தென்னாபிரிக்கா 19 வயதிற்குட்பட்டோர் அணியை 295 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தியது டேனியல், ஜெயவிக்ரம ஜோடி

196
SL U19 vs SA U19s - 3rd Youth Test - Day 1

பல்லேகெல்ல மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவதும் இறுதியுமான இளைஞர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமானது.

புனித ஜோசப் கல்லூரியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜெஹான் டேனியல் மற்றும் புனித செபஸ்டியன் கல்லூரியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரம பந்துவீச்சில் சிறப்பாகச் செயற்பட்டு தென்னாபிரிக்கா 19 வயதிற்குட்பட்டோர் அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.

முதல் இரண்டு போட்டிகளும் சமநிலையில் முடிந்த பட்சத்தில் இரு அணிகளும் வெற்றி பெறும் நோக்குடன் களமிறங்கின. இலங்கை அணி கடந்த போட்டியில் விளையாடிய அணியில் சில மாற்றங்களைச் செய்து களமிறங்கியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற வியான் முல்டர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

தென்னாபிரிக்கா 19 வயதிற்குட்பட்டோர் அணியின் ஆரம்ப இணைப்பாட்ட ஜோடி ரிகார்டோ வன்கொன்சலஸ் மற்றும் ஜோஷுவா வன் ஹீர்டன் 69 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஜோஷுவா வன் ஹீர்டன் ஜெயவிக்ரமவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 22 ஓட்டங்களைப் பெற்றிருக்கும் போது தனது விக்கட்டைப் பறிகொடுத்தார். மேலும் சம்மு அஷான் ரிகார்டோ வன்கொன்சலஸ்சினை 56 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ய ஜெயவிக்ரம, ஜெரோம் பொஸ்சை 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். தென்னாபிரிக்கா 19 வயதிற்குட்பட்டோர் அணி அவ்வேளையில் 98 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்த நிலையில் காணப்பட்டது.

எனினும் கடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ரெய்னார்ட் வன் டொண்டர் மற்றும் தென்னாபிரிக்க அணித்தலைவர் முல்டர் இருவரும் சேர்ந்து 4ஆவது விக்கட் இணைப்பாட்டமாக 84 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர். மீண்டும் சிறப்பான பந்து வீச்சை வெளிக்காட்டிய ஜெயவிக்ரம வான் டொண்டரை  48 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் அவரது விக்கட்டைக் கைப்பற்றினார். ரிச்மன்ட் கல்லூரியின் திலங்க உதிஷான் முல்டரின் விக்கட்டை  66 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் பதம் பார்த்ததன்  மூலம் தனது முதலாவது விக்கட்டைக் கைப்பற்றினார்.

ஜெஸ் கிறிஸ்டன்சன் இறுதி விக்கட்டுகள் இழக்கப்பட முன்பு வேகமாக ஆடி ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தாலும் டேனியல் மூன்று விக்கட்டுகளைக் கைப்பற்றி தென்னாபிரிக்க அணியை மட்டுப்படுத்தினார்.  கிறிஸ்டன்சனின் அதிரடி ஆட்டம் அவருக்கு 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கலாக 95 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தது.

தென்னாபிரிக்க அணி 295 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுகளை இழந்திருந்த வேளையில் தனது ஆட்டத்தை இடைநிறுத்தியது. இன்றைய நாளுக்கான இறுதி 5 ஓவர்களை இலங்கை அணி விக்கட்டுகளை இழக்காது சமாளித்தது. பதும் நிசங்க மற்றும் ஷனோகீத் சண்முகநாதன் இருவரும் தமது விக்கட்டுகளைப் பறிகொடுக்காது விளையாடினர்.  

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை (4ஆம் திகதி) நடைபெறும்.

தென்னாபிரிக்கா 19 வயதிற்குட்பட்டோர் – 84.1 ஓவர்களில் 295/8 ஓட்டங்கள். ரிகார்டோ வன்னிகொன்சாலஸ் 56, ஜோஷுவா வன் ஹீர்டன் 22, ரெய்னார்ட் வன் டொன்டர் 48, வியான் முல்டர் 66, ஜெஸ் கிறிஸ்டியன்சன் 67, ஜெஹான் டேனியல் 3/53, பிரவீன் ஜெயவிக்ரம 3/95.

இலங்கை 19 வயதிற்குட்பட்டோர் – 5 ஓவர்களில் 7/0 ஓட்டங்கள்.