சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கிரிக்கெட் முடிவுகள்: செப் 24

3687
Cric-Sep-24

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நேற்று இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 1ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆவது நாள் ஆட்டமும், பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் 2ஆவது டி20 போட்டியும் நடைபெற்றது.

இந்தியா எதிர் நியூசிலாந்து : 1ஆவது டெஸ்ட் போட்டி

இந்தியாநியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 1ஆவது  டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்திய அணி முதல் இனிங்ஸில் 318 ஓட்டங்களைப் பெற்றது.

பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணி அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் அபார பந்து வீச்சால் 262 ஓட்டங்களோடு சுருண்டது. ஜடேஜா ஐந்து விக்கெட்டுகளையும், அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். முதல் இனிங்ஸில் நியூசிலாந்தை விட இந்தியா 56 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது.

அந்த ஓட்டங்களோடு  2ஆவது இனிங்ஸை இந்திய அணி ஆரம்பித்தது. இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக லோகேஷ் ராகுல், முரளி விஜய் களம் இறங்கினார்கள்.

லோகேஷ் ராகுல் அதிரடியாக விளையாட முரளி விஜய் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார். 3ஆவது நாள் தேநீர் இடைவேளைக்கு முன் ராகுல் 38 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்து வெளியேறினார். இவர் முரளி விஜய் உடன் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 52 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றார்.

அதன்பின் முரளி விஜய் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். தேநீர் இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். 2.2 ஓவரில் 30 ஓட்டங்களை சேர்த்தனர். பின்னர் விக்கெட்டை காப்பாற்றும் வகையில் நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்தார்கள். அணியின் ஓட்டங்கள் 115 ஆக  இருக்கும் போது முரளி விஜய் அரைச்சதம் அடித்தார்.

மறுமுனையில் விளையாடிய புஜாரா நேற்றைய 3ஆவது நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரின் 3ஆவது பந்தில் ஒரு ஓட்டத்தை பெற்றதன்  மூலம் அரைச்சதம் அடித்தார்.

இறுதியில் 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்று இருந்தது. முரளி விஜய் 64 ஓட்டங்களோடும், புஜாரா 50 ஓட்டங்களோடும் களத்தில் இருந்தனர். தற்போது வரை இந்தியா 215 ஓட்டங்கள்  முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 318/10

முரளி விஜே 65, புஜாரா 62, ஜடேஜா 42*, ரவிஷந்திரன் அஷ்வின் 40

சான்ட்னெர் 94/3, போல்ட் 67/3

நியூசிலாந்து – 262/10

கேன் வில்லியம்சன் 75, டொம் லெதம் 58, லூக் ரொஞ்சி 38

ரவீந்திர ஜடேஜா 73/5, ரவி அஷ்வின் 93/4

இந்தியா – 159/1

முரளி விஜே 64*, புஜாரா 50*, லோகேஷ் ராகுல் 38

இஷ் சோதி 29/1

இந்திய அணி 215 ஓட்டங்கள் முன்னிலையில்


பாகிஸ்தான்மேற்கிந்திய தீவுகள் : 2ஆவது டி20 போட்டி

பாகிஸ்தான்மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நேற்று டுபாய் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் ஏற்கனவே நேற்று முன்தினம்(23) நடைபெற்ற 1ஆவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இருந்தது.

இதனால் தொடர் தோல்வியை தவிர்க்க கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் உலக டி20 சம்பியன் அணியான மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கார்லோஸ் பரத்வயிட் முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தடுமாறு அழைப்பு விடுத்தார்.

அழைப்பை ஏற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பாக தலைவர் சர்ப்ராஸ் அஹமத் ஆட்டம் இழக்காமல் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்களையும், காலித் லத்தீப் 40 ஓட்டங்களையும், சுஹைப் மலிக் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் தரப்பில் பந்து வீச்சில் டுவையின் பிராவோ, கார்லோஸ் ப்ரத்வயிட் மற்றும் சாமுவேல்  பத்ரி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்கள்.

டுபாய் சர்வதேச மைதானத்தை பொறுத்த வரையில் முதலில் ஆடிய அணிகள் 150க்கும் அதிகமான ஓட்டங்களைப் பெற்ற போட்டிகளில் 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதோடு ஒரு போட்டியில் தான் தோல்வியை தழுவி உள்ளது என்று காணப்பட்டது.

இந்த நிலையில் 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணி 16 ஓட்டங்களால் இந்த 2ஆவது டி20 போட்டியை வெற்றி கொண்டதோடு தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்று தொடரையும் வென்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் இறுதி நேரத்தில் வந்த சுனில் நரேன் 30 ஓட்டங்களையும், எண்டர் பெலச்சர் 29 ஓட்டங்களையும், கிரோன் போலார்ட் மற்றும் டுவையின் பிராவோ ஆகியோர் தலா 18 ஓட்டங்களையும் பெற்றனர். பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் சுஹைல் தன்வீர் மற்றும் ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை தம்மிடையே பங்கு போட்டனர்.

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்ராஸ் அஹமத் தெரிவு செய்யப்பட்டார். இந்த 2 அணிகளுக்கும் இடையிலான 3ஆவதும் இறுதியுமான டி20 போட்டி எதிர்வரும் செவ்வாய்க் கிழமை(27) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 160/4 (20)

சர்ப்ராஸ் அஹமத் 46*, காலித் லத்தீப் 40, சுஹைப் மலிக் 37

டுவையின் பிராவோ 38/1, கார்லோஸ் ப்ரத்வயிட் 24/1, சாமுவேல்  பத்ரி 24/1

மேற்கிந்திய தீவுகள் – 144/9 (20)

சுனில் நரேன் 30, எண்டர் பெலச்சர் 29, கிரோன் போலார்ட் 18, டுவையின் பிராவோ 18

சுஹைல் தன்வீர் 13/3,  ஹசன் அலி 49/3

பாகிஸ்தான் அணி 16 ஓட்டங்களால் வெற்றி