அதிரடிக்கு தயாராகும் 84ஆவது புனிதர்களின் சமர்

199

கொழும்பின் இரு பிரதான கத்தோலிக்க பாடசாலைகளான புனித ஜோசப் கல்லூரியும், புனித பேதுரு கல்லூரியும் பங்குபெறும் மற்றுமொரு வருடாந்த கிரிக்கெட் தொடரான 84ஆவதுபுனிதர்களின் சமர்‘ (Battle Of the  Saints) எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் கொழும்பு  பி. சரவணமுத்து கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விரு முன்னணி பாடசாலைகளின் ஸ்தாபகரான அருட்தந்தை மொரிஸ் லே கொக் ஞாபகார்த்த கிண்ணத்திற்காக நடைபெற்றுவரும் இந்த மோதலின் அங்குரார்ப்பண போட்டி, 1933ஆம் ஆண்டு நடைபெற்றதுடன், அதில் ரொபேர்ட் பெர்னாண்டோ தலைமையிலான புனித ஜோசப் கல்லூரி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.

மெதிவ்ஸின் மீள்வருகைக்காக காத்திருக்கும் தெரிவுக் குழு உறுப்பினர்கள்

உபாதைக்குள்ளான இலங்கை அணி…

இவ்விரு பாடசாலைகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற 83 கிரிக்கெட் சமர்களில் புனித ஜோசப் கல்லூரி 12 தடவைகளும், புனித பேதுரு கல்லூரி 10 தடவைகளும் கிண்ணத்தை சுவீகரித்திருந்ததுடன், 61 போட்டிகள் சமநிலையில் நிறைவுக்கு வந்தன.

அருட்தந்தை மொரிஸ் லே கொக் ஞாபகர்த்த கிண்ணம், கடந்த 2016ஆம் ஆண்டு வினு மொஹொட்டியின் தலைமயில் போட்டியை வெற்றியீட்டிய புனித பேதுரு கல்லூரியின் கரங்களில் உள்ளது. அதேநேரம், புனித ஜோசப் கல்லூரி, இறுதியாக 2008ஆம் ஆண்டு அணித் தலைவர் ருவந்த பெர்னாண்டோபுள்ளேயின் தலைமையில் கிண்ணத்தை கைப்பற்றியிருந்தது.

இதேநேரம் புனிதர்களின் சமர் வரலாற்றில் புனித ஜோசப் கல்லூரி 1982ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 382 ஓட்டங்களையும், புனித பேதுரு கல்லூரி 1938ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 345 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பதிவுசெய்திருந்தன. அதேபோல 1972ஆம் ஆண்டு புனித பேதுரு கல்லூரி 56 ஓட்டங்களுக்கும், 1972ஆம் ஆண்டு புனித ஜோசப் கல்லூரி 36 ஓட்டங்களுக்கும் சுருண்டு தமது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையையும் பதிவுசெய்திருந்தன.

அத்துடன், 1954ஆம் ஆண்டு நடைபெற்ற புனிதர்களின் சமரில் புனித பேதுரு கல்லூரியின் கிளைவ் இன்மென், ஒரு இன்னிங்ஸில் வீரரொருவர் பெற்றுக்கொண்ட அதிபட்ச ஓட்டமாக 204 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அதேநேரம், 1997ஆம் ஆண்டு நடைபெற்ற புனிதர்களின் சமரில் புனித ஜோசப் கல்லூரியின் ஷெனால் வர்ணகுல 9 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதே சிறந்த பந்துவீச்சுப் பிரதியாகவும் அமைந்தது.

குறித்த இரண்டு பாடசாலைகளும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய கிரிக்கட் வீரர்கள் பலரை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அஞ்செலோ மெதிவ்ஸ், சமிந்த வாஸ், திசர பெரேரா, திமுத் கருணாரத்ன, ஆஷ்லி டி சில்வா மற்றும் மைக்கல் வெண்டோர்ட் ஆகியோர் புனித ஜோசப் கல்லூரியை சேர்ந்தவர்களாவர்.  

அதேநேரம் ரோய் டயஸ், ரொமேஷ் ரத்னாயக்க, தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர் ரசல் ஆர்னல்ட், வினோதன் ஜோன், அமல் சில்வா, கௌஷல் லொக்குஆராச்சி, மிலிந்த வர்னபுற மற்றும் அஞ்சலோ பெரேரா ஆகியோர் புனித பேதுரு கல்லூரியில் இருந்து தேசிய அணிக்கு வந்தவர்களாவர்.       


