ஜாவா லேனின் அதிரடியில் வீழ்ந்த சிறைச்சாலை அணி

99

சிட் கால்பந்து லீக் மைதானத்தில் இடம்பெற்ற ஜாவா லேன் மற்றும் சிறைச்சாலை விளையாட்டுக் கழக அணிகளுக்கு இடையிலான FA கிண்ணத்தின் மூன்றாம் சுற்றுக்கான போட்டியில் ரிஸ்கான் மற்றும் மாலகவின் அதிரடி கோல்களினால் ஜாவா லேன் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.

இதற்கு முன்னைய சுற்றில் கிளிநொச்சி லீக்கின் ஜகமீட்பர் அணியை மிகவும் விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டது சிறைச்சாலை விளையாட்டுக் கழக அணி. அந்த வெற்றியுடன், இந்த பருவகால FA கிண்ணத்தில் முதல் போட்டியாக விளையாடும் ஜாவா லேன் அணியை சிறைச்சாலை அணி சந்தித்தது.

FA கிண்ணத்தின் இரண்டாம் சுற்று முடிவுகள்

டில்ஷானின் ஹட்ரிக் கோலுடன் சன்சைனை வீழ்த்திய ஓல்ட் பென்ஸ்

காகில்ஸ் புட் சிடி FA கிண்ணத்தின் இரண்டாம் சுற்றில் சன்சைன் (திவுலபிடிய கால்பந்து லீக்) அணியுடனான போட்டியை ஷமோத் டில்ஷானின் ஹட்ரிக் கோலுடன் 3-1 என்ற…

இந்தப் போட்டி ஆரம்பமாகியது முதல் ஜாவா லேன் வீரர்கள் தொடர்ச்சியாக பல ப்ரீ கிக் வாய்ப்புக்களைப் பெற்றனர். எனினும் அவர்களால் அவற்றின் மூலம் சாதகமான நிறைவுகள் மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக முதல் பாதியின் சிறந்த ஒரு வாய்ப்பாக ரிஸ்கான் மூலம் ஜாவா லேனுக்கு முதல் கோல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில், அவர் உதைந்த பந்து கோல் கம்பங்களுக்கு வெளியால் சென்றது.

எனினும் அதற்கு பதில் கொடுக்கும் விதமாக, இளம் வீரர் நவீன் ஜூட் மூலம் வழங்கப்பட்ட பந்தை ரிஸ்கான் சிறந்த முறையில் கோலுக்குள் செலுத்தி, அணியை முதல் பாதியிலேயே முன்னிலைப்படுத்தினார்.

முதல் பாதி: ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் 01 – 00 சிறைச்சாலை விளையாட்டுக் கழகம்

இரண்டாவது பாதி ஆரம்பமாகி சில நிமிடங்களிலேயே சிறைச்சாலை விளையாட்டுக் கழகத்தின் பின்கள வீரரினால், ஜாவா லேன் வீரர் நவீன் ஜூட் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டார். பெனால்டி எல்லையில் வைத்து அவர் வீழ்த்தப்பட்டமையினால், ஜாவா லேனுக்கு பெனால்டி வாய்ப்பொன்று வழங்கப்பட்டது.

எனினும், அந்த பெனால்டி உதையைப் பெற்ற அப்துல்லா உதைந்த பந்து கம்பங்களுக்கு வெளியால் சென்றது. எனவே, அவர்களுக்கான இரண்டாவது கோல் வாய்ப்பு கைநழுவின.

பின்னர் இரு அணி வீரர்களுக்கும் இடையில் மோதல்களுடனான ஆட்டம் நடைபெற, ஜாவா லேன் ரிசிகர்களது ஆக்ரோசமான கோஷங்களுக்கு மத்தியில் இரண்டாவது பாதி நடைபெற்றது.

இந்நிலையிலும் ஜாவா லேன் அணிக்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே கிடைக்கப்பெற்றன. நவீன், அலீம், ரிஸ்கான் என பலருக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் அவை கோல்களாக மாற்றம் பெறவில்லை.

எனினும், 77ஆவது நிமிடத்தில் ஜாவா லேனின் மாலக பெரேராவினால் பெறப்பட்ட கோல், சூடு பிடித்திருந்த ஆட்டத்தில் சிறைச்சாலைத் தரப்பினரின் முயற்சிகளுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. கோலுக்கு வலது புறத்தில் தனக்கு கிடைத்த பந்தை வேகமாக எடுத்து வந்த மாலக இறுதியாக பந்தை உதைய எதிரணியின் கோல்காப்பாளரைத் திகைப்பூட்டும் வகையில் கம்பங்களுக்குள் பந்து சென்றது.

மறுமனையில் சிறைச்சாலை அணியினரின் முயற்சிகள் இறுதிவரையில் சிறந்த நிறைவுகள் இன்றியே இருக்க, போட்டி முடிவு பெற்றது. இந்த வெற்றியுடன் ஜாவா லேன் அணி FA கிண்ணத்தின் இறுதி 32 அணிகள் பங்குகொள்ளும் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.

முழு நேரம்: ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் 02 – 00 சிறைச்சாலை விளையாட்டுக் கழகம்

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – ப்ரபாத் ஜயசிறி (சிறைச்சாலை விளையாட்டுக் கழகம்)

கோல் பெற்றவர்கள்

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் – மொஹமட் ரிஸ்கான் 44’, மாலக பெரேரா 77’

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க