோல் பெறும் வாய்ப்பு வீணாகிப்போனது.

பந்து இரண்டாம் பாதியில் பொல்ட்டன் கழகத்தின் கால்களிலே அதிகமாகக் காணப்பட்டது. இதனால் பொல்ட்டன் கழகத்தின் ஆதிக்கம் சற்று ஓங்கிக் காணப்பட்டது.

போட்டியின் 78ஆவது நிமிடத்தில் பொல்ட்டன் கழகத்திற்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ஹக்காம் அடிக்க உயரமாக வந்த பந்தினை இஹ்ஸான் தலையால் முட்டி கோலாக்க முயல பந்து கம்பத்திற்கு மேலால் சென்றது.

82ஆவது நிமிடத்தில் நியுப்ரண்ஸ் கழகத்தின் ஜஹீர் கொடுத்த சிறந்த பந்துப் பரிமாற்றத்தை நேர்த்தியாகப் பெற்றுக் கொண்ட பர்மான் கம்பத்திற்குள் உருட்டி அடிக்க சராபால் எந்த வித முயற்சியும் செய்ய முடியாமல் போக தனது 4ஆவது கோலினை நியுப்ரண்ஸ் கழகம் பதிவு செய்தது.

88ஆவது நிமிடத்தில் பொல்ட்டன் முன்கள வீரர்கள் ஓப்சைட் முறையில் பந்தை பெணால்ட்டி பகுதிக்குள் கொண்டு செல்ல பக்க நடுவர் ஓப்சைட் என செய்கை காட்ட கள நடுவர் ஓப்சைட் என அறிவிக்கும் முன்னர் நியுப்ரண்ஸ் கழகத்தின் பஹீம் பந்தினை கையால் பிடிக்க நடுவர் பெனால்ட்டி உதையினை பொல்ட்டன் கழகத்திற்கு வழங்கினார்.

பெனால்டி உதையை இஹ்ஸான் இடக்காலால் இலகுவாக கம்பத்திற்குள் அடிக்க அஸ்பான் பாய்ந்து தடுக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிய பொல்ட்டன் கழகத்தின் கோல் கணக்கு இரட்டிப்பானது.

இறுதியில் போட்டி நிறைவு பெற்றதாய் நடுவர் அறிவிக்க பலமும் அனுபவமும் மிக்க பொல்ட்டன் கழகத்தை 4 : 2 என்ற கோல்கள் அடிப்படையில் போராடி வென்று புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்திற்கு நியுப்ரண்ஸ் கழகம் முன்னேறியது.

முழு நேரம்: நியுப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம் 4 – 2 பொல்ட்டன் விளையாட்டுக் கழகம்

கோல் பெற்றவர்கள்

நியுப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம் – ஜஹீர்  (44’, 50’), இம்தியாஸ் 58’, பர்மான் 82’

பொல்ட்டன் விளையாட்டுக் கழகம் – ஹக்காம் 61’, இஹ்ஸான் 88’

மஞ்சள் அட்டை

நியுப்ரண்ஸ் விளையாட்டுக் கழகம் – இம்ஜாத் 70’, பாஹீம் 78’