புனித ஜோசப் கல்லூரி

கடந்த வருடம் நடைபெற்ற புனிதர்களின் சமரில் நட்சத்திரமாக ஜொலித்த இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் துணைத் தலைவரான ஜெஹான் டேனியல், இம்முறை போட்டித் தொடரில் புனித ஜோசப் கல்லூரி அணிக்கு தலைமை தாங்கவுள்ளார். அண்மைக்காலமாக தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகின்ற ஜெஹான் டேனியலுக்கு இம்முறை பாடசாலை பருவகாலத்தில் 6 போட்டிகளில் மாத்திரமே விளையாட முடிந்ததுடன், இதுவரை நடைபெற்ற போட்டிகளில் 50 சதவீத துடுப்பாட்ட சராசரியுடன் 400 ஓட்டங்களையும் குவித்திருந்தார்.

எனவே, இலங்கை தேசிய அணிக்காக எதிர்காலத்தில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற ஜெஹான், தனது பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடவுள்ள இறுதி மாபெரும் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இம்முறை பாடசாலை பருவகாலத்தில் அக்கல்லூரிக்காக 3 சதங்கள் மற்றும் 6 அரைச்சதங்களுடன் 1,000 ஓட்டங்களைக் குவித்த முதல் வீரராக வலம்வந்துகொண்டிருக்கின்ற இடதுகை துடுப்பாட்ட வீரரான ரெவான் கெலி மற்றும் 700 ஓட்டங்களைக் குவித்துள்ள அக்கல்லூரியின் உதவித் தலைவரான நிபுன் சுமனசிங்க ஆகியோரின் பங்குபற்றலானது துடுப்பாட்ட வரிசையை மேலும் வலுப்படுத்தவுள்ளது.

அதேபோல, 15 வயதுடைய இடதுகை சுழற்பந்துவீச்சாளரான துனித் வெல்லலகேவின் பங்களிப்பும் இம்முறை போட்டித் தொடரில் ஜோசப் கல்லூரிக்கு பெரும் எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. பந்துவீச்சைப் போல துடுப்பாட்டத்திலும் அசத்தி வருகின்ற துனித், இம்முறை பருவகாலத்தில் 70 விக்கெட்டுக்களையும், 550 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

இந்நிலையில், ஜோசப் அணிக்காக பின்வரிசை வீரராகக் களமிறங்கி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து அதிரடியாக துடுப்பெடுத்தாடுகின்ற சகலதுறை ஆட்டக்காரர் லக்ஷான் கமகேவின் பங்களிப்பும் இம்முறை போட்டித் தொடரில் முக்கிய இடத்தை வகிக்கவுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த பருவகாலத்தில் 77.44 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 730 ஓட்டங்களைப் குவித்துள்ள லக்ஷான் கமகே, 43 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Photos: St. Joseph’s College Cricket Team 2018 Preview

Photos of St. Joseph’s College Cricket Team 2018

இதேவேளை, இம்முறை பாடசாலைகள் கிரிக்கெட் போட்டித் தொடரில் 5 விக்கெட்டுக்கள் வீதம் நான்கு தடவைகளும், 10 விக்கெட்டுக்கள் வீதம் இரண்டு தடவைகளும் கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளர் அஷயின் டேனியல் மற்றும் 30 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ள மற்றுமொரு சுழற்பந்து வீச்சாளரான மிரங்க விக்ரமகேவும் இம்முறை புனிதர்களின் சமரில் புனித ஜோசப் கல்லூரிக்காக பிரகாசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

2017/2018 பருவகலாம்

  • போட்டிகள் – 18
  • வெற்றி – 5
  • முதல் இன்னிங்ஸ் வெற்றி – 9
  • சமநிலை – 0
  • தோல்வி   – 0
  • முதல் இன்னிங்ஸ் தோல்வி –  4

புனித ஜோசப் கல்லூரி அணி  

ரெவான் கெலி, ஜொஹான்னி டி சில்வா, நிபுன் சுமனசிங்க, ஜெஹான் பெர்னாண்டோபுள்ளே, ஜெஹான் டேனியல்(அணித் தலைவர்), தினெத் ஜயகொடி, சச்சிந்த ரவிந்து மஹிந்தசிங்க, லக்ஷான் கமகே, துனித் வெல்லலகே, மிரங்க விக்ரமகே, அஷய்ன் டேனியல்


புனித பேதுரு கல்லூரி

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக விளையாடிய ஆரம்பத் துடுப்பாட்ட வீரரரும், வேகப்பந்து வீச்சாளருமான சன்தூஷ் குணதிலக இம்முறை புனிதர்களின் சமரில் புனித பேதுரு கல்லூரியை வழிநடாத்தவுள்ளார்.

அண்மைக்காலமாக இலங்கை 19 வயதுக்குட்பட்ட தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகின்ற சன்தூஷ் குணதிலகவுக்கும் இம்முறை பாடசாலை பருவகாலத்தில் பெரும்பாலான போட்டிகளில் விளையாட முடியாது போனது. எனினும், இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அவர் 675 ஓட்டங்களுடன் 20 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.

