சிறந்த தேசிய வீரர்களை உருவாக்கும் நோக்கில் கொழும்பில் புதிய கால்பந்து அகடமி

190

எதிர்காலத்தில் சிறந்த கால்பந்து வீரர்களை உருவாக்கும் நோக்குடன் இலங்கையில் “மன்ஷஸ்டர் கால்பந்து அகடமி” என்ற பெயரில் புதிய ஒரு கால்பந்து பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு சிறந்த வீரர்களை தயார்படுத்தும் பிரதான குறிக்கோலுடன் செயற்படவுள்ள இந்த புதிய கால்பந்து அகடமியின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பு ரேஸ் கோர்ஸ் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

ஜாவா லேனின் அதிரடியில் வீழ்ந்த சிறைச்சாலை அணி

இலங்கை தேசிய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஒகஸ்டின் ஜோர்ஜின் தலைமையில் இயங்கவுள்ள இந்த அகடமிக்கு, இலங்கை கால்பந்தில் சிரேஷ்ட நபர்களில் ஒருவராக உள்ள பகீர் அலி, பிரதான பயிற்றுவிப்பாளராகவும் தொழில்நுட்ப இயக்குனராகவும் செயற்படவுள்ளார்.

அது தவிர, இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய முக்கிய வீரர்களான அன்டன் வெம்பக், கசுன் ஜயசுன்தர, மொஹமட் இஸ்ஸதீன், மொஹமட் அஸ்வர் உட்பட பல முக்கிய வீரர்களும் இந்த அகடமியின் பயிற்றுவிப்பாளர்களாக செயற்படவுள்ளனர்.

தவிர மகளிர் பகுதியை சிறப்பிக்கும் வகையில், மகளிர் தேசிய அணி வீராங்கனை உபேகா வனிகசேகர பெண்களுக்கான பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.

ஆரம்பிக்கப்படவுள்ள மன்ஷஸ்டர் கால்பந்து அகடமி குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று கொழும்பு 7இல் அமைந்துள்ள கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட இலங்கை கால்பந்து சம்மேளத்தின் முன்னாள் தலைவர் ரஞ்சித் ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், ”கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் 3 கால்பந்து பயிற்சி நிலையங்களை ஆரம்பிக்க வேண்டிய தேவை இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு இருந்தது. எனினும் அவை ஆரம்பிக்கப்படவில்லை. இலங்கையின் கால்பந்து வீழ்ச்சியை நோக்கி செல்லும் விதத்திலேயே உள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில், தற்பொழுது இவர்களால் ஆரம்பிக்கப்படும் இந்த பயிற்சி நிலையம் எதிர்கால வீரர்களுக்கு சிறந்த பயனைப் பெற்றுக் கொடுக்கும். இதில் பிரதான பயிற்றுவிப்பாளராக உள்ள அனுபவம் மிக்க ஒருவரான பகீர் அலி மற்றும் தேசிய அணியை பிரகாசப்படுத்திய முன்னாள் வீரர்கள் பலரும் இணைந்து பயிற்சி வழங்குகின்றமை நிச்சயம் சிறந்த பயனை பெற்றுக்கொடுக்கும்” என்று தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில், மன்ஷஸ்டர் கால்பந்து அகடமியின் உத்தியோகபூர்வ சமூக வலைதளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனை பயிற்றுவிப்பாளர் பகீர் அலியின் துணைவியார் ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஒகஸ்டின் ஜோர்ஜ், ”நாம் நீண்ட நாட்கள் கனவுடன் இதனை ஆரம்பிக்கின்றோம். இலங்கையில் கால்பந்தில் சிறப்பித்துள்ள பலரைக் கொண்டு நடாத்தப்படும் இந்த அகடமிக்கு இதுவரையில் 300க்கும் அதிகமானவர்கள் தமது பதிவை மேற்கொண்டுள்ளனர். எதிர்காலத்தில் இதனை கொழும்பில் மாத்திரம் இன்றி தேசிய மட்டத்தில் விரிவு படுத்த உள்ளோம்” என்றார். 

டில்ஷானின் ஹட்ரிக் கோலுடன் சன்சைனை வீழ்த்திய ஓல்ட் பென்ஸ்

இதன்போது ”எதிர்காலத்தில் புதிய கழகம் ஒன்றை ஆரம்பிக்க ஏதாவது திட்டம் உள்ளதா?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜோர்ஜ், ”ஆம், எமது அடுத்த கட்டமாக சில வருடங்களில் சிறந்த வீரர்களுடனான  அணியைக் கொண்ட ஒரு கழகத்தை நாம் ஆரம்பிப்போம். அதன்மூலம் தேசிய ரீதியில் மிகவும் திறன்மிக்க வீரர்களை உங்களால் காணலாம்” எனப் பதிலளித்தார்.

எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள அகடமி ஆரம்ப நிகழ்விற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா மற்றும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

இது தவிர, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா, பொதுச் செயலாளர் பாலேந்திரன் மற்றும் சம்மேளனத்தின் ஊடகப் பரிவுத் தலைவர் ரஞ்சித் ரொட்ரிகோ ஆகியோரும் அதிதிகளாகப் பங்குகொள்ள உள்ளனர்.