எனவே, பலம்பொருந்திய புனித ஜோசப் கல்லூரிக்கு எதிராக சன்தூஷ் குணதிலகவின் தலைமைத்துவம் சாதகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதில் இம்முறை பாடசாலை பருவகாலத்தில் 4 அரைச்சதங்களுடன் 750 ஓட்டங்களைக் குவித்துள்ள அக்கல்லூரியின் விக்கெட் காப்பாளரும், மத்திய வரிசை வீரருமான சாலித் பெர்னாண்டோ மற்றும் 6 அரைச்சதங்களுடன் 700 ஓட்டங்களைக் குவித்துள்ள இடதுகை துடுப்பாட்ட வீரரான ரன்மித் ஜயசேன ஆகியோரும் இம்முறை புனிதர்களின் சமரில் புனித பேதுரு கல்லூரியின் துடுப்பாட்ட வரிசையை பலப்படுத்துவதற்கு தயாராக உள்ளனர்.

அதேநேரம், அவ்வணியின் இளம் துடுப்பாட்ட வீரர்களான ஷெனொன் பெர்னாண்டோ (649), சுலக்ஷன பெர்னாண்டோ(488) மற்றும் ப்ரபஷர ஹேரத்(301) ஆகியோர் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களாக அவ்வணியில் இடம்பெற்றுள்ளமை அக்கல்லூரியின் துடுப்பாட்ட வரிசைக்கு மேலும் வலுச்சேர்க்கவுள்ளது.  

இந்நிலையில், புனித பேதுரு கல்லூரியின் சுழற்பந்து இரட்டையர்களாக வர்ணிக்கப்படுகின்ற அவ்வணியின் உதவித் தலைவரான மிப்லால் அமீன் மற்றும் சச்சின் சில்வா ஆகியோரின் அனுபவம் எதிரணிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேநேரம், புனித பேதுரு கல்லூரிக்காக தொடர்ச்சியாக இரண்டு பருவகாலங்களில் 100 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீரராக மிப்லால் அமீன் அண்மையில் புதிய சாதனையும் படைத்திருந்தார்.

அதேபோல, ஷாவான் பெரேரா மற்றும் தாரிக் சபூர் ஆகியோர் வேகப்பந்துவீச்சு துறையில் அணியை பலப்படுத்துவதற்காக இம்முறை போட்டித் தொடரில் களமிறங்கவுள்ளனர்.

2017/2018 பருவகலாம்

  • போட்டிகள் – 20
  • வெற்றி – 5
  • முதல் இன்னிங்ஸ் வெற்றி – 7
  • சமநிலை – 1
  • தோல்வி – 3
  • முதல் இன்னிங்ஸ் தோல்வி – 4

புனித பேதுரு கல்லூரி அணி  

சன்தூஷ் குணதிலக(அணித் தலைவர்), ஷெனொன் பெர்னாண்டோ, சுலக்ஷன பெர்னாண்டோ, சாலித் பெர்னாண்டோ, ரன்மித் ஜயசேன, நிபுனக பொன்சேகா, ப்ரபஷர ஹேரத், சச்சின் சில்வா, மிப்லால் அமீன், கனிஷ்க மதுவன்த, தாரிக் கபூர்

இறுதியாக,

மோதலில் 60 ஓவர்களுக்கு முதல் இன்னிங்ஸ் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இரண்டு நாட்கள் கொண்ட இப்போட்டியில் மொத்தமாக 210 ஓவர்கள் பந்துவீசப்படவுள்ளது. அதேநேரம், போட்டி இடம்பெறும் ஆடுகளம் வேகப்பந்துவீச்சைப் போல சுழற்பந்துவீச்சுக்கும் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Photos: St. Peter’s College Cricket Team 2018 Preview

Photos of St. Peter’s College Cricket Team 2018

எனவே, இவ்விரு பாடசாலைகளும் இம்முறை பருவகாலத்தில் பங்குபற்றிய போட்டிகளின் முடிவுகளையும், வீரர்களின் திறமைகளையும் ஒப்பிடும்போது இம்முறை புனிதர்களின் சமர் விறுவிறுப்புக்கும், எதிர்பார்ப்புக்கும் மத்தியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் 2ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் கொழும்பு பி. சரவணமுத்து கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள 84ஆவது புனிதர்களின் சமரை Dialog Television தொலைக்காட்சி வாயிலாகவும், Dialog Television  Chennal 01 மற்றும் Dialog My Tv வாயிலாகவும் நேரடியாக கண்டுகளிக்க முடியும்.

அத்துடன், இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான www.thepapare.com  வாயிலாக போட்டிகளின் நேரடி அஞ்சல், புகைப்படங்கள், அறிக்கைகள், விசேட கட்டுரைகள் என்பவற்றையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிலையில், இலங்கை முதல்தர தொலைதொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டா பி.எல்.சி. தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் புனித பேதுரு மற்றும் புனித ஜோசப் கல்லூரிகளுக்கு இடையிலான புனிதர்களின் சமருக்கு அனுசரணை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.